அப்பத்தாவின் அடுப்படி வார்த்தைகள்
இடம் : நெரூர், கரூர் அருகில் உள்ள சிறிய கிராமம்.
அப்பத்தா இப்பதான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.
எனக்கும்தாம்பா கண்ணு. ஆனா எனக்கு இப்பத்தான் புதுசா பிறந்தாப்பில இருக்கு. இன்னைக்கு முதல் வேலையா காவேரிக்குப் போய் நல்லா குளிக்க போறேன்.
சரி போய்ட்டு வா. நா காலைல இடியாப்பமும் பாயாவும் செஞ்சு வைக்கிறேன்.
எங்கெங்கையோ போய் எதையோ தேடிக்கிட்டு இருந்த எனக்கு எங்க அப்பத்தா உருவத்தில கடவுள் காட்சி கொடுத்தாரு. என்ன உங்களுக்கு என் பேரு, ஊரு தெரியலையா?. ஒரு விவரமும் தெரியல. ஆனா இவன் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கானேன்னு நினைக்கிறீங்களா. கவலைய விடுங்க. நாலு வரி படிச்சதுக்கே உங்களுக்கு ஒன்னும் புரியல. நான் பிறந்து வளர்ந்ததிலேர்ந்து இருபத்தி அஞ்சு வருஷம் ஆயிருச்சு. எனக்கே இப்பதான் புரியுது. பொறுமையாப் படிங்க எல்லாம் புரியும். வரட்டா.
இடம் : கலிபோர்னியா அமெரிக்கா
உலகத்தில எத்தனையோ விஷயங்கள் பொதிந்து கிடக்கு. ஆனா நாமதான் எதை எதையோ தேடிக்கிட்டே போறோம்
"ஏன் டாட்."
"ஏண்டா ராலி இப்படி காலைல எழுந்தவுடனே புலம்பற. அவனவன் தூக்கத்தில தான் கண்டபடி பேசுவான். நீ தாண்டா வித்தியாசமா எந்திரிச்சவுடனே பேசற."
"போடா போ சீக்கிரம் எல்லாரும் ஆபிஸ் போகணும். சீக்கிரம் ப்ரஷ் பண்ணு."
"காரி இன்னைக்கு ஈவினிங் மீட்டிங் இருக்கு. அதனால டின்னருக்கு வரமாட்டேன்."
"நோ ப்ராப்ளம் முனி."
காரி, முனி இது என்ன பெயர் என்று குழப்பமாக இருக்கிறதா?
இவர்களுக்கு இரண்டு பையன்கள் ராலி, பாலி.
முனி என்ற முனியப்பன் பொருளாதாரத்தில் டாக்டரேட் முடித்துவிட்டு கடந்த 23 வருடமாக அமெரிக்காவில் உலக வங்கியில் நல்ல பதவியில் இருக்கிறார்.
காரி என்ற காயத்ரி ஒரு யுனிவர்சிட்டியில் லெக்சரராக பணிபுரிந்து கொண்டு இருக்கிறார். இவர்களுடைய மூத்த மகன் ராலி என்ற ராமலிங்கம் எம்பிஏ முடித்து விட்டு கார்பரேட் கம்பனியில் வைஸ் ப்ரசிடெண்ட்டாக வேலை செய்கிறான். இரண்டாவது மகன் பாலி என்ற பானலிங்கம் பயோ கெமிஸ்ட்ரியில் டாக்டரேட் வாங்கிவிட்டு சயின்டிஸ்ட்டாக இருக்கிறான். இத்தனை பெயர் சுருக்கமும் யு.எஸ் வந்தபிறகுதான்.
"அம்மா இந்த வாரமாவது நாம எல்லொரும் வீட்டில் ஒன்னா உட்கார்ந்து சாப்பிடுவோமா?"
"டேய் ராலி என் கையில என்னடா இருக்கு. எல்லாம் உங்க டாட் கையிலதான் இருக்கு."
"நாம மாசத்தில ஒரு தடவை வீட்ல மீட் பண்ணி பேசறதே பெரிய விஷயமா இருக்கும்மா. பேசாம நீ வேலையை விடேம்மா?."
"இன்னும் கொஞ்ச நாள்தான் கண்ணா. வீடு உங்க ரெண்டுபேருக்கும் வாங்கியாச்சு. எப்படியாவது நம்ம ஊர்ல பெரிய பிசினஸ் தொடங்க பணம் வேணும். இன்னும் கொஞ்சம் சேர்த்துட்டா நா ஜாலியா டைரக்டர்ன்னு போட்டுக்கிட்டு வீட்டிலேயே இருப்பேன்."
"போ போ நேரமாச்சு, ப்ரட் இருக்கு. டோஸ் பண்ணி சாப்பிடு. எனக்கு நேரமாச்சு."
"பை..."
