பாவம் தீரும்

‘இங்கையா.....?! ‘ என நான் காரை நிறுத்தியவுடன் அதிர்ச்சியாய்க் கேட்டாள் மித்ரா.

‘ஆமா... இங்கத்தான் சாப்பிடப் போறோம்....’
என்றுக் கூறி காரிலிருந்து இறங்கி எதிரே இருந்த சீன கடல்வாழ் உணவு கடையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தேன்.
அவளும் பின் தொடர்ந்து வந்து என்னுடனே அமர்ந்தாள் அருகில் திரு திரு வென விழித்தவாறே. வேண்டிய உணவுகளை ஆர்டர் செய்து சைனிஸ் டீயை அருந்துக் கொண்டிருந்தோம்.

அவளால் அங்கே நிம்மதியாக அமர இயலவில்லை அது அவளை பார்த்தாலே தெரிகிறது. நொடிக்கு 10 தரம் உச்சிக் கொட்டிக் கொண்டே இருந்தாள்.
யாரோ என் முதுகை வந்து தட்டினார்கள் 'ஹாய் செல்லம் நீ எங்க இங்க' என்று.

தட்டியது வேறு யாருமில்லை அதே பங்சாரில் விலைமாதுவாய் இருக்கும் ருக்மணி. அவளை என் அருகில் அமர வைத்துக் கொண்டேன்.

இருவரும் நன்றாக சிரித்து பேசியது மித்ராவிற்கு துளியும் பிடிக்கவில்லை.நானும் அவளை கண்காணித்துக் கொண்டேதான் இருந்தேன்.
ருக்மணி அவளிடம் பேச ஆரம்பித்தாள். அதுதான் அவள் செய்த தவறோ என்னவோ கடுகாய் பொரிந்து தள்ளி விட்டாள் மித்ரா. நானும் கொஞ்சம் பயந்து விட்டேன் என்ன இவள் இப்படி பேசுகிறாளே என்று.

ஆனால், ருக்மணி சிரித்துக் கொண்டே அவள் ஏய்ந்துக் கொண்டிருக்கும் கனைகளை கேட்டுக் கொண்டிருந்தாள். ஒரு கட்டம் எல்லை மீறி மித்ரா அவளிடம்

'தயவு பண்ணி என்னை காமினி மாதிரி நினைக்காதிங்க. நான் ஒன்னும் தரம் கெட்டு எல்லாரிடமும் பேசி பழக மாட்டேன். இனி என் கிட்ட ஒரு வார்த்தை நீங்க பேசனிங்கனா மரியாதைக் கெட்டிடும் ஜக்கரதை...!! 'என்றாள் நாக்கில் நரம்பில்லாமல்.

என் தோழியா இப்படி வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுகிறாலே ருக்மணியை ஒரு நாயைப் போலல்லவா நடத்துகிறாள். கண்களால் ருக்மணியிடம் மித்ராவின் கத்தி முனை வார்த்தைகளுக்கு நான் மன்னிப்பு கேட்டு கொண்டேன். அடுத்த நொடியே என் பார்வை மித்ராவிடம் பாய்ந்தது. நான் வாயைத் திறக்கும் முன்னே நாங்கள் ஆர்டர் செய்த உணவுகள் மேஜைக்கு வந்து சேர்ந்தன.

பொதுவாக சாப்பிடும் நேரம் கண்டதையும் நினைத்து வயிறை நிறைக்காமல் போகும் பழக்கம் எல்லாம் என்னிடம் கிடையாது. ஆகையால், சாப்பிட தொடங்கி மித்ராவை அப்புறமாக கவனித்துக் கொள்ளலாம் என்று இருந்து விட்டேன்.

ருக்மணியையும் எங்களுடன் உணவு உண்ண அழைத்தேன் இருந்தும் அவள் மறுத்து விட்டாள்.
நான் விடுவதாய் இல்லை. உணவு உண்ட பிறகு ருக்மணியை அழைத்துக் கொண்டு ஊர் சுற்றப் போவாதாய் சொன்னதும் மித்ராவின் முகம் கன்றி சிவத்தது. அதிலிருந்தே தெரிந்தது மித்ராவிற்கு ருக்மணியைப் பிடிக்கவில்லை.

