ரோட்டோரத்து மக்கள்
விழுந்து தெறித்த மழைத்துளி
வீணாகிப் போவதில்லை
நீங்கள்-
வீசி எறியும் பருக்கைகள்
எங்களுக்கு பசி ஆற்றுகின்றன
கந்தலில் ஆரம்பித்து
கட்டும் கோவணமும்
சொந்தமில்லை
வனவிலங்குகளாய் பிறந்திருக்கலாம்
வாடை காற்றுக்கும்
கோடை வெயிலுக்கும்
தோலேஆடை
இருட்டில் தடுமாறி
வெளிச்சத்தில் உருமாறி
இல்லாத நோயுக்கு ஆளாகி
யென்சொல்வொம் எம்வாழ்க்கை
வருத்தங்களை மறந்து
கட்டையை சாய்க்கும் நேரங்களில்
காக்கிசட்டைஓநாய்கள்
எம் கால்களைத் தட்டும்.
எங்கள் அவலட்சணங்கள்
ஏராளம் பேரை
எட்டிப் போகவைக்கிறது.
வேலை செய்ய தயார்
வேலை தருவது யார்
கரைபோட்ட வேட்டிக்காரர்கள்
கூட்டம் போடும்போது
எங்கள் கைகளில்
காந்தி நோட்டும்
கோழி பிரியாணியும்
ஒரு வரைமுறைக்குள் அடங்கிய
எங்கள் ஜீவநாதங்கள்
வருத்தும் பார்வையில் கழிகிறது
விடியலைத் தேடி
நாட்கள் கிழிந்து
ஆண்டுகள் மாறுகிறது
நாங்கள் மட்டும்
அதே ரோட்டோரத்தில் .......