ஒரு கிராமத்து விடியல்

அலையாத்திக் காடுகளும்,படகுகளும் அணையாய் நின்று கடலினைக் காத்துக் கொண்டிருக்கும் தமிழகத்தின் ஏனைய கடலோரக் கிராமங்களைப் போலத்தான் அந்தக் கிராமமும் இருந்தது.

வெயிலோடும்,காற்றோடும் தங்கள் வாழ்வைப் பகிர்ந்து கொண்டு, இந்திய இலங்கை அரசுகளோடு மல்லுக் கட்டியபடியும்,தமிழக அரசு நிறைவேற்ற வேண்டிய திட்டங்களை எதிர்பார்த்தபடியும்தான் கழிகிறது அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கை.

நெய்தல் நிலத்தின் மகிழ்வையும்,துன்பத்தையும் எழுதி, எழுதி..,இலக்கியவாதிகள் புகழ்பெற்றுக் கொள்வதற்கு காரணமாய் இருக்கின்ற, அந்த மீனவ மக்கள்..,தங்கள் வாழ்வை,அதன் இன்பங்களை,துன்பங்களை.தன்னைச் சுற்றி இயங்கும் சமூகத்தின் மீதான பார்வையைத் தாங்களே பதிவு செய்வது எனும் நிகழ்வு..அமாவாசையில் தெரிந்த நிலவு..போன்றதொரு அதிசயம்தான்.

அப்படியொரு அதிசய நிகழ்வைக் காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

அந்தக் கிராமம் அறந்தாங்கியிலிருந்து ஒரு மணிநேரப் பயணத்தில் எட்டும் கட்டுமாவடி..அன்று நிலவாய் இருந்தவர் நமது நண்பரும்,கவிஞருமான கவி கண்மணிதான்.!

ஆமாம்..அவர் எழுதிய சின்னச் சின்னத் தூறல்..எனும் கவிதைத் தொகுப்பின் வெளியீட்டு விழா.கட்டுமாவடியில் நிகழ்ந்தது.அவர் பெரிதும் மதிக்கும் கவிஞரான அறிவுமதி அந்நிகழ்வில் பங்கேற்று நூலினை வெளியிட்டு,வாழ்த்தும் சிறப்புரையும் வழங்கிச் சென்றார்.

நூல் வெளியிடுவதும்,சான்றோர் சிறப்புரை வழங்குவதும் சாதாரணச் செயல்கள்தானே..! இதிலென்ன அதிசயம் இருக்க முடியும்..? என்ற கேள்வி பலருக்கும் எழுவது இயல்புதான்.

ஆனால்..உறவினரின் இறப்புக்கு கூட,அந்தச் சடலத்தை அப்புறப்படுத்தும் நேரத்தைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு,அந்த சமயத்தில் மட்டுமே சென்று துக்கத்தை சிக்கனமாய்ப் பகிர்ந்து கொள்ளும் மனிதர்கள் வாழும் இந்த நாட்டில்..,பொதுவாய் நமது நகரத்தில்.., இலக்கிய கூட்டங்களுக்கு வருவதற்கு எங்கே நேரம் இருக்கும்..?

எவ்வளவு பெரிய எழுத்தாளராக இருந்தாலும்.. இலக்கியம்.. இலக்கியக் கூட்டம் எனில்,எண்ணி ஐம்பது பேர் அல்லது அதிகபட்சம் நூறுபேர் கூடுகின்ற நிலையில் ஒரு ஊரே திரண்டுவந்து..ஊராட்சித் தலைவர் முதல்,உள்ளூர் பொதுஜனம் வரை..கிட்டத்தட்ட முந்நூறு பேர்.., மடியில் பாலருந்தும் மகவினைக் கொண்டிருந்த தாய் முதல்.., தடியை ஊன்றி தள்ளாடி வரும் கிழவர் முதல்.., அடேங்கப்பா.. நிகழ்ச்சியின் இறுதிவரை இருந்து இவ்விழாவை சிறப்பித்துச் சென்றது பெரும் மகிழ்ச்கிக்குரியதாக இருந்தது.