- இப்படித்தான் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
இடம் : நெரூர்
"என்ன பாட்டி இப்படி எத்தனை நாளைக்குதான் தனியா சமைச்சு சாப்பிட்டுகிட்டு இருப்பீங்க. உங்க 3 மகன்கள்ல 2 பேர் வெளியூர்ல இருக்காங்க. பெரியவர் மட்டும் வெளிநாட்டில இருக்காரு. ஒரு மகளும் வடக்க இருக்காங்க. பேசாம அவங்கள்ல யார் வீட்டுக்காச்சும் போய்டவேண்டியதுதானே.?"
"அடி போக்கத்தவளே எலி வளையானாலும் தனி வளையா இருப்பா இந்த வீராயி."
வீராயி பாட்டி பேர்ல இருப்பது போல் நிசத்துலையும் வீரம் உள்ளவள். பசங்க எல்லா நல்ல நிலைமையில் இருந்தாலும் இன்னமும் தன்னுடைய கிராமத்துல தனி மனுஷியா விவசாயம் பாத்துகிட்டு சந்தோ&மா இருக்காங்க. ஊரே இவங்கள அப்பத்தான்னு தான் கூப்பிடும்.
"அப்பத்தா, அப்பத்தா..."
"யாரு, அட நம்ம முருகேசு மவனா. ஆமா. உங்க பெரிய மகன் பணம் அனுப்பிச்சுட்டாருன்னு மெயில் கொடுத்துருக்காரு."
"யாரு கேட்டா இவக பணத்தை. அனுப்பாதன்னு சொன்னா கேட்க மாட்டேங்கிறான்."
இரண்டு நாள் கழித்து போன் வருகிறது.
"அம்மா நா முனி பேசறேம்மா..."
"என்னப்பா சுகமா இருக்கியா?"
"உன் பொண்டாட்டி, என் பேரன் இரண்டு பேரும் எப்படி இருக்காங்க.?"
"நல்லா இருக்காங்கம்மா."
"ஏம்பா எப்பதான் நம்ம ஊருக்கு வருவே. உங்க ஐயா போனதுக்கு வந்தே. அதுக்கப்புறம் நீ வரவே இல்லை. வந்து 14 வருஷம் ஆச்சு. வாப்பா நீ சம்பாதிச்சதெல்லாம் போதும். நமக்கு ஐந்து தலைமுறைக்கும் உங்க அப்பா சேர்த்து வச்சுருக்காரு."
"எங்கம்மா வரணும்னு பாக்கறேன். ஆனா வேலை பளு ஜாஸ்தி இருக்கு. இதுல வேற சுகரு, ப்ரஷருன்னு இருக்கு. வரேன் வரேன். நீ உடம்புக்கு ஒன்னு இல்லாம இருக்கியா?"
"எனக்கென்னப்பா ஒரு வியாதியும் இல்ல. நீங்க இல்லாததுதான் ஒரு குறை. சரிப்பா. உனக்கு பைசா ஆகும் போனை வைக்கிறேன்."
ஒவ்வொரு வருஷமும் இந்த சன்னாசி கோவிலுக்கு மே மாசம் பத்து நாளும் திருவிழா நடக்கும் அவ்வளவு சிறப்பா செய்வாங்க. ஊர் சனம் எல்லாம் வருவாங்க. ம்.. நம்ம வீட்டிலதான் யாரும் வர மாட்டேங்கிறாங்க. என்ன செய்ய. நம்ம வேலையை பார்ப்போம்.
இடம் : கலிபோர்னியா அமெரிக்கா
"ஹலோ டாட். உங்களை பார்த்து நாலு நாளாச்சு. இந்த ரெசஷன் நேரத்தில உங்க ஆபிஸ் வேலை எல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு?"
"அது வந்து ராலி எல்லாருக்கும் இருக்கறாப்ல எங்களுக்கும் இருக்கு. என்ன பாதி பேர வேலைய விட்டு எடுத்ததால, நாலு பேரு செய்யற வேலைய ஒரே ஆளு பார்க்க வேண்டியிருக்கு என்ன செய்ய.?"
"உனக்கு எப்படி இருக்கு?"
"உங்களை மாதிரிதான் எனக்கும். அதனால எனக்கு டென்ஷன் ஜாஸ்தியா இருக்கு டாட்."
"நீ பேசாம மன அமைதிக்கு யோகா, தியானம்ன்னு ஏதாவது ஒண்ணுல சேரு."
"அப்பா நான் மட்டுமா?. நம்ம வீட்டில எல்லாரும் சேரணும். அப்பதான் நாம எல்லாரும் ஒத்தருக்கொத்தர் மனம் விட்டு பேசுவோம். பாலி எப்பப்பாரு ரிசர்ச்ன்னு போய்கிட்டே இருக்கான். கூடிய சீக்கிரம் ஜாயின் செய்யறேன்."
"டாட், இரண்டு நாள் கழித்து எனக்கு ஆபிஸ் விஷயமா மும்பை போகணும். இருபது நாள் டூர். ஆனா நான் எக்ஸ்ட்ரா லீவ் எடுத்துகிட்டு ஜாலியா டெல்லி, மும்பைன்னு அப்படியே சுத்திட்டு வரேன்."
