சுவஷ்திக்காவிற்காக

அம்மா.... அப்பா.... எங்கம்மா...? என்று பிஞ்சு விரல்கள் அவளது கன்னத்தை தட்டித் தட்டிக் கேட்டது. அவளால் பதில் சொல்ல இயலவில்லை.

தனது இரண்டரை வயதுக் குழந்தை மிகவும் கெட்டிக்காரி என்று பலரும் புகழ்கிறார்கள்.அதனால் தானோ என்னவோ, அப்பா எங்கே என்று சரியாக ஒரு மாதம் கழித்துக் கேட்கிறாள். ஒருகால், நானே சொல்வேன் என்றிருந்து விட்டாளோ என்னவோ. இரண்டரை வயதுக் குட்டிக்கு இவ்வளவு தெளிவா?வினாஷினியால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அப்பா இல்லை மா.... என்றாள் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு.

இல்லையா....எங்கப் போனாரு.... என்று ரகசியக் குரலில் கேட்டுச் சிரித்தாள் அழகிய சுவாஷ்திக்கா.
தனது குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு முதுகில் மெல்லமாய்த் தட்டினாள் வினாஷினி. தூங்க வைத்து விட வேண்டும் இந்தக் குட்டியை இல்லையேல் கேள்வி கேட்டு ஆளைக் கவித்திடுவாள்.

சுவாஷ்திகாவின் முதுகில் அவளது அம்மாவின் மெல்லிய தட்டுகள் அவளின் கண்களைச் சொருகியன. சுவஷ்த்திகா குட்டி அப்படியே தூங்கியும் போனாள்.

குழந்தையை அலாக்காய்த் தூக்கி அப்படியே கட்டிலில் கிடத்திவிட்டு குளித்து ஈரத் தலையில் துண்டுடன் மொட்டை மாடியில் இருந்த ஊஞ்சலில் வந்தமர்ந்தாள் வினாஷினி.

தனது வாழ்க்கை ஏன் இப்படி ஆனது ? காரணம் தான் என்ன ? யாரைக் குறை சொல்வது ? எங்கே தவறு ? இப்படிப் பல கேள்விகள் அவளது எண்ணத்தில் உருண்டோடியன. கண்களை மூடி லேசாய் அப்படியே ஊஞ்சலில் சாய்ந்து மெல்லமாய் ஊஞ்சலை ஆட்டினாள். அவளது எண்ணங்கள் கடந்த இரண்டு வருடத்தை முன்னோக்கி ஓடியது.
வினாஷினி அவளது பாட்டி வீட்டில் செல்லமாய் வளர்ந்தவள். பாட்டி வீட்டின் இளவரிசியாய் இருந்து படிவம் 5 முடித்து அருகில் இருக்கும் தொழிற்சாலை ஒன்றில் சாதாரண தொழிலாளியாகவே வேலை செய்தாள்.

படிப்பில் சுமார் ரகம் தான். மேற்கொண்டு படிப்பைத் தொடரவும் அவளுக்கு விருப்பம் இல்லை. படிப்பின் அவசியமும் அவள் அறியவில்லை. அப்போதைக்கு அவளுக்கு தெரிந்ததெல்லாம் ஒற்றுமையான குடும்பம், சொற்ப சம்பளம், அன்பைப் பொழியும் குடும்ப உறவுகள் மட்டுமே.

காலப் போக்கில் ஒரு அறிமுகமில்லாத அறிமுகம் கிடைத்தது அவளது கைத்தொலைபேசி வழி மாறன் என்ற பெயரில். பொழுதொரு வண்ணமாக இருவரும் நட்பை காதலாக்கி அன்பைப் பரிமாறினர்.
ஒரு சில மாதங்களில் வீட்டின் செல்லப் பிள்ளையின் நடவடிக்கைகள் ஒரு விதமாக இருப்பதைக் கண்ணுற்ற பெரியவர்கள் அவளை மடக்கிப் பிடித்ததில் எந்த ஒரு ஒளிவு மறைவுமின்றி சொல்லிவிட்டாள் அவளது காதல் கதையை.

சரி போனால் போகட்டும். ஏதோ ஆசைப்பட்டு விட்டாள் வீட்டின் இளவரசி என்று பையனைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினார்கள். மாறன் பினாங்கில் பிறந்து வளர்ந்தவன். சிங்கப்பூரில் 'ஹோட்டல்' ஒன்றில் நல்ல உயர் பதவியில் இருந்தான். இருந்த போதும் மலாக்காவில் பிறந்து வளர்ந்து ஒரு நிமிடம் கூட யாரையும் பிரியாத செல்லப் பொண்ணை எப்படி பினாங்கில் கட்டிக் கொடுப்பது என்று அனைவரது மனத்திலும் ஒரு சின்ன வருத்தம் இருக்கவே செய்தது.

