வேலையிடத்தில் நம் ஆக்கத்திறனை அதிகப்படுத்திக்கொள்ள

வேலையிடத்தில் நம் ஆக்கத்திறனை அதிகப்படுத்திக்கொள்ள நம்மிடம் உள்ள செயல்திறனையும், திறமையையும் கூர்தீட்டிக்கொள்ள வேண்டும். இவை இரண்டுமே இலக்கு சார்ந்த செயல்திறனுக்கு மிகவும் அத்தியாவசியம். இவை இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கிறீர்களா?
ஓர் உதாரணத்துடன் சொல்கிறேன். ஒரு நிமிடத்தில் அறுபது ஆணிகளுக்கு மேல் அடிப்பது செயல்படுத்துகிற திறன். அதாவது, Efficiency. ஆனால், அவற்றை சரியான (தேவையான) இடங்களில் அடிப்பது திறமை. அதாவது, Effectiveness. மற்றவர்களைவிட வேகமாக ஓடுவது செயல்படுத்துகிற திறன். சரியான இலக்கு நோக்கி ஓடுவது திறமை. இலக்குகளை சுலபமாக அடைய இவை இரண்டுமே அவசியம். இவை இரண்டையும் வளர்த்துக் கொள்வது எப்படி என்று பார்க்கலாம்.
செயல்படுத்துகிற திறன் என்பது கடின உழைப்பினால் மட்டும் வருவதல்ல, அதற்கு புத்திசாலித்தனமான உழைப்பும் (Smart working) அவசியம். இதை விளக்க ஏற்கெனவே நாம் பார்த்த ஆணி உதாரணத்தையே பார்ப்போம்! ஓர் ஆணியை நொடிக்கு 4 முறை சுத்தியலில் தட்டுவது கடின உழைப்பு; அதை கூரான பக்கம் சுவரில் படும்படி தட்டுவது புத்திசாலித்தனமான உழைப்பு. பயனில்லாத இலக்குகளை நோக்கி வேகமாக ஓடுவது எப்படி முட்டாள்தனமானதோ, அதேபோல் புத்திசாலித்தனம் சேராத கடின உழைப்பும் பயனற்றது.