அப்படி என்னத் திமீர் வேண்டிக் கிடக்கிறது இந்த மித்ராவிற்கு. இவளது கொட்டத்தை இன்று அடக்க வேண்டும். இதுதான் நான் காரை ஓட்டிக் கொண்டே யோசித்தது. மித்ரா என் தோழிகளில் ஒருத்தி. அவள் பிடித்த முயலுக்கு மூன்றுக் கால் என்பதே அவளது தலையாய பிரச்சனை. அவள் சொல்வதுதான் சரி ஏன் அவள் மட்டுமே சரி மற்றவர்கள் எல்லாம் பிழை என்பதே அவளது கருத்து.

சில தின்பண்டங்களைக் கொறித்துக் கொண்டே என் வாகனத்தை தேசிய சதுக்கத்தில் நிறுத்தினேன். அனைவரும் ஒன்றாக அங்கே இறங்கி சாலையில் நடந்த வாகன பந்தயத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம். சனிக்கிழமையானாலே அங்கே வழக்கமாக வாகன பந்தயம் நடப்பது இயல்பு.

அங்கிருந்த சிலப் பேர் ருக்மணியிடம் வந்து பேச்சுக் கொடுத்தார்கள். அவர்கள் அவளுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்பது அவர்கள் பேசும் விதத்திலிருந்தே தெரிந்தது. மித்ராவின் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் கோபக் கனல் வீசத் தொடங்கிக் கொண்டிருந்தது.
அதை கண்டு சுதாகரித்துக் கொண்ட ருக்மணி மித்ராவைப் பார்த்து
‘ஏன் என்கிட்ட கடுகடுனு முகத்தைக் காட்டரிங்க ?’ என்றாள்.

மித்ரா பதிலுக்கு
‘நான்தான் ஏற்கனவே சொன்னேனே என்கிட்ட பழகரத்துக்கு ஒரு தரா தரம் இருக்கனும்னு !’
என்றாள் மீண்டும் முகத்தில் அடித்தாட் போல்.
‘தரா தரமா ? அப்படி என்னம்மா தரா தரம் வேணும் ? ஆஸ்பத்திரியிலே ஒருத்தனுக்கு உதவி பண்ணும் போது தரா தரம் பார்பியா ? கடையிலே சாப்பிடும் போது யார் சமைக்கரானு தரா தரம் பார்பியா ? தோ , நீ போட்டிருக்கும் இந்த உடை யார் நெய்ததுன்னு தரா தரம் பார்ப்பியா ?’

கேள்விகளைக் கேட்டு அமைதியாய் இருந்த ருக்மணியை வெறித்துப் பார்த்தாள் மித்ரா. எனக்கு சிரிப்பு வந்தாலும் அதை அடக்கி கொண்டே நின்றேன். ருக்மணி மீண்டும் தொடர்ந்தாள்.
‘எனக்கு 16 வயது. பள்ளிக்கூடம் போனேன். ஆனா, கவனம் படிப்பில் இல்லே.புத்தி மதி சொல்லவும் யாரும் இல்லே. காரணம் அம்மா சின்ன வயசுலையே போய்ட்டாங்க. தப்பா நினைக்காதிங்க மேலே போகல !’

வேறே ஆம்பளையோடு. அப்பா சொல்லவே தேவை இல்லே ஏற்கனவே குடி, அவளும் போய்ட்டாள சொல்லவா வேணும் குடியைத் தவிர வேற எதுமே இல்லேன்னு ஆயிப் போச்சி. பாசத்திற்கு ஏங்கி தவிச்ச எனக்கு மிஞ்சனது எதுமே இல்லே !’