இதற்கிடையில்,திடீரென்று ஒருநாள் வினாஷினியின் பெரியம்மாவிற்கு மயானக் காளி அருள் தந்து மருள் வந்து விட்டது. வழக்கம் போல் பெரியவர்கள் தங்களின் பிரச்சனைகளைச் சொல்லி பரிகாரம் கேட்டுச் சென்றனர். பிள்ளைகளோ மருள் வந்தவரின் காலில் விழுந்து வணங்கி மயானக் காளியின் ஆசிர்வாதம் பெற்றனர்.

வினாஷினியும் அந்த வரிசையில் நின்று விழுந்து வணங்கினாள். அப்போது அவளுக்கு 18 வயது. இன்னும் நன்றாக அவளுக்கு ஞாபகம் இருக்கிறது. மருளில் இருக்கும் அவளது பெரியம்மா வினாஷினியை பார்த்து மண்ணைக் கவ்வப் போகிறடி... மண்ணைக் கவ்வப் போகிற.... அவன் வேண்டாம்டி ! அவன் வேண்டாம்... நான் சொல்றேண்டி இன்னும் கொஞ்சம் காலம் பொறு துணை வரும். இது வேண்டாம்....! அதிர்ச்சி அடைந்தவளாய் அப்படியே நின்றாள் வினாஷினி.

குடும்பத்தார் அனைவரும் ஆத்தா சொல்லிட்டா அப்போ ஏதோ ஒன்னு தப்பா இருக்கு. அந்தப் பையன் வேண்டாம் என்று பேசி முடிவெடுத்தனர்.
பாவம் வினாஷினி. அவளை யாரும் ஒரு வார்த்தை கேட்கவில்லை. சோகக் கடலில் மூழ்கியவளுக்கு ஆறுதல் சொல்லக் கூட நாதியின்றிப் போனது. பட்டினியாய்க் கிடந்தாள்.

உடல் இளைத்தாள்.வீட்டிலும் யாரிடமும் பேசாமல் தனிமையிலே மாறனை நினைத்து நித்தமும் அழுதே பொழுதை கழித்தாள்.

இவளது போக்கு அனைவரது மனதையும் மாற்றியது. பேசாமல் அவனையே கட்டி வைத்து விடுவோம். பட்டால் படட்டும். அப்போதுதான் புத்தி வரும் என்றனர் ஒரு பக்க உறவினர்.

மருள் வந்து சொல்வது எல்லாம் அப்படியே நடந்து உண்மையாகி விடாது; இளம் காதலர்களை பிரிக்க வேண்டாம் என்றது இன்னோர் பக்க உறவினர் கூட்டம். இறுதியில் மாறன் பினாங்கிலிருந்து தனது பெற்றோர்களுடன் வந்து வினாஷினியை முறைப்படி பெண் பார்த்து விட்டு சென்றான்.
பெண் பிள்ளை வாழ்க்கை கெட்டு விடக் கூடாது என்று நினைத்தார்களோ அல்லது இவளை எப்படியாவது கட்டாயமாக மாறனுக்கு கட்டி வைக்க கூடாது அது மயானக் காளியை அவமதிப்பதாகும் என்று எண்ணினார்களோ தெரியவில்லை.

மாறன் வந்து பெண் பார்த்து சென்ற பிறகு வினாஷினியை வேறு ஒரு மாப்பிள்ளைக்கு கட்டி வைக்க சொந்தத்தில் ஒருவனைப் பார்த்து வைத்திருந்தனர். அது அவளுக்கு தெரிய வரவே ஆத்திரத்திலும் ஆதங்கத்திலும் என்ன செய்வது என்று தெரியாமல் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி பினாங்கிற்கு சென்றாள்.
குடும்பத்தினருக்கு இவளது காரியம் பெரிய அவமானத்தை ஏற்படுத்தியது. பாட்டி வீட்டில் வளர்ந்ததால் தான் இவளது போக்கு இப்படி போனது என்று அக்கம் பக்கம் பேச, சுற்றத்தார்களும் அவல் அறைப்பதைப் போல் இவ்விஷயத்தை பேசியே அவள் சார்ந்தவர்களை மிகவும் வேதனைப் படுத்தினர்.