புத்திசாலித்தனமாக உழைப்பதற்கு அனுபவங் களில் இருந்து கற்றுக்கொள்வது அவசியம். அந்த அனுபவங்கள் பிறருடையதாக இருந்தால் அது இன்னும் புத்திசாலித்தனம்! உதாரணத்துக்கு, செயல்திறனை பாதிக்கும் ஆபீஸ் பாலிடிக்ஸை புரிந்துகொள்ள நீங்கள் சூடுபட வேண்டியதில்லை. சூடுபட்ட மற்றவர்களைப் பார்த்து பேசினாலே போதும்.
செயல்படுத்துகிற திறனில் திறமையை அதிகப்படுத்திக்கொள்ள பன்முக செயலாற்றல் (Multitasking) அவசியம். இதற்கு பயிற்சி மிகவும் உதவும். உதாரணத்துக்கு, எக்ஸெல், பவர் பாய்ன்ட் போன்ற ஆபீஸ் சாஃப்ட்வேர்களில் ஷார்ட்கட் கமான்ட்களில் தேர்ச்சியும், கம்ப்யூட்டர்களுடன் ஸ்மார்ட் போன்றவற்றை இணைப்பது போன்ற டெக்னிக்கல் நுண்ணறிவும் நம் பன்முக செயலாற்றல் திறனை அதிகரிக்கும்.
நம் திறமையை அதிகரிக்க இரண்டாவது முக்கியமான வழி, திட்டமிடுதல் (Planning). ''எனக்கு ஒரு மரத்தை வெட்ட 6 மணி நேரம் தரப்பட்டால், அதில் 4 மணி நேரத்தை என் கோடறியைக் கூராக்கச் செலவிடுவேன்'' என்றார் ஆபிரகாம் லிங்கன். இதைத்தான் 80:20 கோட்பாடு என்பார்கள். இதன் பொருள் 80 சதவிகித செயல்திறனை அடைய நாம் 20 சதவிகித விஷயங்களில் கவனம் செலுத்தினாலே போதும் என்பதே. அந்த 20 சதவிகித விஷயங்களை கண்டுபிடிப்பதே புத்திசாலித்தனமான உழைப்பு மற்றும் சரியான திட்டமிடுதல்.
திறமையை வளர்த்துக்கொள்ள மூன்றாவது வழி, உங்கள் வேலைப்பளுவை அதிகரிக்கும் வேலை சார்ந்த சின்ன, சின்ன விஷயங்களை பிறரிடம் தருவது. ஆங்கிலத்தில் இதற்கு 'டெலிகேஷன்’ (Delegation) என்று சொல்வார்கள். இதன் பொருள் உங்கள் வேலையைப் பிறர் தலையில் கட்டுவது என்பதல்ல, இதன் பொருள் நேரடியாக பயன்தராத வேலைகளை பிறரிடம் தருவது. உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு கடிதத்தை அனுப்பப் போகிறீர்கள் எனில், அதை கூரியரில் நீங்களே கொண்டுபோய் சேர்க்க வேண்டியதில்லை. அதை உங்களுக்கு கீழே இருக்கும் உதவியாளரிடம் சொல்லி செய்யச் சொல்லலாம்.
நம்மில் பெரும்பாலானவர்கள் தங்கள் வேலையை 'டெலிகேட்’ செய்யத் தயங்குவதற்கான காரணம், தவறு நேர்ந்துவிடுமோ என்ற பயம் அல்லது பிறரிடம் நம்பிக்கையின்மை. இதை தவிர்க்க ஒரேவழி, அலுவலகத்தில் நம்பிக்கைக்குரிய நபர்களை கண்டறிந்து அவர்களிடம் சுமூகமான உறவை வளர்த்துக்கொள்வதுதான்.
திறமையை வளர்த்துக்கொள்ள நான்காவது வழி, நெட்வொர்க்கிங், அதாவது அலுவலகத்தில் சரியான நபர்களை சரியான நேரத்தில் அணுகுவது நம் வேலையை சுலபமாக்கும்.
இதற்கு அலுவலகத்தில் நம் தொடர்புவட்டத்தைப் பெரிதாக்கிக் கொள்ள வேண்டும். மேலும், நம் துறை சார்ந்தவர்களோடு மட்டுமல்லாமல், பிறறோடும் நட்புணர்வோடு பழகுவது அவசியம். இதுதவிர, நேர மேலாண்மை, ஒருங்கிணைந்த முயற்சி (focus) போன்றவையும் நம் திறமையை அதிகரிக்கும்.

முன்பு சொன்னதுபோல, வேகமாக சரியான இலக்குகளை தேர்ந்தெடுப்பது, பயனில்லாத இலக்குகளில் நம் நேரத்தையும் உழைப்பையும் செலவிடுவது, விழலுக்கு இறைத்த நீரைப்போல. எனவே, நம் செயல்படுத்தும் திறனில் திறமையை எப்படி வளர்த்துக்கொள்வது என்று பார்ப்போம்.
சரியான இலக்குகளை (Performance goals) தேர்ந்தெடுக்க அறிவுமுதிர்ச்சி மிகவும் அவசியம். எந்த ஒரு செயலையும் தொடங்கும்முன் நிதானத்தோடு அதன் விளைவுகளையும், அதன் அவசியத்தையும் ஆராய்ந்து முடிவு எடுப்பதுதான் அறிவு முதிர்ச்சி. ஒரு செயலின் அவசியம் அதன் தேவையைப் பொறுத்து அமையும்.
உதாரணத்துக்கு, ஒரு ப்ராஜக்டை தொடங்கும்முன் அதன் தேவை என்ன, அது உண்மையிலேயே அவசியமானதா என்பதை ஆராயவேண்டும். விளைவுகளை ஆராயும்போது, அந்த செயலின் உடனடி விளைவுகள் (short term effects) மட்டுமல்ல, அவற்றின் நீண்டகால விளைவுகளையும் (long term effects) அறிந்துகொள்ள வேண்டும். அந்த விளைவுகளின் நன்மை, தீமைகள், அவற்றால் பாதிக்கப்படக்கூடியவர்கள் (stakeholders) யார் யார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்த நடுநிலை தவறாத முதிர்ச்சிக்கு தன் சூழல் சார்ந்த அறிவும், (awareness) நிதானமும் (patience) அவசியம். இவற்றை வளர்த்துக்கொள்ள அறிவு முதிர்ந்தவர்களின் நட்பும், நல்ல புத்தகங்களும் உதவும்.

எழுதியவர் : elakkiyam (22-Jan-14, 8:15 pm)
சேர்த்தது : ooviyan
பார்வை : 146

மேலே