துவாரத்தின் வழியே

அவர்களின் கண்ணீரும் கதறல்களும் அவனுக்கு நாராசமாகவே இருக்கிறது .....அமரர் ஊர்திகளில் இயல்பாகவே டிரைவருக்கு பின்னால் இருக்கும் சின்ன ஜன்னலின் வழியாக அவர்களை வெறுப்போடு பார்க்கிறான்.அவனையோ அல்லது அவனது பார்வையினையோ கவனிக்கும் நிலையில் அவர்கள் இல்லை.அந்தக் குடும்பம் தங்களின் ஆண் வாரிசை விபத்தில் காவு கொடுத்துவிட்டு தவிக்கிறது.

இதுபோல் எத்தனையோ குடும்பங்களை அவன் பார்த்திருக்கிறான் .அவனைப் பொறுத்தவரை அவர்களெல்லாம் 'கிராக்கிகள்'.மனிதனின் இறுதிப் பயணம் அவனைப் பொறுத்த வரை சவாரி'.அந்த வண்டியின் இஞ்சின் போல தானும் பயணத்துக்கு பயன்படும் இயந்திரம் என்பதே அவனைப் பற்றிய அவனது சுய மதிப்பீடு.


அந்த வண்டியை அவனே கழுவியாக வேண்டும்.மாலைகளிளிருந்து தெறித்த பூக்கள்,சில நேரங்களில் இரத்தக் கறை ,ஊடுபத்திச் சாம்பல்கள் -இவற்றோடு போராட வேண்டியிருக்கும்.

வண்டியைக் கழுவிவிட்டு அவன் வீடு திரும்ப நான்கு மணியாகி விடும் .அடித்துப் போட்ட மாதிரி உடம்பெல்லாம் வலிக்கும்.ஆடை களைந்து துண்டு மட்டும் கட்டிக் கொண்டு படுத்து விடுவான்.அவனது மனைவி கோமதி கை,கால்களுக்கு தைலம் தடவி விடுவாள்.தூங்கி எழுந்து அவன் குளிக்க ஆறாகிவிடும் .

வழக்கத்துக்கு மாறாக இன்று அவள் அவனது அருகில் தூங்கிக் கொண்டிருக்கிறாள் .மாலையில் தூங்கும்
வழக்கம் அவளுக்கு இல்லை.அவன் எழுந்த கொஞ்ச நேரத்திலேயே அவளும் எழுந்து விட்டாள்.


"என்னடி ஒடம்புக்கு முடியலையா,அதிசியமா இந்த நீரம் தூங்கிருக்க?" என்றான்.

"அதெல்லாம் ஒன்னும் இல்லங்க.கொஞ்சம் அலுப்பா இருக்கு.அவ்வளோ தான்" பதில் சொன்னாள் அவள்.


"நான் கூட மறுபடியும் முடியாமப் போச்சோன்னு பயந்துட்டேன்"

"அதெல்லாம் இல்லைங்க.கையைக் காட்டுங்களேன் " என்றவாறே அவனது கைபிடித்து உள்ளங்கையைப் பார்த்தாள்.வழக்கம் போலவே தோலுரிந்து போயிருந்தது.



"எத்தனை தடவை சொன்னாலும் கேக்க மாட்டீங்களா மாமா?அந்த சோப்புக் கட்டியை வச்சு வண்டியைக் கழுவரதுக்குக் கஷ்டப்படாதீங்க.டெட்டால் வாங்குங்கன்னா கேக்க மாட்டீங்களா?"அவளது குரலில் இப்போது கோபம் .......


"அதெல்லாம் நமக்குக் கட்டுப்படி ஆகுமா ?யோசிச்சுப் பாரு கோமதி.சரி நான் முயற்சி பண்றேன் .கோவப்படாதே."சமாதானப் படுத்தினான் அவன்.


கோமதியின் உடலில் வலிமை என்பதே இல்லை.எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் அடிக்கடி மேலுக்கு முடியாமல் போய் விடும்.அவளது மருத்துவச் செலவுகளுக்கென அவன் அவளுக்குத் தெரியாமல் சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருக்கிறான்.


அவன் இயந்திரமல்ல.....ஒரு மனிதன் தான் என நிரூபித்தவள் அவள்.


இப்போதெல்லாம் அவள் தூங்கிக் கொண்டே இருக்கிறாள்...முகத்தில் களை இல்லை.அவன் கேட்டாலும் "அலுப்புதான்.சரியாகிடும் "என்று சொல்கிறாளே தவிர அவளைப் பார்க்கையில் உடலுக்குள் பிரச்சனை இருப்பது போல அவனுக்குத் தோன்றியது.இப்போதெல்லாம் அவனே தைலம் தடவிக் கொள்கிறான்


இதுபற்றி இவரிடம் கேட்டால் தான் சரியாக இருக்கும் என முடிவெடுத்து டாக்டர் முத்துக் குமாரிடம் சென்றான்.


டாக்டர் கேட்டார்:


"வீட்டுக்குப் போனதும் மொதல்ல என்ன பண்ணுவீங்க?"


"தூங்கிடுவேன் சார் "


"அப்போ குளிக்கிறது எப்போ?"

"எந்திரிச்சு தான் சார்"

"நினைச்சேன்.பொணத்தோட இருந்திட்டு குளிக்காம இருந்தா கிருமிகள் பரவாம என்ன செய்யும்?அதான் அவங்களுக்கு முடியாம போகுது.மொதல்ல இந்தப் பழக்கத்தை மாத்துங்க.அவங்களை கூட்டிட்டு வந்தீங்கன்னா என்னான்னு பாத்துடலாம்."


"மன்னிச்சுக்கோங்க டாக்டர்.கண்டிப்பா கூட்டிட்டு வரேன் டாக்டர் "


"சரி.வாங்க"


அவளை டாக்டரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று வேக வேகமாக வீட்டை அடைந்தான்.அவள் உறக்கத்தில் இருக்கிறாள். அவளை எழுப்பினான்.


அவள் எழவில்லை..............அசையவில்
லை.........மூச்சுக் காற்று இல்லை .

எல்லாம் முடிந்து விட்டது.


அவனது மனம் கலங்குகிறது.கண்களில் ஈரம் இல்லை.தொண்டைக் குழியில் அடைப்பது ஒருவேளை குற்ற உணர்ச்சியாகக் கூட இருக்கலாம் அல்லவா?


அவளது மருத்துவச் செலவுகளுக்காக சேமித்த பணத்தில் தான் இறுதிச் சடங்குகள் நடந்தது.



இப்போதும் கூட அவன் சவாரி ஏற்றுகிறான்...அனால் இப்போது அது அவனுக்கு சவாரி இல்லை.அந்தச் சின்ன துவாரத்தின் வழியே அவர்களுக்காக அழுகிறான்.



'அவன் இயதிரமல்ல........ஒரு மனிதன் தான்.'மீண்டும் நிரூபித்து விட்டாள் அவள்!!

எழுதியவர் : ஹரி (4-Feb-14, 10:53 am)
சேர்த்தது : ஹரி பிரசாத்
பார்வை : 154

மேலே