தோழி

"வேல நாட்டுப் பொன்னி"

"அய்யய்யோ... என் பெயர் வளநாட்டுப் பொன்னி... சரியாதானே எழுதியிருந்தேன்" என்றேன்.

"மன்னிச்சுக்கம்மா... ஆங்கிலத்துல படிக்கும்போது.. தப்பாயிடுச்சு... வித்தியாசமான பெயர்... இப்பல்லாம் தமிழ்ல்ல யாரும்மா பெயர் வெக்கறாங்க... ரொம்ப ரசனையோட இந்தப் பேரை உனக்கு வெச்சுருக்காங்க."

ரயில் நிலையப் பயணச் சீட்டு வழங்குமிடம் கூட்டமாக இருந்தது. அப்பாவின் மேல் பெருமையாய் இருந்தது. முறுக்கிய மீசையும் சுற்றிய கழுத்துத் துண்டும், செருப்பணியாத காலும், அப்பாவுக்குத் தன் மண்ணின் மேல் அலாதிப் பிரியம். அதனால்தான்...

"சாரிம்மா.. மத்தியான ரயில்ல இடமில்ல... சாயங்காலம் ஆறே கால் ரயில்லதான் இடமிருக்கு"

தலையாட்டினேன். கம்ப்யூட்டர் லேசாய் சப்தமிட்டு பின் நீளமாய் அட்டையை வெளித் தள்ளிற்று.

மாலை வரை என்ன செய்வது?

ரயில் நிலையத்தில் ஓசித் தொலைக்காட்சிப் பார்க்கலாம். கொஞ்ச நேரம் புத்தகம் படிக்கலாம். அப்புறம்... நாலு மணி நேர இடைவெளிக்குப் பிறகு என்ன செய்வதென்று தோன்றவில்லை.

எதிர்புறம் ஒரு சினிமா தியேட்டர் தெரிந்தது.

வரிசை மிகவும் நீளமாய் இருந்தது. எல்லாரும் பதற்றமாய் நின்று கொண்டிருக்க... வெயில் தலையைத் தீய்த்தது. தலையில் கைக்குட்டையை விரித்துப் போட்டபடி வரிசையின் கடைசியில் நின்று கொண்டேன்.

வரிசை நகரவே இல்லை.

"இன்னும் டிக்கெட் தரவே ஆரம்பிக்கல.. கண்டிப்பா கிடைக்கும். இப்பல்லாம் யாரு தியேட்டர்ல வந்து படம் பாக்கறாங்க..."

வரிசை முழுக்க ரொம்ப கவலைப்பட...

அந்தப் பெண்கள் இருவரும் எனக்கு முன்னால் நின்று கொண்டிருந்தார்கள். ஒன்று உயரமாய்.. சிவப்பாய் இருக்க.. உடன் வந்தவள்.. குள்ளமாய்க் கண்ணாடிப் போட்டிருந்தாள்.

பெண்களின் மேல் எனக்குப் பல சமயங்களில் ஆச்சரியம் வருவதுண்டு. இந்தப் பெண்களில் எத்தனைவிதம்..

உயரமான பெண். அடிக்கடி சம்பந்தமில்லாமல் சிரித்தாள். அடி ஈறு தெரிய உதட்டை இழுத்து மெல்ல கண்ணிரண்டும் தாழ இமைக்காமல் எங்கோ முன்புறம் பார்த்து பின் "வெடுக்"கெனத் தலை திருப்பி...

அவர்களுக்கு முன் ஒரு கல்லூரிக் கூட்டம் நின்றிருந்தது. கூலிங் கிளாசும் கருத்த உதடுகளுமாய் ஒருவன் திரும்பி நின்று அவளையே பார்த்துக் கொண்டிருக்க... அந்தப் பெண்ணின் தடுமாற்றம் எனக்குப் புரிந்து போயிற்று.

அந்தப் பெண்ணை அருகே அழைத்துத் தோள் மேல் கை வைத்து பேச வேண்டும்போல் தோன்றியது. இது வயசு பெண்ணே... இப்படித்தான் இருக்கும்... கிட்ட நிற்கும் ஆண்களைப் பார்க்க மூச்சுத் திணறித்தான் போகும். தப்பு... தடுமாறிப் போகாதே... நேருக்கு நேர் பார்த்து... மீண்டும் ஒருமுறை உற்றுப் பார்த்தாலே ஓடி வந்துவிடும் ஆண்கள் கூட்டம். இவர்களிடம் போய் இப்படிச் சிரித்து வழிகிறாயே...