‘காதலி எல்லாம் சரியாயிடும் சொன்னாங்க கூட்டாளிங்க. ஹ்ம்ம்... காதலிச்சேன் ஒருத்தனை பேரு சரவணா. எனக்கு வந்த வாழ்வப் பாரு.அவனும் நல்லவன் இல்லையே ! பாவம் நானும் என்னத்தான் பண்ணுவேன் சின்னப் புள்ளே அப்போ. குடி ! எந்தக் குடி என் அப்பாவோடு தாரக மந்திரமா இருந்துச்சோ அதையே எனக்கு ஊத்திக் கொடுத்தான்.’

‘அப்பறம் என்ன போதை தலைக்கு ஏற.... ஹ்ம்ம்.... கடைசியாத்தான் தெரியுது நான் அவனோடு வருசையான லிஸ்ட் லே ஒரு ஆள்னு. என்னப் பண்ண ?! ஒன்னும் பண்ண முடியாதே ! பார்த்தேன் எனக்கு ஆறுதல் சொல்லவோ அன்பா பழகவோ ஆளில்லை. 5 நிமிஷம் சுகத்திற்காக என்கிட்ட வர ஆம்பளைங்க என்ன சிரிக்க
வெச்சாங்க.அதனால எனக்கு இந்த வாழ்க்கை பிடிச்சிருக்கு. நான் இந்த வாழ்க்கையையே சுகமா ஏற்றுகிட்டேன்.’

‘நான் வாழ்ற இந்த வாழ்க்கை சரியான வாழ்க்கைன்னு நான் நியாயப்படுத்த விரும்பல.காரணம் நான் தப்பான ஒரு தொழில் தான் பண்ணிகிட்டு இருக்கேன். என்கிட்ட பணம் இல்லே ! படிப்பு இல்லே ! ஆனா, வயிறு இருக்கே.அதுக்கு பசிக்குமே. உயிர்ன்னு ஒன்னு இந்த ஒடம்புல ஊசல் ஆடிகிட்டு கிடக்கே அதுக்காகவாவது வாழணுமே !

‘எனகின்னு சொல்லிக்க நண்பர்கள் எல்லாம் ரொம்ப பெரிய லெவல் இல்லம்மா. என் கூட்டம் எல்லாம் என்னைப் போலவே அவ்வளவு படிப்பறிவு இல்லாத கூட்டம்.’ ‘இப்படிதான், ஏமாந்துப் போயி வரதுதான். எல்லாம் என்ன இஷ்டப்பட்டா இந்த தொழில் பண்றாங்க ! ஆனா, அந்த மனசு இருக்கே பாரு மனசு. அப்படி ஒரு மனசு. யாருக்கும் வஞ்சனை பண்ணாத மனசு. துரோகம் பண்ணாம, யார் குடியையும் கெடுக்காமல் உதவின்னு வந்த எப்படியும் உதவி பண்ணிடும் கூட்டம் தான் என் கூட்டம்.’

‘அன்புக்கு ஏங்கி தவிச்சு இப்படி சிரழிந்து போன வாழ்க்கையை எனக்கு பரிசா தந்து விட்டு போன என் அப்பா அம்மா ரெண்டு பேர் மேலயும் நான் கோபப்பட்டு எனக்கு என்ன கிடைக்க போகுது ?’

‘ஒன்னும் இல்லே ! ரத்தக் கொதிப்பு வேணும்னா வரும் டென்ஷன்ல ! கடவுள்னு ஒருத்தர் இருகாரு நிச்சயமா நான் இப்படி ஆகா காரணமா இருந்தவங்களை கண்டிப்பா தண்டிப்பாரு ! அது உறுதி ! அது வரைக்கும் நான் எனக்கு தெரிஞ்ச இந்த தொழிலையே செஞ்சிகிட்டு என்கிட்ட உதவின்னு வர ஆதரவில்லாதவர்களுக்கு உதவி பண்ணிகிட்டுதான் இருப்பேன்.’

‘என்ன அவுங்களையும் உங்கள மாதிரி இந்த விபச்சார தொழில்லே மாட்டி விடரிங்களா ? இதுதான் உங்க உதவியா ?’

