சிவா மற்றும் சிவா
சிவா மற்றும் சிவா
-முரளி கருணாநிதி-
சரியாக மதியம் 1 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகிக்கொண்டு இருந்தது வாரனாசி எக்ஸ்பிரஸ். 8'ம் பிளாட்பார்மில் மக்கள் கூட்டத்தில் நீந்திக்கொண்டே முன்னேறுகிறான் சிவா. ரயில் கிளம்ப, சரியான நேரத்தில் உள்ளே ஏறுகிறான். "ஓம்.. நமோ சிவாய..!!" என்று எழுதப்படுள்ள தனது காவி பையை இருக்கையில் கிடத்தி விட்டு ஜன்னல் ஓரம் சாய்கிறான். கத்தரிவெயிலின் தாக்கம் கூட அறியாதவனாய் ஜன்னல் வழியாக சென்னையை பார்த்து கொண்டு மூச்சிறைக்கிறான் "போகிறேன் சென்னை....!!" என்று.
மெல்ல கண்களை மூடி சிந்திக்க கண்ணீர் தான் வருகிறது இந்த 25’வயது இளைஞனுக்கு, கண்ணீரின் அளவோ துயரம் எவ்வளவு என்று துகிலுறிக்கிறது. சிவாவின் தோள்களை குலுக்கி ஆறுதல் சொல்லி கொண்டே அலகாபாத் நோக்கி புறப்படுகிறது வாரனாசி எக்ஸ்பிரஸ். ரயில் சற்று வேகம்பிடிக்க, ஜன்னலை கீறி கொண்டு வந்த காற்று கத்தி போல தாக்குகிறது. அந்த காற்றுக்கு தன் துயரத்தை சொல்வது போல தன் நினைவுகளை அசைப்போடுகிறான் சிவா.
"சிவா... நீ எங்களுக்கு சிவபெருமான் அளித்த வரம்..!!", "நீ.. அந்த மகேஸ்வரனுக்கு தொண்டு செய்யவே பிறந்தவன்..!!" என்று அவன் தாய் அவனுக்கு தாய் பாலுடன், சிவஞானத்தையும் அளித்தே வளர்த்தாள். தந்தை சதாசிவ குருக்களுடன் 10’வயதிலே கோவில் தொண்டாற்ற சென்றான். திருவாரூரில் வேதபாடசாலையில் பயின்று ஹோமம், சிவபூஜை என்று சிவவழிபாட்டிலே திளைத்தான்.
"தென்னாடுடைய சிவனே போற்றி...!! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..!!" என போற்றிக்கொண்டே ஹரித்வார், ஜோதிலிங்க தரிசனம் என சிவனை சுற்றியே விடுமுறைகளை கூட கழித்தான்.
"சிவா.... சிவா... சிவா.... நமசிவாய..!!" இது தவிர வேறு ஒன்றும் அவன் அறிந்தது இல்லை.
ஈசனின் அருளோடு மகிழ்ச்சியாக தெளிவான நீரோடையாய் சென்று கொண்டு இருந்த இவனது வாழ்வில் அகோர வெள்ளம் வந்து திருப்பிப்போட்டது. கோவில் பணிகளுக்காக தான் ஊரிலே இருந்து கொண்டு , பெற்றோரை உத்திரகான்ட் புனிதயாத்திரைக்கு அனுப்பி வைத்த சிவாவிற்கு, அவர்கள் அங்கேயே முக்தி பெற்ற செய்தி வந்தது.
"இறைவா.. இது கனவாக கூடாத என்று கதறிய அவனிடம் இது உண்மை என்று உரக்க சொன்னது தந்திகளும், தொலைகாட்சிகளும். உலகின் தலைப்பு செய்தி இவனுக்கு கிரியப்பத்திரிகையாக வந்தது.இரண்டு மாதங்கள் தேடியும் உடல்கள் அடையாளம் கொள்ள முடியவில்லை, இறந்தவர்கள் பட்டியலில் பெயரும் உறுதி ஆகிவிட்டது. நிராதரவாய் வான் நோக்கி சிவனை இவன் கூப்பிட்டது கண்டு சுற்றோரும் கலங்கினர். இறைவனிடம் நாம் கொள்ளும் பக்தியே அவரை அடைய வழி என்பார்கள். சிவாவிற்கு மட்டும் சிவன் தாமதம் காட்டினார். இனி மனித உறவுகள், இன்பங்கள் அனைத்தையும் தொலைத்து விட்டு சிவனை மட்டும் நேசிக்கும் பாக்கியம் பெற எண்ணினான். மனிதனாக அல்ல, துறவியாக அல்ல, காசியில் நர மாமிசம் உண்ணும் அகோரியும் அல்ல., இமயமலையில் கைலாயம் நோக்கி சிவனின் பாதம் தொட்டு வாழும் பெரும்பாக்கியம் பெற்ற நாகசாதுவாக...!!!