வரிசை நகர்ந்தது.

கறுப்புக் கண்ணாடி அணிந்தவனோடு இன்னொருவனும் சேர்ந்திருந்தான். அவர்களுக்குப் பின்னால் இருந்தவர்களை எல்லாம் முன்னால் விட்டுவிட்டு... சரியாக அந்தப் பெண்களுக்கு முன்னால் நின்று கொண்டனர்.

ரொம்பப் பழகியவன் போல் அந்தப் பெண்ணிடம், "இந்தப் படத்துக்கு டிக்கெட் கிடைக்காது போல் இருக்கே.." இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது என்று புரியவில்லை. அந்தப் பெண் மயங்கிப் போனது போல் சிரிக்க..

"வேற படத்துக்குப் போலாங்களா?"

அந்தப் பெண் சிரிப்பதை நிறுத்திவிட்டது. உடன் வந்த அவளுடைய தோழி லேசாய்க் கலவரமடைந்தவள் போல் சற்றுமுற்றும் பார்த்தாள்.

"இல்லங்க... பாத்தா இந்தப் படம்தான் பாக்கறது..வேற படம் பாக்கறது இல்ல.."

மீண்டும் சிரிப்புப் பொங்கப் பேசிற்று.

என் கண்ணோட்டம் தவறா? இயல்பாய் இதை எடுத்துக் கொள்ள முடியாமல் நான்தான் தவறாக யோசிக்கிறேனோ மீண்டும் அந்தப் பெண்ணிடம் பேசத் தோன்றியது.

அட பெண்ணே... நட்பெனில் நிமிர்ந்து பேசு... பளீரென வார்த்தை தெறித்து விழப் பேசு... ஏன் தலை குனிகிறாய்... எதற்கஞ்சித் தலை குனிகிறாய்... உனக்கே நீயே அஞ்சுகிறாய் எனில்..

அவனும் அந்தப் பெண்ணும் பேசிக் கொண்டிருந்தனர். அவனைப் பார்த்தாலே தெரிந்தது. அவன் எதற்காகப் பேசுகிறான் என்பது. உடன் வந்த தோழி அசையாமல் நின்று கொண்டிருந்தாள்.

ஒரு நொடி அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்தேன். ச்சீ.. என்ன நட்பு இது நீ எதற்குத் துணை போகிறாய் என்று உனக்குப் புரிகிறதா அல்லது புரிந்துதான் போகிறாயா?

என் பார்வை அவளிடம் பேசியிருக்க வேண்டும். வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். வரிசை டிக்கெட் கொடுக்குமிடத்திற்கு வந்துவிட்டது. எனக்கு அவர்களைப் பார்க்கவே கவலையாக இருந்தது.

கூலிங் கிளாஸூம், அவனோடு வந்தவனும் டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே செல்ல.. அந்தப் பெண் டிக்கெட் வாங்க கை நீட்டியது. நான் பர்சுக்குள் பணம் துழாவிக் கொண்டிருந்தேன்.

அந்தப் பெண்ணின் கையைப் பற்றி அவள் தோழி இழுத்தாள்.

"வாடி... போலாம்..."

தீவிரமாய் இருந்தது அவள் குரல். அந்தப் பெண் எதையோ சொல்ல எத்தனிக்க...

"எதாவது பேசின... செருப்பு பிஞ்சிடும்... வாடி வீட்டுக்குப் போலாம்..." அடிக்குரலில் அருகில் யாருக்கும் கேட்காது பேசிற்று.

கூலிங் கிளாஸூம், உடன் வந்தவனும் உள்ளே போய் கம்பிக் கதவுக்குப் பின்னால் தவித்துக் கொண்டிருக்க... இவர்கள் இருவரும் வரிசையை விட்டு வெளியே வந்து நடந்துக் கொண்டிருந்தார்கள். எனக்குள் மகிழ்ச்சி பொங்கிற்று.

அந்தப் தோழிப் பெண் மேல் ஆச்சரியமும், மரியாதையும் கூடிற்று.

எழுதியவர் : கணேஷ் கா (2-Feb-14, 12:47 am)
சேர்த்தது : கா. கணேஷ்
Tanglish : thozhi
பார்வை : 313

சிறந்த கவிதைகள்

மேலே