மித்ராவின் கேள்வியை சற்றும் எதிர்பாராத ருக்மணி ஒடிந்துப் போனாள். துளியும் தாமதிக்காமல் அங்கிருந்து சென்று விட்டாள். நான் மித்ராவை விடுவதாய் இல்லை.

நேராய் வாகனத்தை எங்கள் அனாதை விடுதிக்கு விட்டேன். அங்கே இருந்த பாதுகாப்பாளர் சுஜாத்தாவிடம் மித்ராவிற்கு தெரிய வேண்டிய சில முக்கியமான உண்மைகளை சொல்ல வேண்டிய சூழ்நிலையை அவரிடம் விவரித்து அதன்
அவசியத்தையும் எடுத்து சொல்லி அவைகளை மித்ராவிடம் சொல்ல சொல்லி அசுவாசப்படுத்தினேன்.

உண்மைகள் ஒவ்வொன்றாய் வெளி வர மித்ராவால் அவள் காதுகளையே அவளால் நம்ப முடியவில்லை. கொஞ்ச நேரம் செத்துதான் போய் விட்டாள் எனலாம்.
‘மித்ரா உன் பிறப்பு சொல்லிக் கொள்ளும்படி இல்லம்மா... உண்மைய உன்னால நிச்சயமா அவ்வளவு சாதரணமா எடுத்துக்க முடியாது. இருந்து நீ முயற்சி பண்ணனும் மா... !’

‘உண்மையிலேயே உங்க அம்மா ஒரு விலை மாது. சொல்ல நாக் கூசர விஷயம் இருந்தும் சொல்ல வேண்டிய நிர்பந்தம். நான் என் மகளை வயித்துல சுமந்திருந்த
நிறைமாச கர்ப்பிணி. என் கணவர் நல்லவர்த்தான் இருந்தும் அந்த விஷயத்துல கொஞ்சம் அப்படி இப்படி. கர்ப்பிணியான என்னால ஏதும் பண்ண முடியல. உங்க அம்மா அப்போதா அவருக்கு பழக்கமானாங்க. அவுங்களுக்குள்ளார நெருக்கமும் அதிகமாயிருந்தது எனக்கு லேசா தெரிய வந்தது.’

‘எனக்கு குழந்தை பிறந்து பத்திய தீட்டெல்லாம் முடிஞ்சி வீட்டுக்கு வரும் போது உங்க அம்மா 3 மாத கர்ப்பிணி. இதெல்லாம் எங்களுக்குள்ளார பெரிய கலவரத்தை உண்டு பண்ணிரிச்சி. இந்த சமயத்துல அவரும் போய் சேர்ந்துட்டாரு.’
‘அப்போ நான் இதே ஆசிரமத்திலே எடுபிடியா வேலை செஞ்சிகிட்டு இருந்தேன். இந்த ஆசிரமத் தலைவியும் இறக்கும் போது எல்லாத்தையும் என்கிட்ட தந்துட்டு புண்ணியவதி போயி சேர்ந்துட்டாங்க. உங்க அம்மாவும் அதோடு கானா போய்ட்டாங்க.’

‘திடிர்னு ஒரு நாள் நாங்க எதர்ச்சையா சந்திச்சோம். உங்க அம்மா அதே ‘பங்சார்ல’ ரோட்டு ஓரத்துல கிழிஞ்ச அழுக்கு சட்டையும் ஓட்டை விழுந்த கைலியையும் கட்டிக்கிட்டு எல்லார்கிட்டையும் பிச்சை கேட்டுக் கிட்டு இருந்தாங்க.’

‘எனக்கு மனசு தாங்கல. அவுங்கள கூட்டி வந்து இங்கதான் தங்க வெச்சேன். என்ன நினைச்சாங்களோ தெரியல உன்ன பெத்து போட்டுட்டு எவ்வளவு சொல்லியும் கேக்காமல் உன்ன யாருமில்லாத ஒரு அனாதைக் குழந்தையாவே வளர்க சொல்லிட்டு போய்டாங்க.’
‘அவுங்களுக்கு நீ நல்ல படிக்கணும். நல்லப் பொன்னா ஒழுக்கமான பொன்னா வளரணும்னு ரொம்ப ஆசை. நீ அவுங்கள மாதிரி ஆகிட கூடாதுனு அவுங்க ரொம்ப
உறுதியா இருந்தாங்க.