நாகசாதுக்கள் இறைவனின் போர்படை, நாகபாபாக்கள் என்றும் அறியப்படும் அவர்களே துறவறத்தின் உச்சம். இமயமலையின் 0"டிகிரி குளிரிலும் ஆடை ஏதும் இன்றி திருநீரை உடல் முழுதும் பூசிக்கொண்டு, மண்டைஓடு மாலை அணிந்து கொண்டு, ஜடாமுடியுடன், கூர்மையான வாள் மற்றும் தடியை ஆயுதமாக தாங்கிக்கொண்டு நிற்பவர்கள். கைலாயத்தில் இறைவனின் கால் அடியே வாழும் அவர்கள் மனிதர்களை பார்ப்பதே இல்லை. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளாவிற்கு மட்டும் வெளியே வருவார்கள்.
அலகபாத், ஹரித்வார், நாசிக் மற்றும் உஜ்ஜயினி போன்ற நகரங்களில் மட்டுமே நடக்கும் இந்த கும்பமேளா இப்போது கங்கைகரையில் அகாபாத்தில் தொடங்க உள்ளது.
மகாசங்கராதியில் தொடங்கி மகாசிவராத்திரி வரை 55 நாட்கள் நடக்கும் இந்த கும்பமேளாவில் பத்து கோடி மக்கள் கலந்து கொள்வர். பூமியிலே அதிக மக்கள் ஒன்று கூடும் ஒரே விழா, சிவனின் இந்த பெருவிழா. லட்சம் நாகசாதுக்கள் கூடுவது தான் இதன் சிறப்பு. இந்த கும்பமேளாவில் தனக்கான குருவை தேடி கொண்டு நாகசாது ஆவதற்கு தான் சிவா இங்கே பயணிக்கிறான்.
"ஓம்.. நமோ சிவாய..." என்று முனங்கி கொண்டே தூக்கதில் ஆழ்ந்து கொண்டான். மனிதன் துக்கத்தில் உணவு, உடை கூட மறப்பான், ஆனால் நித்திரையில் இருந்து தப்பிக்க முடியாது. "கிலீர்ர்ர்ர்..." எனும் ரயிலின் சத்தத்தால் கண் விழித்தான். ஆந்திர மாநிலம் விஜயவாடா ரயில் நிலையத்தில் வண்டி இளைப்பாறியது. புதிய உடை, சவரம் செய்த முகம் , கையில் ஒரு பையுடன் சிவா எதிரில் வந்து அமர்ந்தான் 35வயது மதிக்கத்தக்க வாலிபன் ஒருவன், மதுவின் மயக்கம் அவன் கண்களில் நடனம் ஆடியது. ரயில் மெல்ல நகர ஆரம்பித்தது. 1 மணி நேரம் ரயிலின் இரைச்சல் தவிர எந்த ஒரு சத்தமும் இல்லாமல் நகர்ந்தது. இருவரும் மற்றவரின் செய்கையை பார்த்தும், பார்க்காத வண்ணம் அமர்ந்து இருந்தனர். ஒருவன் அதே ஜன்னல் ஓரம் வானத்தை வெறித்து பார்த்த வண்ணம் இருந்தான், மற்றொருவன் அவ்வபோது மதுவை ருசித்து கொண்டே வந்தான். இனி இங்கு வாக்கிய பரிமாற்றம் நடக்கும் என்று தெரிந்து கொண்டு அமைதி மெதுவாக களைந்து சென்றது, களைத்தவன் குடிமகன்.
"என்ன பிரதர்.. தமிழா?"
சட்டேன்று எளிதான கேள்வி ஒன்று முன் விழுந்ததால் ஆசவாகம் கொண்ட சிவா "ஹ்ம்ம்.." என்றான்.
"அலகபாத் போறேங்க போல...??"
தன் பையின் 'ஓம் நமோசிவாய' அடையாளம் பார்த்து கேட்கிறான் என்று புரிந்து கொண்டு மீண்டும் ஒரு "ஹ்ம்ம்.." என்றான் சிவா.
"நானும் அங்க தன் பிரதர் போறேன்.. என் பேர் சிவா, உங்க பேர்?" என்று தொடர்ந்தான் போதை ஆசாமி.
அமைதியின்மையும், இருக்கமுமாக இருந்த சிவா, இவற்றை விளக்கி கொள்ள சிறிது பேசலாம் என்று எண்ணி கொண்டு "என் பேரும் சிவா தான் பிரதர் !" என்றான்.
"நாம இப்போ இங்கே இரண்டு சிவா இருக்கோம் பிரதர் ஹ ஹா…!! சரி, கும்பமேளா பாக்க போரீங்களா?" என்று குழற ஆரம்பித்தான் புதிய சிவா.
