நம்பரால் கெட்டது தீபாவளி
இந்தாங்க புடிங்க இதுக்கு மேலையும் என்கிட்ட தரத்திற்கு ஏதுமில்லை....
அம்மா கோபமாக இருந்தும் குரலை உயர்த்தாமல் அப்பாவிடம் சொன்ன வார்த்தைகளை பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன் நான்.
இது ஒன்றும் எங்கள் வீட்டில் புதிதல்ல. காரணம் வழக்கமாக அப்பா அம்மாவிடம் வந்து இப்படி நிற்பதும் அம்மாவும் அவரை கடிந்துக் கொண்டு அவர் கேட்ட பணத்தை தருவதும் வாடிக்கையாக நடக்கும் நாடகங்கள். கடந்த 23 வருடங்களாக நான் என் கண்களால் பார்த்து வரும் அப்பாவின் பிடிக்காத குணம்.
அப்பா ஒன்றும் கெட்டவர் அல்ல. இருந்தும், அவருடைய இந்த நம்பர் எடுக்கும் பழக்கம் மட்டும் எப்படித்தான் அவருக்கு வந்து ஒட்டிக் கொண்டதோ தெரியவில்லை. நான் வாய் பேசா மழலையாக இருக்கும் போதே தெரியும் அப்பா 6 மணியானால் வீட்டின் வளைவில் இருக்கும் அந்த கூடா , மெக்னம் அல்லது டோடோ கடையில் தான் இருப்பார் என்று.
என்னச் சொல்லி என்ன செய்வது தொடக்கத்தில் பட்டாய் இருந்த பழக்கம் நாளடைவில் வேராக துளிர் விட ஆரம்பித்தது. அதுவும் நான் அண்ணன் மற்றும் அக்கா எல்லாம் தோலுக்கு மேலே வளர்ந்து பிறகு அவருடைய பொருப்புகள் குறைந்ததாய் அவரே நினைத்துக் கொண்டார் போலும். முன்பெல்லாம் ரிங்கிட் 10 செலவு பண்ணியவர் இப்பொழுது 100 ரிங்கிட்டைக் கூட கரிசனம்மின்றி தண்ணியாய் அந்த பாழாய் போன கூடா, மெக்னம் கடைகளில் கரைக்கிறார்.
அண்ணனும் அக்காவும் பல முறை சொல்லியும் பலனில்லை. நான் இதில் வாய் திறக்க எனக்கு விருப்பமும் இல்லை. சில சமயங்களில் சொல் புத்தியை விட சொந்த புத்தி நம்மை ஆட்கொண்டு சாத்தான் குடிக்கொண்ட அறிவினத்தால் தேவையற்ற பிரச்சனைகளையே உருவாக்கும். பட்டு திருந்தட்டும் இதுதான் என் தாரக மந்திரம்.
ஆதலால்,பெரும்பாலும் அப்பாக்காக அம்மா இதுவரை என்னிடம் வந்து கை நீட்டியதில்லை அதுவரை என் குணம் அறிந்த அம்மாவை பாராட்டலாம்.
தீபாவளி நெருங்கி கொண்டிருந்தது. இன்னும் 2 வாரங்களில் தீப்பொறி பட்டாசுகள் படபடக்க வீதியெங்கும் மத்தாப்பு வெளிச்சத்துடன் பட்டாடை உடுத்தி தீபாவளியே வருக வருக என்று அனைவரும் கொண்டாட காத்திருக்கும் அந்த இனிய திருநாளை மற்றவர்கள் போல் நானும் என் குடும்பத்தாரும் காத்திருந்தோம்.
அம்மா ருசியான பலகாரங்கள் செய்ய அக்கா உதவினார். அண்ணனோ வீட்டை சுத்தப்படுத்தி வெள்ளையடித்தார். எனக்கு வருட வருடமும் எந்த வேலையும் இருப்பதில்லை. இந்த ஆண்டும் விதிவிலக்கல்ல. என் அம்மா அனாவசிய செலவுகளைத் தவிர்ப்பவர். விரலுக்கேற்ற வீக்கமாய் அளந்தே செலவு செய்வார். அப்படி இருந்தும் இதுவரை எங்கள் மூவருக்கும் எந்த ஒரு குறையும் வைத்ததில்லை.