"டேய் ராலி இண்டியா போறேன்னா உங்கப் பாட்டியை பார்த்துட்டு வாடா. ரொம்ப சந்தோஷப்படுவாங்க. நாங்கதான் ஊருக்கு போய் பல வருஷமாச்சு. நீயாவது போய்ட்டு வாடா"
"போப்பா. நா போறது ஆபிஸ் டூரு. இதுல எங்கேயோ ஊர்கோடில இருக்கிற ஊருக்கு எப்படி போறது? ஐ டோண்ட் வாண்ட் டு வேஸ்ட் மை டைம்..."
ராலி அங்கிருந்து வெளியேறுகிறான்.
காரியும் முனியும் காரை எடுத்துக் கொண்டு செல்கிறார்கள்.
"ஏங்க நம்ம ராலிக்கு அடுத்த வருஷத்துக்குள்ள கல்யாணம் செய்யணும்."
"ஏன் இப்படி சொல்ற?."
"இப்பவே ஒர்க் ப்ரெஷர் அவனுக்கு ஜாஸ்தி. மேரேஜ் பண்ணா கொஞ்சமாவது சந்தோஷமாக இருப்பான். அதான் சொல்றேன்."
"என்கிட்ட சொல்றதைக் காட்டிலும், அவனுக்கு மனசுல காதல் கீதல் இருக்கான்னு பாரு. அப்படி இருந்தா கல்யாணத்தை பண்ணிடலாம்.
மறுநாள் காலை.
"டேய் ராலி உனக்கு ப்ளைட் ஒன்பது மணிக்கு. எல்லாம் மறக்காம எடுத்துக்கோ."
"ஒகேம்மா."
ராலி கிளம்பிவிட்டான்.
இங்கு அவனைச் சேர்ந்தவர்கள் வழக்கம் போல் பிஸியாகிவிட்டார்கள்.
இடம் : மும்பை
ஒரு வழியா மீட்டிங் எல்லாம் முடிஞ்சாச்சு. இன்னிமே ஊர் சுத்த வேண்டியதுதான்.
போன் வருகிறது.
"ஹல்லோ யெஸ்..."
"டேய் நா அம்மா பேசறேன். சொல்லு காரி, உன் பாட்டிக்கு அப்பா போன் போட்டு நீ வரதா சொல்லிட்டாரு. பேசாம ஒரு ரெண்டு நாள் தலைய காமிச்சுட்டு வா."
"ஹெள போரிங்க். ஏம்மா என்னைய ப்ரீயாவே இருக்க விடமாட்டீங்களா. நா ஜாலியா சுத்தல்லாம்னு பார்த்தா இப்படிப் படுத்தறீங்களே."
"ப்ளீஸ் கண்ணா."
"ஓகே ஒகே. ஆனா நெக்ஸ்ட் வீக் தான் போவேன். சரிம்மா. பை."
இடம் : நெரூர்.
ராலி என்ற ராமலிங்கம் தன்னுடைய சிறிய வயதில் இந்த ஊருக்கு வந்த பிறகு இப்பதான் பயணம் ஆரம்பம் ஆகிறது. ஒரு வழியாக கரூர் பஸ்டாண்ட் வந்து, எதிரில் உள்ள திருவள்ளுவர் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு நெரூர் போவதற்கு அங்கேயே ஒரு டாக்ஸியை பிடித்துக் கொண்டு போகிறான்.. ஐயோ எல்லா இடத்திலும் என்ன கூட்டம், அப்பா கடவுளே சீக்கிரம் பாட்டியை பார்த்துவிட்டு எப்படியாவது இன்றைக்கே ஊர் திரும்பிடணும் என்று மனதில் நினைக்கிறான். ஊரெங்கும் பச்சைப்பசேல் என்று இருக்கிறது. அடுத்த அரைமணி நேரத்தில் நெரூர் அக்ரஹாரத்தை நெருங்குகிறான். அதன் தெரு நுழைவாயிலில் பிள்ளையார் கோவில் இருக்கிறது.
பாட்டி வீடு எது என்று விசாரிப்பதற்குள், தெருவில் ஒரு பையன் அப்பத்தா பிளஷர் காரு வந்துருச்சு. உங்க பேரன் வந்துட்டாரு என்று கத்துகிறான். இவனுக்கு சிரமம் வைக்காமல் காரும் சரியாக அவன் பாட்டி வீட்டில் நிற்கிறது. அவங்க வீட்டில் சுத்திக் கூட்டமாக உள்ளது.
"இவனுக்கு வெட்கமாக இருக்கிறது. என்ன முட்டாள் மனிதர்கள். ஒருத்தரு ஊரிலேர்ந்து வந்தா கொஞ்சம்கூட நாகரீகம் இல்லாமல் இப்படி வேடிக்கை பார்க்கிறார்களே..." என்று மனதில் ராலி நினைக்கின்றான்.