நாம் பேசப்போகும் கடைசி மானுடன் இவனாக இருக்கலாம் என்று உறுதி கொண்ட சிவா "கும்பமேளா பார்க்க போகல., நாகசாது ஆக போறேன்" என்றான்.
"பிரதர் சிவா... சூப்பர்.. நானும் நாகசாது ஆகத்தான் போய்டு இருக்கேன்.. வாங்க சேர்ந்தே போவோம்..!" போதை ஆசாமி விடுவதாக இல்லை.
இந்த முறை கோவம் கொண்ட சிவா "நாகசாது’னா என்னனு உங்களுக்கு தெரியுமா? ஏன் உளறீங்க?" என்று கனல் கக்கினான்.
"நீங்க ஆகும் போது... நான் ஆக கூடாதா? நீங்க ஏன் இந்த வயசுலே நாகசாது ஆக துடிக்கிறிங்க..." சற்று போதை குறைந்தவனாய் கேட்டான் மற்றொரு சிவா.
தான் சோகத்தை பகிர ஆள் கிடைத்த மாத்திரத்தில் அனைத்தையும் கொட்டி தீர்த்தான் சிவா, "எனக்கு தான் மனித உறவில் பற்றே இல்லாமல் போய் விட்டது உங்க பிரச்சனை என்ன?"
இப்போது பதில் சொல்ல வேண்டியது போதை ஆசாமியின் கடமை. அவனும் சொல்ல ஆரம்பித்தான் "பிரதர் சின்ன வயசிலே.. சண்ட போடு வீட்டை விட்டு வந்துட்டேன், சின்ன சின்ன திருட்டு, போலீஸ்,ஜெயில் என்று ஓடிட்டு இருத்தது வாழ்க்கை, ஒரு முறை ஒரு கொள்ளை முயற்சியில ஒரு வீட்டில் இருந்த இருவரை கொன்று விட்டு போலீசில் மாட்டிக்கொண்டு ஜெயில் சென்று விட்டேன்.. இரண்டு வருடத்தில் சக கைதியோடு தப்பித்து ஆந்திரா வந்தேன், இங்கும் ஒரு திருட்டில் பங்கு போடும் போது ஏற்பட்ட தகராறில் நண்பனை கொன்று விட்டு மீண்டும் சிறை சென்றேன்.. இந்த முறை உயிரை பணயம் வைத்து தப்பித்து வந்தேன், ஆனால் முன்று மாதங்களாக தலைமறைவாய் வாழ போராடுகிறேன், ஓடி ஒழிந்து வாழ்வே வெறுத்துவிட்டது.. இப்பொது போலீஸ் நடமாட்டம் கொஞ்சம் குறைந்து விட்டது, இனியும் இங்கு இருக்கமுடியாது. மனிதர்கள் இல்லாத இடத்தில சுதந்திரமாய் வாழ நாகசாது ஆவது தான் எனக்கும் ஒரே வழி" என்று அனைத்தையும் உளறி விட்டு கையில் இருந்த பாட்டிலில் எஞ்சி இருந்த மதுவையும் ஒரே மூசி குடித்து விட்டு போதையின் உச்சியில் அமர்ந்தவனாய் பார்த்தான்.
இவை அனைத்தையும் அதிர்ச்சியோடு கேட்டுக்கொண்டு இருந்த சிவா, கடும் கோபம் கொண்டான். இறைவனை துதித்து, இறைவனோடு கலந்து வாழும் தவமாய் நினைக்கும் நாகாசாது ஆக இப்படிபட்டவர்கள் வருகிறார்கள் என்ற வேட்கையோடு குரல் உயர்த்தினான், "நாகசாது பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?? இறைவனின் சேனனை ஆவது அவ்வளவு எளிதா?"
போதையில் தன் தள்ளாடத்தை நிறுத்தி கொண்டு "சொல்லுங்க பிரதர்.. கேட்போம்" என்று கேட்டான் இந்த போதையின் சீடன்.
"நாகசாதுக்கள்.. சிவனுக்காக மட்டுமே வாழ்பவர்கள், இமயமலை குளிரிலும், கும்பமேளா வெயிலிலும் ஆடை ஏதும் இன்றி திரிபவர்கள். ஆசை, கர்வம், அகந்தை போன்ற இச்சைகளை துறக்கவே ஆடை ஏதும் இன்றி இயற்கையோடு இணைந்து இருப்பவர்கள். எந்த ஆசாபாசதிற்கும் அடி பணியமாட்டார்கள். ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும் போராடியவர்கள். கத்திச்சண்டை, கம்புச்சண்டை போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள், இசை கருவிகளும் மீட்பவர்கள்." என்று கூறிக்கொண்டே மேலும் தொடர்ந்தான்.