கவிஞர் அறிவுமதி உட்பட,பேராசிரியர்கள்,கவிஞர் கவி கண்மணியின் பள்ளிக் கால ஆசிரியர், நண்பர்கள்..இன்னும் சில இலக்கியவாதிகள்..என அனைவரும் வாய்ப்பு கேட்டு,கேட்டு..மேடையில் வாழ்த்திச் சென்றது.. சாதாரணமாக பெரும் கவிஞர்களுக்கு கூட கிடைக்காத பெரும்பேறு என்றுதான் நான் சொல்லுவேன்.!

அது மட்டுமின்றி,தான் எழுதும் கவிதைகள், அவற்றின் தரம்..அதைக் கொண்டு இந்த சமூகத்தை எதிர்நோக்குவதில் உள்ள அச்சம் ஆகியவற்றால்,தனக்கான ரகசியமாகவே, கவிதைகளைப் பொத்திவைத்துக் கொள்ளும் நிலையில் பல கவிஞர்கள் இருக்கும்போது,இந்த நிகழ்வில்..கவி கண்மணியின் தாயார்,சகோதர, சகோதரிகள்,மாமா,மச்சான்,நண்பர்கள் என்று உறவினராய் உள்ள,ஊரார்கள் அனைவரும் ஒன்றிணைந்து,தங்கள் வீட்டில் நிகழும் ஒரு திருவிழா போன்று இயங்கிய காட்சி இன்னும் என் நெஞ்சைவிட்டு அகலவில்லை.ஆயுளுக்கும் மறக்கவும் முடியாது.

ஒரு கவிதை நூல் வெளியீட்டு விழாவினை, இவ்வளவு தூரம் இம் மக்கள் கொண்டாடுவதன் காரணம்தான் என்ன..?

இலக்கியம் என்பதில்,தங்களைப் பற்றி மற்றவர்கள் எழுதிக் கொண்டிருப்பதையே இதுவரை கண்டிருந்த அப்பகுதி மக்கள்,இன்று தங்களில் ஒருவரே அவ்வாறான இலக்கியவாதி,கவிஞர் என்று கண்டு கொண்டதே அவர்களின் மகிழ்ச்சிக்குரியதும், கொண்டாடுவதற்குமான காரணமாய் இருக்கிறது.
அந்த வகையில் அந்தக் கடலோரக் கிராமமான கட்டுமாவடியின் வரலாற்றில்..முதல்முதலாய் ஒரு கவிஞனின் கவிதைநூல் வெளியீடு என்பது வரலாற்றில் குறிப்பிடக் கூடியதாய்,கட்டுமாவடி எனும் தனது கிராமத்தை பெருமைப் படக் கூடியதாய்.. மாற்றிவிட்ட பெருமை, இருபத்தி மூன்றே வயது நிரம்பிய..கவி கண்மணியையே சாரும்..! வாழ்த்துக்கள் கண்மணி..! உங்களுக்கும்,உங்கள் தாயார் உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை இங்கு பதிவு செய்வதில் உவகையுறுகிறேன் நண்பா..!

காற்றிலே அல்லாடும் படகினை ஆதாரமாக்கி, உயிர்த்தலுக்கும்,மரணித்தலுக்கும் இடைப்பட்ட நேரத்தில், வலைவீசும்போது கிட்டும் மீன்கள் மட்டுமே,அன்றைக்கான வாழ்க்கையை நிர்ணயிக்கும்போதும்,கவிதைகளாய் இலக்கியப் பூக்களை படைத்திருக்கிறாயே..! இந்த சமூகம் குறித்து உன்னளவில் சிந்தித்து இருக்கிறாயே.. உனது கிராமத்தின் விடியலாய் முளைத்திருக்கிறாயே..! உனக்கு தலைவணங்குகிறேன்..!

உங்கள் சின்னச் சின்னத் தூறல்கள்.. இன்னும்.இன்னும் விரிவான பெருமழையாய் மாறட்டும்..இலக்கிய உலகத்தின் எல்லைக் கற்களில் ஒன்றாக நிற்கட்டும்..!

என்றென்றும் அன்புடன் பொள்ளாச்சி அபி.

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (28-Jan-14, 3:07 pm)
பார்வை : 268

சிறந்த கட்டுரைகள்

மேலே