அக்காவிற்கு தீபாவளிக்கு மறுநாள் நிச்சயதார்த்த நிகழ்வு நடக்கவிருந்தது. அதற்கான ஏற்பாடுகள் நடந்தபாடாய் இருந்தது. அக்கா சுமிக்காக வாங்கிய நகைகளை வெட்டில் வைக்க அம்மாவிற்கு கொஞ்சம் பயம் தான். காரணம் தீபாவளி நெருங்க நெருங்க திருட்டு கும்பல்காரர்களுக்கும் கை அரிக்கத்தானே செய்யும். இருந்தும், அம்மா கூடுதல் கவனத்தை நகைகள் வைத்திருந்த அலமாரியில் வைத்திருந்தார்.
அப்பாவின் நண்பர் ஒருவர் அவரை வழியில் பார்த்து தனக்கு நம்பர் அடித்து விட்டதாக பீற்றிக் கொண்டிருக்கிறார் என்று அப்பா அம்மாவிடம் வந்து ஒரே புலம்பல். அம்மாவும் வேறு வழியின்றி அதைக் கேட்டுக் கொண்டிருந்தார். புலம்பி விட்டு வெளியே சென்ற அப்பா அன்று இரவு வெகு நேரமாகியும் வீட்டுக்கு வர வில்லை. அம்மாவிற்கு பயம் நெஞ்சை கவ்விக் கொண்டது.
அண்ணானோ அம்மாவை சமாதானம் செய்து அது பலனளிக்காமல் போகவே அப்பாவை தேடும் முயற்சியில் இறங்கி விட்டார். அதற்க்கு முதலில் போலீசில் புகார் பண்ண வேண்டும் என்பதனை நான் சொன்னப் பிறகு அம்மாவும் அண்ணனோடு காவல் நிலையத்திற்கு செல்ல பிடிவாதம் பிடித்தார்.
நாங்கள் யார் சொல்லியும் கேட்க மாட்டாது அம்மாவின் பிடிவாதம் அண்ணனை ஆத்திரமாக்கியது.
நீங்கத்தான் தேவை இல்லாமல் கவலை படரிங்கம்மா ...அப்பாக்கு கண்டிப்பா எதுவும் ஆயிருக்காது....
அவரு ஒன்னு குடிகாரன் இல்லடா.... குடிச்சிப்புட்டு ரோட்டுலே விழுந்துக் கிடக்க..... அவருக்கு ஒரே ஒரு கெட்டப் பழக்கம் அந்த நம்பர் எடுக்கற பழக்கம் அது மட்டும் தான் அந்த மனுசங்கிட்ட இருக்கற குறை....மத்தப்படி அவரு நல்லவருடா...
இது அம்மாவின் கதறலோடு சேர்ந்த குமுறல்.
வீடே அப்பாவை காணாமல் சோகத்திலும் பதற்றத்திலும் இருந்த போது அக்காவின் அலறல் எங்கள் அனைவரையும் தூக்கி வாரி போட்டது. பதறியடித்துக் கொண்டு அம்மாவின் அறைக்குள் நுழைந்தால் திறந்திருந்த அலமாரியின் அருகில் அக்கா காலியான பேழையை கையில் தாங்கிக் கொண்டு நின்றாள்.
அம்மா அதில் வைத்திருந்த அக்கவிற்கான நகைகளைக் காணாமல் அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தனர். இரவு 11.30 நெருங்கியப் பொழுது அப்பாவின் மோட்டார் வண்டி வீட்டின் முன் வந்து நின்றது. அமைதியாய் வீட்டின் உள்ளே வந்த அப்பா அமைதியாய் தலைக் குனிந்து எங்கள் முன் நின்றார். அம்மா வேகாமாய் போய் அவரை தொட்டு தடவி என்னானது , ஏதானது , ஏன் தாமதம் என்றுக் கேள்விகளை அடுக்கி கொண்டே போனார்.
எனக்கு ஓரளவுக்கு விஷயம் விளங்கியது. இருப்பினும், அமைதிக் காத்து காத்திருந்தேன்.