"ஏய் வாணி அந்த ஆரத்தி தட்டை எடுத்துட்டு வா. கமலா நீங்க ரெண்டு பேரும் ஆரத்தி எடுங்க." அப்பத்தாவின் குரல்.
அவர்கள் ஆரத்தி எடுத்தவுடன் வீட்டின் உள்ளே வருகிறான்.
"வா ராமலிங்கம் நல்லாயிருக்கியா ராசா?. இப்பதான் உனக்கு வழி தெருஞ்சுச்சா?. அப்படியே உன் அப்பன் முனியப்பன் மாதிரியே இருக்க."
"எலேய் சரவணா நம்ம பேரனுக்கு சுடுதண்ணி போட்டாச்சா?. இந்தா இப்படி உட்காரு. ஊர்ல உன் அப்பா, அம்மா, பானலிங்கம் எல்லாம் எப்படி இருக்காங்க?."
"ம் நல்லாயிருக்காங்க."
"குளிச்சுட்டு வா. சுடச்சுட இட்டிலியும், சாம்பார், சட்டினி இருக்கு. சீக்கிரம் சாப்பிடலாம். என்னப்பா முழிக்கிற?."
"இல்ல பாட்டி ஊர்லேர்ந்து வரும் போது ரொம்ப பசியாயிருந்தது. அதான் ஹோட்டல்ல சாப்பிட்டேன்."
அடடா, சரி பரவாயில்லை. மத்தியானத்துக்கு அப்பத்தா சமையல் தான். நல்லா சாப்பிடலாம்.
மதியம் அவனுக்காக அவன் அப்பத்தா விருந்தே தனியாளாக தயார் செய்து விட்டார்.
அவனுக்கு தலை சுற்ற ஆரம்பித்து விட்டது. உடனேயே கிளம்புவோம் என்று நினைத்தால் இவர்கள் விட மாட்டார்கள் போல. சாப்பாடு சாப்பிட்டவுடன் அவனுக்கு என்ன சொல்வதன்று தெரியவில்லை. அவ்வளவு ருசியாக இருந்தது. ஆனால் அவன் வாயிலிருந்து ஒரு வார்த்தை, ஒரு பாராட்டு வரவில்லை. சற்று நேரத்தில் தூங்கி விட்டான். விழித்துப் பார்க்கும் போது மணி 7.30 ஆகியிருந்தது. அவ்வளவு பெரிய வீட்டில், நடுவில் முற்றம் வேறு இருந்ததால் நல்ல காற்று வேறு இதமாக அடித்ததால் நேரம் போனதே தெரியவில்லை.
ராமலிங்கம் வந்ததிலிருந்து பாட்டியுடன் ஒரிரு வார்த்தைகள் தான் பேசினான். ஆனால் அவன் பாட்டி ஓயாமல் பேசிக் கொண்டே இருந்தாள். இரவு அவனுக்கு டிபன் ரெடியாக இருந்ததால் சாப்பிட்டு விட்டு திண்ணையில் உட்கார்ந்து விட்டான் சற்று காற்றோட்டமாக இருக்கும் என்று. அப்பொழுதான் பார்த்தான். அவன் வீட்டு வாசலில் மண் ரோடு. நடுவில் வாய்க்காலில் தண்ணீர் ஒடுகிறது. அதற்கு எதிர்புறம் மண்ரோடு, அப்புறம் வீடு. இந்த வாய்க்கால் இருமருங்கிலும் பத்தடிக்கு பத்தடி மாமரம் பெரிதாக இருக்கிறது. காற்று காதில் கவிதை பாடுகிறது. மிகவும் ரம்மியமான சூழலை அவன் முதன்முறையாக ரசிக்கிறான்.
அப்பொழுது தீடீரென்று கரண்ட் கட்டாகிவிட்டதால் ஊரில் அனைவரும் வாசலுக்கு வந்து அவரவர் வீட்டு திண்ணையில் அரட்டை அடிக்கின்றனர். பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் இவனைப் பார்த்தவுடன் அமெரிக்கா கதைகளை கேட்கின்றனர்.
"என்ன தம்பி உங்க நாட்டில மின்சாரமே போவாதாமே?. ரோடு எல்லாம் அவ்வளவு சுத்தமா இருக்குமாமே?. உங்கப்பாரு நா எல்லாம் அந்த பஞ்சமாதேவி பள்ளிகூடத்தில ஒன்னா படிச்சோம். பின்ன மேற்கொண்டு படிக்க டவுனு பள்ளிக்கூடத்துக்கு போனோம். நான் பத்தாவது பெயிலாகிட்டேன். உங்கப்பாரு நல்லா படிச்சு நல்ல நிலைமைக்கு வந்துட்டாரு. நீங்க ஊருக்கு போனா என் பேரச் சொல்லுங்க. சண்முகம்ன்னு."
"......."
"நீங்க எத்தன நாளைக்கு தங்கப் போறேங்க?"