பினாங்கு சென்று வினாஷினியை அழைத்து வர சென்றவர்களுக்கு அவர்களுடன் இவள் வர மறுத்தது இன்னும் இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கியது. சமாதானம் பேச போன இடத்தில் அடி பிடி சண்டை வராமல் போனதுதான் மிச்சம். அவளை அங்கேயே தலை முழுகி வந்தனர் இவளது உறவினார்கள்.

யாரையும் பொருட்படுத்தாமல் மாறனோடு தனது வாழ்கையைத் தொடர ஆரம்பித்தாள் வினாஷினி. மாறனின் தங்கை கணவனும் சரி மாறனின் தம்பியும் சரி இருவரும் வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே சோம்பேறித்தனமாக இருந்து வந்தனர்.

அதுவும் மாறனின் தங்கை நிறைமாத கர்ப்பிணி. மாறனின் தம்பியின் மனைவி கூட பிரசவத்திற்கான நாட்களை விரலில் எண்ணிய படிதான் வயிற்றைத் தள்ளிக் கொண்டு நின்றாள். இவர்களைப் பார்க்கும் போது மதிப்போ நன்மரியாதையோ அவர்கள் மீது வினாஷினிக்கு துளி கூட வரவில்லை. என்ன கன்றாவியோ என்று தான் நினைக்கத் தோன்றியது.

இதுலிருந்து ஒன்று மட்டும் அவளுக்கு நன்றாய்ப் புரிந்தது. மாறன் உழைக்கும் சம்பளம்தான் இந்த வீட்டில் அனைவரது வயிற்றுப் பசியையும் போக்குகிறது. மாறனும் வேலை செய்யவில்லை என்றால் அதோ கதிதான் போல. இவ்வீட்டிற்கு வந்த முதல் நாள் தொடங்கி இன்று வரை வெறும் மொட்ட ரசமும் பொறித்த நெத்திலிக் கருவாடும் ஊறுகாயும் மட்டுமே இருக்கிறது.

நன்றாய் ராணி போல் சாப்பிட்டு வளர்ந்தவளுக்கு அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது அவளது தற்போதைய நிலைமையை நினைத்து. ஒரு கணம் தாம் முட்டாள் தனமான முடிவு எடுத்து விட்டோமா என்று கூட யோசித்து இருக்கிறாள்.

ஒரு நாள் மாறன் வேலை முடிந்து வீடு வந்ததும் தனிக்குடித்தனம் போக வேண்டிய அவசியத்தையும் அதன் காரணத்தையும் விளக்கிச் சொன்னதன் பலனாய் இருவரும் தனிக் குடித்தனம் போக ஆயத்தமாயினர். இதனால், மாறனின் வீட்டில் அனைவருக்கும் இவள் கெட்டவள் ஆகிப் போனாள். சோம்பேறிப் பேர்வழிகள் இருவரும் வேலைக்குப் போக வேண்டிய நிர்ப்பந்தத்தால் மிகவும் கோபத்திற்கு ஆளாயினர்.

தனிக் குடித்தனம் போன பின்னரும் மாறன் தன் குடும்பத்தைக் கவனிக்கத் தவறியதில்லை. மாதா மாதம் ஒரு தொகையை அவன் குடும்பத்திற்குத் தந்து கொண்டுதான் வந்தான். தங்கையும் தம்பி மனைவியும் பிரசவித்தப் போது கூட வினாஷினியின் தாலிக் கொடிதான் அடகுக் கடைக்குச் சென்றது. வெட்கங்கெட்ட கணவன்மார்கள் இருவரும் அப்பா ஆகிவிட்ட சந்தோசத்தில் மார்தட்டிக் கொண்டது வினாஷினியைப் பொறு த்தமட்டில் மிகவும் கேவலமாக இருந்தது.

குடும்பக் கஷ்டத்தைக் காரணம் காட்டி மாறனின் தாயார் இருவரையும் மீண்டும் அவர்களுடனேயே வந்து தங்கிக் கொள்ளுமாறு கேட்டார். போகலாமா வேண்டாமா என்ற பேச்சு வார்த்தையின் ஊடே மாறனின் போக்கில் மாற்றத்தைக் கண்டாள் வினாஷினி.