அதா உன் பிறப்போட சுவடுக் கூட தெரியாமல் உன்ன வளர்க்கச் சொன்னாங்க.’
‘எப்போதுமே உனக்கு இந்த உண்மைகள் தெரியக் கூடாதுனு திட்டவட்டமா சொல்லிட்டாங்க... இப்போ கூட இந்த உண்மையை உன்கிட்ட நான் சொன்னது நீ யாரையும் எப்போதுமே தப்பா எடை போடக் கூடாதுனுத்தான்...’.

உண்மைகள் ஊசியாய்க் குத்த கலங்கிய கண்களோடும் கனத்த நெஞ்சோடும் மித்ரா தமதறைக்கு சென்று விட்டாள். இப்பொழுதான் பாதி உண்மை தெரிந்திருக்கிறது இவளுக்கு. நான் தான் இவளது அக்கா. அதாவது, விலை மாதுவான இவள் தாயை ஏமாற்றிய அப்பாவிற்கு பிறந்த முதல் குழந்தை நான் தான் என்பதனை இன்னும்
சிலக் காலம் கழித்து தான் மித்ராவிடம் சொல்ல வேண்டும். சில சமயங்களில் இதுப்போன்ற உண்மைகள் எதிர்பார்ப்பதை விடவும் மிக அதிகமாகவே கசக்கிறது.

ருக்மணியைப் போல் பலர் செய்யும் இத்தொழில் வேண்டுமானால் தவறானதாக இருக்கலாம். அப்படியே காலத்தால் முடிந்தால் அவர்களது எதிர்காலத்தை அவர்கள் மாற்றிக் கொள்ளலாம். அப்படி செய்யத் தவறியவர்களைக் கொச்சைப் படுத்துவதிலோ கேவலமாக நடுத்துவதிலோ எதுவும் கிடைக்கப் போவதில்லை என்பதனை முதலில் மனித ஜந்துகலான நாம் அறிந்துக் கொள்ள வேண்டும்.

அவள் ஒரு பாலியல் தொழிலாளியாகவே இருக்கட்டும் அதற்காக அவள் பெண்ணிலையா? அவளுக்கு உயிர் இல்லையா? அவளது சரீரமும் சதைக் கொண்டு மூடப்படவில்லையா? அவளை கண்டப்படி பேசினால் அவளுக்குத்தான் வெட்கப்படவும் வேதனைப்படவும் மனமும் ஆறறிவும் இல்லையா? எல்லாம் இருக்கிறது அவளுக்கும் நம்மைப் போலவே.

நமக்குதான் மனசாட்சி என்ற ஒன்றே இல்லை. ருக்மணிப் போன்றவர்கள் இல்லையென்றால் நம்மைப் போன்ற பெண்கள் யாரும் சுகந்திரமாக சாலையில் இரவல்ல, பகலில் கூட நடக்க முடியாது என்ற அவல நிலையை உணர்ந்துக் கொள்ள மறுக்கிறார்கள்.

காம இச்சை நிறைந்த ஆண்களின் கொடூர பசிக்கு நாமெல்லாம் இரையாக வேண்டி வரும் என்பதனை சிந்திக்க மறந்த பெண்களே இவர்களை ஊதாசினப்படுத்துவதுதான் என்னாள் இம்மியளவும் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம்.

பச்சிளம் குழந்தையை கூட விட்டு வைக்காத இந்நாட்டில் ருக்மணியைப் போல் உள்ளவர்களை ஆதரிக்க வேண்டாம், ஒரு நன்றியுணர்ச்சிக் கொண்ட கண்களோடு அவர்களை நோக்கினாலே போதும். அவர்களது பாவம் தீரும்.

எழுதியவர் : தீப்சந்தினி (18-Jan-14, 11:40 am)
Tanglish : paavam theerum
பார்வை : 212

மேலே