"அட சண்முகம் இப்பத்தான் என்பேரன் வந்திருக்கான். உடனே கேள்வி கேட்டா எப்படி. கொஞ்ச நாள் இருந்துட்டுதான் போவான். நீ பேசாம இரு."
"அது இல்ல அப்பத்தா நம்ம ஊரை சுத்திப் பார்க்கணுமில்ல. அதான் சொன்னேன்."
"எல்லாம் பார்க்கலாம்..."
அதற்குள் ராமலிங்கத்திற்கு மனசு பகீரென்றாகிவிடுகிறது.
அப்பாடா ஒருவழியா கரண்ட் வந்துருச்சு. பேசாம போய் எல்லாம் தூங்கலாம். ஆனால் இவனுக்கு அமெரிக்காவில் சொகுசாக இருந்து விட்டு இங்கே கயித்துக்கட்டிலில் படுக்க ஏனோ தூக்கம் வரவில்லை.
மறுநாள் காலை குளித்து முடித்துவிட்டு அவன் அப்பத்தாவுடன் ப்ரம்மேந்திராள் கோவிலுக்கு கிளம்பினான்.
அவன் பாட்டி சொன்னாள். "நா வாக்குபட்டு வந்ததிலேர்ந்து இந்த சன்னாசி சாமி தான்(சந்நியாசி) எல்லாம்..."
அந்த ஒத்தையடிப் பாதையில் இருபுறமும் மரமும், அதற்கு ஒட்டின இடத்தில் பச்சைபசேலன பயிர்கள் காற்று அசைவுக்கேற்ப நடனமாடிக் கொண்டு இருந்தன. அப்பத்தா வீட்டிலிருந்து கோவில் ஏழு நிமிஷ நடை. கோவிலைச் சுற்றி நிலத்தில் பயிர்கள் அழகாக காட்சி அளித்தது. கோவிலின் உள்ளே கிணறு இருந்தது. அங்கே சாமி கும்பிட வருபவர்கள் கால் அலம்ப வசதியாக இருந்தது. உள்ளே அழகான மண்பிள்ளையார் இருந்தது.
அவனுடைய அப்பத்தா சொன்னார், "ராமலிங்கம் இந்த பிள்ளையாரு தானா தோன்றிச்சு. அவ்வளவு சக்தி வாய்ந்தது. அம்பாளையும், சிவனையும் கும்பிட்டுவிடு, அந்த ப்ரஹாரத்தின் உள்ளே லிங்க வடிவில் அவர் ஜீவசமாதியாக இருக்கிறார். அதனை ஒட்டியே தலவிருட்சமாக வில்வமரம் இருக்கிறது."
ராமலிங்கத்திற்கு தெய்வ நம்பிக்கை இருந்தாலும், அவ்வளவாக கும்பிடமாட்டான். முதல் முறையாக அவனுக்கு சொல்லத் தெரியாத மன அமைதி ஏற்பட்டது.
அப்பத்தா சொன்னார், "தம்பி ரொம்ப சக்திவாய்ந்த சாமி இவரு. மூணு இடத்தில ஜீவசமாதி இருக்கு. இந்த சாமிய முணுமுறை சுத்தி வந்தா நினைச்சதெல்லாம் நடக்கும் என்று சொல்லி இருவரும் வலம் வந்தனர். பின்னர் கோவிலை ஒட்டியே கைலாச ஆசிரமம் இருக்குது. இதுல சதாசிவ அடிகள் இருந்தாரு. அவரு சன்னாசி சாமியோட சிஷ்யனா இருந்தாராம். இப்பத்தான் சனவரி மாசம் கும்பாபிஷேகம் நடந்துச்சு இந்த கோவிலுக்கு. அப்ப இந்த ஆசிரமத்தில தான் அன்னதானம் நடந்தது. சுத்துபட்டு மக்கள் எல்லாரும் வந்தாங்க. வா சித்த நேரம் ஒக்காரணும். வா இப்படி ஒக்காரு. என்னதம்பி அமைதியா இருக்க?."
"இல்ல அப்பத்தா ஒன்னுமில்ல. அவன் வாயிலிருந்து முதல் முறையாக அப்பத்தா." என்று சொன்னான்.
"இந்தக் கோவிலுக்கு வெளியே இடப்புறம் திரும்பிப் போனா கடைசில காவேரி வரும். போய் பார்க்கலாமா?."
"போவோம் அப்பத்தா."
"ஏன் சாமிகும்பிட்டு கோவில்ல ஒக்காருறோம்னு தெரியுமா?"
"தெரியாது அப்பத்தா..."
"கோவிலுக்கு போகும்போது சுத்தமா காலைக் கழிவிட்டுப் போறோம். ஆனா வரும் போது கோவில்ல திருநீறு, குங்குமத்த தவிர வேற எதுவும் எடுத்துகிட்டு போகக்கூடாது. கால்ல ஏதாவது ஒட்டிகிட்டு இருந்தா என்ன செய்யறது. சிவன் சொத்து குலம் நாசம்ன்னு சொல்லுவாங்க. அதான் கோவில விட்டு எழுந்திருக்கும் போது தட்டிவிட்டு எழுந்திருக்கணும்."
