நீ உறங்கியதை அறியாதவளாய் நான் 0தாரகை0

பல்துலக்க பற்பசை
மிதசூட்டில் குளிக்க நீர்
மேனி துடைக்க துண்டு
அன்றைக்கான ஆடை
எண்ணெய்,சீப்பு
இட்லி,கோப்பு
எல்லாமும் தந்தபின்
மறந்த காலுறைக்கு -நீ
முறைத்த போது
கவலைகொள்ளவில்லை நான்.

சாதம்,சாம்பார்,
அவியல்,பொரியல்
ரசம்,மோர்
எல்லாமும் மதிய உணவாய்,
வைக்கத்தவறிய ஒரு ஊறுகாய்க்கு - நீ
திட்டிய போது
கலங்கவில்லை நான்.

உப்பு,புளி
காரம்,ருசி
எல்லாம் சரியா என
கேட்கும் பொழுதே
அலைபேசி அணைக்கப்பட்டபோது
மனம் நோகவில்லை நான்

நேரத்தோடு வீடு வந்து
வெளியில் அழைத்துச் செல்வேனென்ற
உன் வாக்கை நம்பி
காத்திருந்த குழந்தை
கவலையோடு கண்ணுறங்கிய போதும்
பொறுமை காத்தேன்.

ஊரே உறங்கிய பின்
வந்து கதவை தட்டியபோது
நான் அசதியில் எழுந்துவர
நேரமானதால்
வசைபாடினாய் நீ
கோபப்படவில்லை நான்

சூடான தோசையும்
சுவையான சட்டினியும்
சுறுசுறுப்பாய் கொண்டுவந்து
சேர்ந்துண்ண அழைத்தபோது
வெளியில் சாப்பிட்டுவிட்டதாய்
நீ சொன்னபோதும்
பொங்கவில்லை என் கண்ணீர்.

தொலைகாட்சியை பார்த்துக்கொண்டே
நீ உறங்கியதை
அறியாதவளாய் நான்
படுக்கையை தயார் செய்து
பக்கம் வந்து படுப்பாய்
இரு வார்த்தைகள்
பேசலாமென காத்திருந்தது
கனவாய் போனபோது மட்டும்
மனம் நொந்தது
கண்ணீர் கொட்டியது
அலுத்து செத்தேன்.

எழுதியவர் : தாரகை (23-Jan-14, 10:07 pm)
பார்வை : 250

மேலே