நாளாக நாளாக மாறனின் பேச்சு வார்த்தைகளும் சரி இல்லாமல் போக இருவருக்கும் தினமும் சண்டை என்றானது. இரவெல்லாம் சமைத்து வைத்து காத்திருந்தால் அவனிடமிருந்து அழைப்பு மட்டுமே வருமே தவிர அவன் வந்த பாடில்லை. பிறகு தான், தெரிந்தது மாறன் கொஞ்ச நாட்களாக அவனின் அம்மா வீட்டிலேயே தஞ்சம் புகுந்துள்ளான் என்று. இதைக் கேட்கப் போனவளை ஒரு குடும்பமே எதிர்த்து நின்ற அநியாயம் அவளுக்கு மட்டுமே நடந்திருக்கும்.

அதுவரை அவளைப் பற்றி அவதூறு சொன்ன மாறனின் குடும்பம். இறுதியாக அவளது மகள் சுவஷ்திக்காவையும் அவளது பிறப்பையும் கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய வார்த்தைகளைக் கேட்ட அவள் அதற்கும் மேல் அங்கு நிற்க விருப்பப்படவில்லை.
அதுவும் அவ்வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவள் ஆசை ஆசையாய்க் காதலித்த மாறனின் வாயிலிருந்தே வந்தது என எண்ணும் போதே அவளது நெஞ்சம் சுக்கு நூறாய் உடைந்தது. மனம் உடைந்து போனவளுக்கு இன்னும் ஒரு பேரதிர்ச்சியான செய்தியைச் சொன்னான் மாறன். ஆம், அவனது இரண்டாவது திருமணம். அதுவும் இந்தோனேசியப் பெண்ணுடன். இதைக் கேட்ட மாத்திரத்தில் உயிரிருந்தும் ஜடமாகிப் போனாள் வினாஷினி.

சுவஷ்திக்காவை கூட்டிக் கொண்டு திரும்பவும் பாட்டி வீட்டிற்கே வந்து சேர்ந்தாள். பலர் சொன்ன ஆறுதல்கள் அவளைக் கொஞ்சம் திடமாக்கியது. முதல் சில நாள் ஆறுதல் சொன்ன வாயெல்லாம் பின்னால் புறஞ்சொல்ல ஆரம்பித்தன. அதனை, நன்றாய்ப் புரிந்து கொண்ட வினாஷினி, இனி அவள் வாழும் நாட்கள் அவளது சுவஷ்திக்காவிற்காக மட்டுமே இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

இருப்பினும், முதல் சில காலங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டு விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும். அவ்வளவு படிப்பறிவு இல்லாத வினாஷினி, நம்பிப் போன மாறனோ ஏமாற்றுவான் என்று கனவிலும் நினைக்கவில்லை.
சாதாரண கம்பனியில் பணிபுரிந்து கொண்டே கணினியில் வேகமாய் தட்டச்சு செய்யக் கற்றுக் கொண்டாள்.

அதே சமயம் ஆங்கில வகுப்புகளுக்கும் சென்று ஆங்கிலம் எழுத படிக்கக் கொஞ்சம் கற்றுக் கொண்டாள். படிப் படியாய் தன்னை உயர்த்திக் கொண்டாள். கம்பனி வேலையை விட்டு விட்டு, சிறுவர் பாலர் பள்ளியில் ஒரு தற்காலிக ஆசிரியையாகப் பணியாற்றி இப்போது அங்கேயே நிரந்தரமாக வேலை செய்து வருகிறாள். இரண்டு வருடங்கள் ஓடி மறைந்து விட்டன.

மயானக் காளியின் சொல்லை மீறியதால் இத்தண்டனையா ? அல்லது இவள் விதியே இப்படி எழுதப்பட்டது தானா ? உலகமே அறியா வினாஷினி கொஞ்சம் வெளி உலகமும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கடவுள் கொடுத்த பரீட்சையா ? இப்படி சில வேளைகளில் அவளே அவளைக் கேட்டுக் கொண்டதும் உண்டு.

இளவயதில் காதல் கொண்டு நிதானமின்றி அவசரமாக முடிவெடுத்து தன் எதிர்காலத்தைக் கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல் தான் செய்த தவறு என்றுமே தமக்கு ஒரு நல்ல பாடமாக அமையும் என்று ஒவ்வொரு நாளும் இப்பொழுதெல்லாம் வினாஷினி அவளுக்குள்ளேயே சொல்லிக் கொள்கிறாள்.

அவளது சிந்தனையைக் கலைக்கும் வண்ணம் எதிரே தொட்டிலில் புரண்டுப் படுத்தாள் சுவஷ்திகா.

எழுதியவர் : தீப்சந்தினி (18-Jan-14, 11:30 am)
பார்வை : 117

மேலே