அவர்கள் இருவரும் காவேரியைப் பார்க்க கிளம்பினர்.
"ஏன் அப்பத்தா உங்களுக்கு வீட்டில ஒத்தையாள இருக்க பயமா இல்லையா?."
"எனக்கா? எனக்கு ஒன்னும் பயம் கிடையாது. நம்ம வீட்டுள்ள ஒரு தடியான ஆளைப் பார்த்தேல்ல. அவன் பேரு பாண்டி. ஒரு நா ராத்திரி தனியா தூங்கிக்கிட்டு இருந்தேன். ஏதோ சத்தம் வருதேன்னு பார்த்தா இவன் கையில கத்திய வைச்சுக்கிட்டு மிரட்டிப் பணம் நகை எங்க இருக்குன்னு கேட்டான்?. அப்ப நான் உனக்கு இப்படி ஒரு பிழைப்பு தேவையா?. உனக்கு வேலை வேணும்னா கேளு தரேன். இல்ல சோறு வேணும்னா கேளு தரேன். அதற்கு பதிலா எதுவும் தரமாட்டேன் என்று சொன்னேன். அவனுக்கு பகீரீன்னு இருந்துச்சு... ஒருவழியா பேசி, சமாதானம் செஞ்சு வேலைக்கு வைச்சுகிட்டேன். இங்க வந்து பத்து வருஷமாச்சு. சொக்கத் தங்கமா இருக்கான். இந்தக் காலத்தில கடவுளுக்கு யாரும் பயப்படுறதில்லை. மனுஷனுக்கு மனுஷன் தான் பயப்படுகிறான்."
ஒரு வழியாக காவேரி ஒடுவதை பார்க்க வந்தனர்.
"என்ன அப்பத்தா காவேரில ரெண்டு பக்கமும் கரை புரண்டு ஓடும்னு பார்த்தா இப்படி கொஞ்சமா தண்ணி ஒடுது..."
"நான் ஒன்னைய ஒரு கேள்வி கேட்கிறேன். நீ அழகாக டிரஸ் போட்டுக்கிட்டு இருக்க. ஒரு வயசு பொண்ணுங்க பார்க்காம போனா உனக்கு எப்படி இருக்கும்?"
"அதுவந்து அப்பத்தா, அட தயங்காம சொல்லு..."
"மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கும்."
"அப்படிபோடு. அதுபோலத்தான் இங்க காவேரி ஒரு காலத்தில ரெண்டுகரையையும் தொட்டுக்கிட்டு ஒடிச்சு. அப்ப ஆடி பதினெட்டு, தைமாசத்தில கணு பண்டிகைக்கு மக்கள் வருவாங்க. சந்தோஷமா பார்ப்பாங்க. ஆனா இப்ப மக்கள் மனசு சுருங்கினாப்பில, காவேரியும் தன்னைய சுருக்கிகிட்டா. ஆனா குறைசொல்றது காவேரியதான். தண்ணியே ஓடலன்னு சொல்றது. அவளுக்கு எப்பவாச்சும் சந்தோஷம் வந்தா வெள்ளமா பெருக்கெடுத்து ஓடுவா. இந்த தண்ணி அந்த நாள்ல ஜாஸ்தியாகும்போது நம்ம வீட்டுவாசல்ல வாய்கால்ல தண்ணி நிறைய வரும். இப்ப கொஞ்சதான் வருது. சரிசரி ஒரு கும்பிடு போட்டுக்கிட்டு கிளம்புவோம்."
அவர்கள் இருவரும் வீடு வந்து சேர்கின்றனர். இரண்டு நாள் கழிச்சு ஊருக்கு கிளம்ப வேண்டும் என நினைக்கின்றான்.
மறுநாள் அவன் அப்பத்தா சமைக்கும் சமையலறையில் வந்து உட்காருகிறான்.
"என்ன அப்பத்தா விறகு அடுப்பிலையா சமைக்கிறீங்க?."
"ஆமாம்பா. அப்பதான் ருசியா இருக்கும். ஊர்லேர்ந்து வந்த அன்னைக்கு சாப்பாடு ருசியா இருந்துச்சா?"
"சூப்பரா இருந்துச்சு."
"எல்லா அம்மி, ஆட்டுக்கல்ல அரைக்கிறதுதான். எனக்கு அரைச்சுக் கொடுக்க ஒரு பெண் இருக்கா."
"ஏன் அப்பத்தா கேஸ் அடுப்பு வாங்கித்தரவா?"