அண்ணனே ஆரம்பித்தார். நகை எங்கப்பா ? நாங்க யாருமே எடுத்திருக்க வாய்ப்பில்லை... காரணம் சுமிக்குத்தான் கல்யாணம் சுமி எடுத்தாலும் எடுக்காட்டியும் அந்த நகை அத்தனையும் அவளுக்குத்தான் சொந்தம். நான் எடுக்க வேண்டிய அவசியம் இல்லே காரணம் நான் தண்ணி சிகரெட் ஏன் நம்பர் கூட எடுக்க
மாட்டேன் ! காவியா எடுக்கனும்னு அவசியமும் இல்லே காரணம் அதுலே அவளோடு பங்குத்தான் அதிகமா இருக்கு.... அம்மா சொல்லவே வேணாம்.... அப்போ நீங்கத்தான்.... ?!
அண்ணன் முடிக்கும் முன்னே அப்பா தழுதழுத்த குரலில் நான்தான் அந்த பணத்தை எடுத்தேன் என்று சொல்லி அண்ணனின் குற்றசாட்டை மெய்பித்தார். அம்மா அதிர்ந்து விட்டார். அப்பவே மீண்டும் தொடர்ந்தார்.
சாமியார் ஒருத்தர் கண்டிப்பா இந்த தடவை நம்பர் அடிக்கும் பெருசா போடுன்னு சொன்னாரு... பெருசா போட்டு பெரிய தொகை கைக்கு வந்த தீபாவளியையும் சுமி நிச்சயத்தையும் இன்னும் சிறப்பா செய்யலாம்னு நெனச்சேன் என்று இழுத்த அப்பாவின் சாட்டை பிடித்துக் கொண்டு ஆவேசத்தோடு அம்மா என்னையா பண்ணே என் பொண்ணு நகை எல்லாம் .... என்று ஆத்திரத்தோடு கேட்டார்...
அப்பா சொல்லப் போகும் பதில் எனக்கும் அண்ணனுக்கும் நன்றாக தெரியும். அக்காவுக்கும் ஓரளவு புரிந்து அவளும் கலங்கிய கண்களோடு கதவோரம் நின்றிருந்தாள். அப்பாவின் வாயிலிருந்து வந்துதான் அந்தப் பதில் தன காதில் விழ வேண்டும் என்றிருந்த அம்மாவிடம் அப்பா சொன்னார் எல்லாரும் என்னை மன்னிசிருங்க நம்பர் கண்டிப்பா அடிசிடும்னு நம்பி நகைகளை பாசாக் கடையிலே வெச்சி எல்லா பணத்தையும் அதில் போட்டு நானே இப்படி உங்க எல்லாரையும் கஷ்டத்துலே தள்ளிட்டேன்... உங்கே தீபாவளி சந்தோசத்தை கொலச்சிட்டேனே...
ஒருதடவக் கூட இன்னும் என் சுமி அந்த நகைகளை போட்டுப் பார்க்கலையே ... அத்தனை காசையும் கரியக்கிடேனே... அம்மா சுமி அப்பாவை மன்னிசிருமா.... உன் நிச்சயதார்த்தை நானே கெடுத்திட்டேனெ... ராணி மாறி உனக்கு நகை வாங்கிப் போட்டு இந்த தீபாவளிக்கு தீபாவளி பொண்ண அழகு பார்க்கணும்னு நெனச்சேனே பாழாப் போன இந்த நம்பர் பைத்தியம் வந்து இப்படி என் புத்திய கோணலாக்கிருச்சே.... ஐயோ !!!
பார்வதம் என்னே மன்னிசிரு.... இனி நான் இந்த தப்ப செய்ய மாட்டேன்.... தயவு செஞ்சி என்னே மன்னிச்சிரு ஐயா சந்துரு.... தனிய அந்த சிங்கப்புர்ல ஒண்டியாக் கெடந்து வாயக் கட்டி வயத்தக் கட்டி என் பொண்ணு காவியா சேர்த்த அத்தனை காசையும் கொஞ்ச நேரத்துலே தும்சமாகிட்டேனே....
இப்படியே அப்பாவின் புலம்பல் நீண்டது... அம்மாவோ அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவே இல்லை...
அப்பா நம்பர் எடுப்பது ஒன்றும் புதிதல்ல இருந்தும் இம்முறை மொத்தமாய் அனைத்து நகைகளையும் எடுத்து பாசாக் கடையில் வைத்து அதன் மூலம் கிடைத்த மொத்த பணத்தையும் அப்படியே நம்பர் எடுப்பதற்கு பயன்படுத்தியதுதான் மிகப் பெரிய தவறானது.
