சிறிதேனும் கேளுங்கள் நிந்திக்காமல்

ஐந்தறிவு பிராணிகள் சொல்லுது
ஆறறிவு மனிதர்க்கு போதிக்குது !
அமைதியாய் நம்மை பார்க்குது
அமர்ந்து கொண்டே யோசிக்குது !

நமக்குள் இல்லை வேறுபாடு
நிறத்தால் மற்றுமே மாறுபாடு !
இனத்தாலும் நாம் ஒற்றுமையே
குணத்தாலும் நன்றி உணர்வே !

மனிதர்களே பாருங்கள் எங்களை
மாற்றுசாதி பிள்ளைகள் நாங்கள் !
மனதில் இல்லை மாற்றுகருத்தும்
மாச்சரியம் இல்லை எங்களுக்குள் !

அழகைப் பாராமல் ஒன்றிடுவொம்
அன்பு மாறாமல் பழகிடுவோம் !
வாய் இருந்தும் பேசிட முடியாது
வாய்ப்பில்லை வாதிட முடியாது!

வளர்த்திடும் உங்களிடம் உள்ளதே
வளர்ந்திடும் தினமும் ஒரு சாதி !
வாய்ப்பே இல்லையா சாதியும் மறைய
வாழ்ந்து பாருங்களேன் ஒரு நாளாவது !

சாதிவெறி கொண்டு அலைகிறீர்
சாதிக்கொரு கட்சியும் காண்கிறீர் !
நாங்களும் அரசியலில் வந்தால்
நன்றிக்காக ஓட்டுவிழும் எங்களுக்கே !

சேர்ந்தே பிறந்தது எங்களிடம்
சேவகம் புரிந்திடும் எண்ணம் !
குருதியில் கலந்தது நன்றியுணர்வு
குறுந்தொகை அல்ல பெருந்தொகை !

சிந்திக்கும் திறனுள்ள உள்ளங்களே
சிறிதேனும் கேளுங்கள் நிந்திக்காமல் !
வாழும் காலம்வரை இணைந்திருங்கள்
வாழும் காலத்தில் இன்பமாய் இருங்கள் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (29-Jan-14, 10:37 pm)
பார்வை : 260

மேலே