"ஐய்யோ சாமி அதெல்லாம் வேண்டாம். உன் சித்தபாரு கேட்டாரு. எனக்கு இதுதான் வசதி என்று அடுப்புக்கு கோலம்போடு பற்றவைத்து "நமச்சிவாய வாழ்க, நாதந்தாழ் வாழ்க என்று அத்தனையையும் சொல்லி முடிக்கும் போது பாதி சமையல் ஆகிவிட்டது."
"ஏன் சாமி உன் பேரை ஏன் சுருக்கி சொல்றாங்க.?"
"........"
"ஏன் தெரியுமா முழுபெயரையும் கூப்பிடணும்னு சொல்றேன். எல்லாருக்கும் கடவுள் பேரு தான் முக்காவாசி வைப்பாங்க. அப்படி முழு பெயரும் கூப்பிடும்போது, மனசுல நல்ல எண்ணம் வரும். காலத்துக்கும் நல்ல பதிவா இருக்கும். உன் பேரக் கூட அப்படி கூப்பிட்டா நல்லா இருக்கும்பா. காலம் மாறிடிச்சுன்னு எல்லாத்தையும் சுருக்கிக்கக் கூடாது ராமலிங்கம். வாழ்கையில நிறைய பணம் சேர்த்துக்கிட்டே போறாங்க மனுஷங்க. ஆனா கடைசில மனசு நிம்மதி இல்லாம, உடம்புசு கமில்லாம டாக்டருக்கிட்ட கொட்டி கொடுக்கிறாங்க. மன அமைதிக்கு யோகா, தியானம் அப்படின்னு செய்யறாங்க. நம்ம ஊரு திருவிழா, வீட்டில உள்ள பண்டிகைகள ஒழுங்கா செஞ்சு சாமிகும்பிட்டாலே எல்லா சரியாயிடும்."
"........."
"அந்த நாள்ல மாசத்துக்கு ஒரு பண்டிகை வரும். எல்லாரும் சந்தோஷமா இருப்பாங்க. ஒத்தருக்கொருத்தரு இனிப்பு கொடுத்து மகிழ்ச்சியா இருப்பாங்க. அப்ப வீடும் சுத்தமாகும். மனசும் மகிழ்ச்சியா இருக்கும். ஊர்த் திருவிழா எதுக்கு வைக்கிறாங்க தெரியுமா?. பொதுவா வீட்டில விசேஷம்னா வீடு சுத்தமா இருக்கும். அதே இது கிராமத்தில திருவிழான்னா ஊர்ல எல்லாரும் அழகாக சுத்தம் பண்ணுவாங்க. எல்லாரும் வருஷத்தில அந்த நாள் வரும் போது எல்லாரும் சந்தோஷமா இருப்பாங்க. வயசுப் பொண்ணுங்க, பசங்க வருவாங்க. அத்தனை பொண்ணுங்களையும் ஒவ்வொரு வீடா பொண்ணு பார்க்க முடியாது. இந்த சந்தர்ப்பத்தில பார்த்து, ஒத்தருக்கொருத்தர் பிடித்திருந்தால் கல்யாணம் கட்டிப்பாங்க."
"........"
அதேபோல வருஷத்து ஒருநாள் குலதெய்வத்துக்கு சாமிகும்பிட்டு படையல் போடுவாங்க. ஏன் தெரியுமா?. அந்த நாள்ல அந்த குடும்பத்தில எல்லாரும் ஒரு சாமிய குலதெய்வமா எடுத்துக்கிட்டு வழிவழியா எல்லாம் செய்வாங்க. குல தெய்வம் ஒன்னு வானத்திலேர்ந்து குதிக்கலப்பா. நம்ம ஒன்னா மனசில எடுத்துக்கிட்டா அந்த நேரத்தில எல்லாரும் ஒருமனசோட கூடும்போது மனசு லேசாகிவிடும். வருஷா வருஷம் செய்யும் போது கிராமத்துல உறவு நீடிக்கும் எல்லார்கிட்டேயும். எல்லா காரணமும் நல்லதுக்குத்தான்."
"......."
நீ கடவுள் எங்க இருக்கார்ன்னு கேட்டா என்ன சொல்லுவ?."
"கோவில்ல இருக்காருன்னு சொல்லுவேன்."
"அதான் இல்ல. நம்ம மதத்தில என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா, நீயும் கடவுள், நானும் கடவுள்னு. ஆனா ஒவ்வொருபடியா போனாத்தான் புரியும். நம்ம உருவ வழிபாடு செஞ்சு, பிறகு அதையே முறையா தியானத்தில ஈடுபடும்போது வெளிய இருக்க கடவுள்தான் உள்ள இருக்காருன்னு புரியும். அப்படி புரியும்போது சகமனிதனை சமமா பார்போம். எங்க இந்த எண்ணம் வரவில்லையோ அங்க வேறுபாடு மனசுல வருது. அந்தக் காலத்தில ஒரு தவறான செயல் செய்யக்கூடாதுன்னா உடனே பெரியவங்க சொல்லுவாங்க, அப்படிசெஞ்சா கடவுள் தண்டிப்பாருன்னு சொல்லுவாங்க. ஏன் தெரியுமா, நாமே கடவுள்ன்னு உணருகிற வரை அந்த பயம் வேண்டும். அப்பொழுதுதான் நாம் நல்லவிதமாக தீங்கு செய்யாமல் எல்லோருக்கும் நல்லதே செய்வோம். எத்தனையோ வி"ஷம் கொட்டிக்கிடக்கு ராசா. நாம எதையோ தேடிக்கிட்டு இருக்கோம்."
