விவசாயகவிஞன்

சுடுகதிர் மேனி பட்டு
வடுபல சுமந்தவன்
வேகும் வெயில் பட்டு
சாகும் சக்தியவன்-அவன்
கரமின்றி உலகில்
சிரம் ஏது?
தனக்கு வேண்டியதை
தானே செய்துகொள்பவன்!
விடிய விடிய-வியர்வை
வடிய வடிய
வயலில் வேலை செய்து
உப்பையும் உற்பத்தி செய்கிறான்!
ஆம்!
உடலையே கடலாய் மாற்றும்
கம்பீரம் மிக்கவன்!
பெரிய மனிதருக்கும்
வறிய மனிதருக்கும்
அன்னமிட்டு அழன்று கிடப்பவன்!
மேலாண்மை வளர
வேளாண்மை செய்து
இயலாமையில் கிடப்பவன்!
பசுமையை போர்த்திக்கொண்டு-தேர்தலில்
கருமைக்காக காத்துகிடப்பவன்!
பொறுமையை சுவாசித்து
வறுமையை வரவழைப்பவன்!
அழகியதை விற்றுவிட்டு
அழுகியதை உண்டுகிடப்பவன்!
ஓலைக்குடிசையின் ஒட்டையைவிட்டு
ஓசோனின் ஓட்டையை அடைக்கும்
ஒப்பில்லா விஞ்ஞானி!
நட்டத்தை
நாட்டத்தோடு ஏற்றுகொள்பவன்!
சட்டத்தை
சஞ்சலமின்றி சந்திப்பவன்!
எழுததெரிந்தவனுக்கெல்லம்-அவன்
ஏமாளி!
எழுததெரியாத அவனோ
கோமாளி!
ஆம்!
கோவணத்தையே
ஆவணமாய் வைத்திருக்கும் அவனை
எவரேனும் கண்டுகொள்வீர்களா?
உரித்த நெல்லைதான் காண்கிறோம்
சிரித்த அவன் பல்லை காணவில்லை!
பருத்த மேனியில்
பளிச்சென இருந்தால்
படிந்து பேசும்...
கருத மேனியில்
கலக்கமாய் இருந்தால்
கடிந்து பேசும்..
மானிடனே!
மண்ணிற்கு
மறுவாழ்வு கொடுக்கும்-இந்த
மகாத்மாக்களை
ஆண்டது போதும்!
ஆள விடுங்கள்
மற்றவனைபோல்
வாழவிடுங்கள்!
விஷத்தை உண்டு
நிஜத்தை இழந்த
பூமித்தாய்க்கு
தசத்தை சேர்த்து
ரசத்தை (பஞ்சகவ்ய) ஊற்று!
என்ற ஐயாவை
தன் வசத்தை இழுத்துகொண்டது
உனக்கே நியாயமா?
தஞ்சையின் நெற்களஞ்சியம்
தரணியின் சொற்களஞ்சியம்
இளமையான காட்டில்(இளங்காடு)
பிறந்து
வளமையான மரங்களை வளர்த்து
முதுமையான தோப்பில்
முக்கனியாய் நின்றுகொண்டிருக்கும்
நம்மாழ்வார் ஐயா- இனி
'நம்மை' யாழ்வார் மெய்யா!
எனும்
உறுதியோடு
இளங்காட்டு மருமகன்
உளம் வாட்டி எழுதும்
ஒரு
விவசாயகவிஞனின்
ஏட்டு சுரைக்காய் இது!

எழுதியவர் : வெம்மனி முருகேசன் (23-Jan-14, 10:46 am)
பார்வை : 104

மேலே