விடிந்தும் விட்டது. தீபாவளியும் பிறந்து அக்கம் பக்கத்தார் சூடம் சாம்பிராணி ஏற்றி மணி அடித்து சாமி கும்பிடும் சத்தமும் வாசமும் மூக்கையும் காதையும் துளைத்தது. என் வீடோ கண்ணீரும் கம்பலையுமாக இருந்தது. என்ன சொல்லி என்ன செய்ய எல்லாம் முடிந்தாயிற்று.
பாட்டாசு சரவெடிகள் எங்கள் தாமானை கோலகலமாக்கியது.
அப்பாவின் அவசர புத்தியால் கலை இழந்த எங்கள் வீட்டில் நாளை அக்காவிற்கு நிச்சயம் வேறு எப்படித்தான் நடக்கப் போகிறதோ என்று அனைவரது எண்ணத்திலும் ஒரே சிந்தனை.
நேரம் ஓடியதே தெரியவில்லை. நடந்தது நடந்தாயிற்று இனி அதனை நினைத்து வருந்தி பயனில்லை என்பதை அனைவரும் உணர்ந்திருந்ததால் எல்லாம் குளித்து சாமி கும்பிட்டு அம்மா செய்து வைத்த தோசையை பசியாறிக் கொண்டு இருந்தோம்.
அப்பாவை யாரும் ஏதும் கேட்கவும் இல்லை. அவரும் இது எதிலும் கலந்துக் கொள்ளவில்லை. குற்றமுள்ள நெஞ்சு குருகுருகின்றது போல.
ஒருவழியாய் அக்காவின் நிச்சயம் மிக எளிதாக நடந்தேறி முடிந்தது.
அண்ணன் விரும்பும் மரிட்சா என்ற கிருஸ்துவ பெண் அவளுடைய நகைகளையும் கொஞ்சம் பணைத்தையும் அம்மாவிடம் கொடுத்து எங்களுக்கு உதவியது பிறகு அம்மா சொல்லித்தான் எங்களுக்கு தெரியும்.
அவள் கிருஸ்துவ பெண் என்பதனால் அப்பா அண்ணனின் காதலுக்கு செவிசாய்க்கவில்லை. இருப்பினும், இப்போது அவள் தான் அப்பா செய்த முட்டாள் தனத்திற்கு உதவிருக்கிறாள்.
ஹாலில் அமர்ந்திருந்த எங்கள் அனைவரின் கவனைத்தையும் ஈர்க்கும் வண்ணம் அப்பா மரிட்சாவின் அருகில் வந்தமர்ந்து அவளின் கைகளை பிடித்து ரொம்ப நன்றி மா நீ மட்டுமில்லனா என்ன நடந்திருக்குமோ தெரியலை...
நான் எத்தனையோ தடாவோ உன்னே எவ்வளவோ திட்டிருக்கேன் உன் மனசை வேதனை படுத்திருக்கிறேன். ஆனா, நீ எதையும் மனசுலே வெச்சிக்காம இன்னிக்கி என் பொண்ணு வாழ்க்கையே காப்பத்திருக்கே.... என்னே தயவு செஞ்சி மன்னிசிருமா... எல்லாரும் என்னே தயவு பண்ணி மன்னிசிருங்க.... பர்வதம் இனி சத்தியமா நம்பரே எடுக்க மாட்டேன்.... தயவு பண்ணி எல்லாம் என்னே மன்னிசிருங்கே...
அப்பா கண்ணீர் மல்க இப்படி பேசியது அம்மாவால் சற்றும் பொறுக்க முடியவில்லை. நீங்க இந்த வார்த்தை சொன்னதே போதும்.... என்று அப்பாவை தோற்றினார்.
நம்பர் எடுக்கும் மோகம் கை மீறி போனதினால் பறிப் போன எங்கள் 2008 ஆம் ஆண்டின் தீபாவளியையும் நின்றுப் போக இருந்த அக்கா சுமியின் நிச்சயமும் அப்பாவின் பழக்கத்தை முற்றிலும் மாற்றியது. தவறை உணர்ந்த அப்பா அன்றிலிருந்து இன்றுவரை நம்பர் கடை பக்கம் செல்வதில்லை.