"......."
"ஒவ்வொருத்தரும் பிழைப்புக்காக வெளிநாடு போறாங்க. போகட்டும். நல்லா சம்பாதிக்கட்டும். சம்பாதிச்சுட்டு பின்ன அவங்க கிராமத்துக்கு வந்து நல்லது செய்யணும். நிம்மதி வேணும்னு பணம் பின்னாடி போகக்கூடாது. எல்லாரும் நல்லது செஞ்சா மனசு தானா அமைதியா இருக்கும்பா. இதத்தான் உங்க அப்பன்கிட்ட சொன்னேன். கேட்கல. நீயாவது கேளுப்பா."
அவனுக்கு மிகவும் ஆச்சரியமா இருந்தது. நம்ம அப்பத்தா படிக்கவே இல்லை. ஆனால் இவ்வளவு விஷயத்தையும் அடுப்பங்கரையிலே சொல்றாங்க.
"இங்க பாரு அமெரிக்காவுல நீங்க உழைச்சு அந்த நாட்டை முன்னேத்துறீங்க. ஆனா அவுக மன அமைதிக்கு நம்ம நாட்டைத் தேடி வர்றாங்க. நம்ம நாட்டுக்கு நீங்க கூட்டிட்டு வாங்க. நல்லாச் சொல்லிக் கொடுங்க. தப்பு சொல்லல. ஆனா நம்ம மண்ணோட ஜீவன் இங்கதாம்பா இருக்கு. எப்ப நாம இயற்கைய நேசிக்கிறமோ, அப்பதான் நம்ம இதயத்தில கடவுள் இருக்காருன்னு தெரியும். எப்ப நீயும், நானும் ஒன்னுன்னு உணர்கின்றோமோ, அப்பதான் கடவுள்தன்மை வெளிப்படும். அப்ப நீயும் கடவுள், நானும் கடவுள்."
"..........."
"சரிசரி நா பாட்டு பேசிக்கிட்டே இருக்கேன். வா வந்து சாப்பிடு. சமையல் முடிச்சாச்சு" என்று அப்பத்தா கூப்பிடுகிறாள்.
அவனுக்கு அப்பொழுதுதான் பொட்டில் அரைந்தார்போல் ஞானம் வருகிறது.
ஒருவழியாக மனசே இல்லாமல் ஊருக்கு கிளம்புகிறான்.
"அப்பத்தா நா பேசாம வேலைய விட்டுட்டு வந்து இங்கேயே இருந்திடறேன்..."
"அப்படி சொல்லாதப்பா. உனக்கு ஒரு பொறுப்பான வேலை இருக்கு. அதை நல்லபடியா ஒருத்தருக்கிட்ட ஒப்படைச்சுட்டு வா. நா இங்க தான் இருப்பேன். எந்த ஒரு விஷயத்தையும் முழுமையா செய். கடவுள் துணை இருப்பாரு.
ராமலிங்கம் அரைமனதுடன் புறப்பட்டு செல்கிறான். அவன் மனதில் எண்ணம் தோன்றுகிறது. எங்கேயோ போய் தியானம் கத்துக்கொள்வதைவிட, இப்படி அனுபவமாக கத்துக்கொண்டது அவனுக்கு மனதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது."
இடம் : அமெரிக்கா
"அப்பா, அம்மா எப்படி இருக்கீங்க?"
"என்னடா அதியசமா தமிழ்ல கூப்பிடற?"
"எல்லாம் ஒரு நல்ல மாற்றம்தான் அப்பா. நான் கூடிய சீக்கிரம் வேலைய விட்டுட்டு நம்ம நெரூருக்கே போகப்போறேன்."
"என்னடா சொல்ற?"
"ஆமாம்பா உங்க தலைமுறையோட எல்லாம் போச்சுன்னு நினைக்கிறாங்க. மறுபடியும் அடுத்த தலைமுறை வந்த இடத்துக்கே போகப் போறேன். வாழ்க்கை ஒரு சக்கரம். எங்கு ஆரம்பிக்கிறதோ அங்கேயே முடியும்பா. உங்களுக்கு எல்லாம் சொன்னா புரியாது. அனுபவித்தால் தான் தெரியும்."
என்ன இப்பவாது புரியுதா?. இந்த கதைய படிச்சுட்டு மீண்டும் முதல் பகுதியைப் படியுங்கள். அப்ப புரியும்.
இத படிச்சுட்டு நான்கு பேர் மாறினாலே ரொம்ப சந்தோஷம்.