"படிப்பு, குடும்பம், உலகபந்தம் இவை அனைத்தையும் துறந்த நாம் நமக்கான குருவை கும்பமேளாவில் தான் தேர்ந்து எடுக்க வேண்டும். அவர் நம்மை ஏற்று கொள்ளும் வரை அவரிடம் போராட வேண்டும். பிறகு அவருடன் 10 வருடம் இமயமலை சென்று குருசேவை புரிந்து, உபதேசம் கேட்டும் பல பயிற்சிகளில் தேர்ச்சி பெற்றால் தான் நாகசாதுவாக அவர் அங்கீகரிப்பார். அப்போது கூட அவர் நிராகரித்தாலும் நாம் திரும்பி வரவேண்டியது தான்.. " என்று தன் உரையை முடித்து கொண்டு பலமாக மூச்சை விட்டான் சிவா.
இவை அனைத்தையும் கண் கொட்டாமல் கேட்ட மற்றொரு சிவாவிற்கு போதை இறங்கி விட்டது... "என்ன பிரதர் சொல்றிங்க, இவ்வளவு இருக்கா?" அப்படியே இதையும் கேளுங்க...." என்று நாகசாதுக்கள் பற்றி தன் நிலைப்பாட்டை கூற இவன் ஆரம்பித்தான்.
"எங்கள மாதிரி கொலை, கொள்ளை செஞ்சவங்க நிறைய பேர் அங்க தான் கூட்டத்துக்கு நடுவுல மறைஞ்சு வாழறாங்க. ஜடாமுடி, தாடியோட திரியிற எங்கள தேடி எந்த போலீசும் அங்க வரமாட்டாங்க. கும்பமேளாவுக்கு வர்ற மக்கள ஆசிர்வதிக்க, ஏன்? பார்க்க கூட நாகசாதுகளுக்கு பணம் தான். நாகசாதுகள்'ல எவ்வளோ பேர் இப்போ கோடீஸ்வரங்க தெரியுமா? அவங்களுக்கு ரயில் பயணம், தங்கற இடம், உணவு எல்லாமே இந்த தேசத்துல இலவசம் தான். அவங்க உட்கொள்ளும் சில்லும், சிவமூலி போன்ற போதை வஸ்துக்கள் வேறு எங்கும் கிடைக்காது. உலகில் பல நாடுகளில் இருந்து காணிக்கையா வர்ற போதை மருந்துகள் எவ்வளவு தெரியுமா?. பல வெளிநாட்டு குற்றவாளிகளும் உயிர் பிழைத்தால் போதும் என்று நாகசாதுவாகிறார்கள். என்ன? துறவறத்தின் அடையாளமாய் ஆண்உறுப்பின் காமம் துண்டும் நரம்பை செயல் இழக்க செய்துவிடுவார்கள்...!!" என்று அனல்தெறிக்க நாகசாதுகளின் வாழ்வுமுறை பற்றி இவன் சொல்லி முடித்தான்.
இரண்டு எதிர்மறை விமர்சனங்களால் அதிர்வுடன், இருவரும் அமைதியாக அமர்ந்தனர். அங்கே மயான அமைதி குடி கொண்டது. குழப்பத்தில் இருவரும் அவரவர் இருக்கையில் சாய்ந்தனர்.
"ஓம் நமோ சிவாய" என்று கூறிக்கொண்டு கண்களை மூடினான் சிவா "இவர்களை போல கொடூரர்கள் தங்களை காத்துக்கொள்ள இந்த உயர்ந்த இடத்திற்கு வருகிறார்களே” என்று நொந்து கொண்டான். இனியும் நாம் அங்கு செல்வதா? வேண்டாமா? என்று குழப்பத்தில் சிவனை நோக்கி தொழ ஆரம்பித்தான். கண்களை மூடியதும் நித்திராதேவி அவனை ஆட்கொண்டாள்.
முற்றிலும் போதை தெளிந்து நிதானித்த சிவாவோ "இவ்வளவு பயிற்சியும், சோதனைகளுடன் வாழும் நாகசாதுக்கள் மத்தியில் நாம் வாழ முடியுமா?. இவர்களின் பக்தி நம்மை நிமதியாக அங்கு வாழ விடுமா? என்ற கேள்விகளை தன்னுள் ஓட்டமிட்டான், இனியும் அங்கு செல்வதா? வேண்டாமா?" என்று அவனுள்ளே கேட்டு கொண்டே ஆழ்ந்த தூக்கதில் உறைந்தான்.
விடியல் பிறந்தது, வாரனாசி எக்ஸ்பிரஸ் அலகாபாத் ரயில்நிலையத்தில் தரை தட்டியது. ஊரே கும்பமேளாவில் குலுங்கி போயிருந்தது, மக்கள் அனைவரும் அங்கு வந்துருந்த நாகசாதுக்களின் பின்னால் ஆசிக்காக அழைந்தனர்.
ரயிலில் இருந்து கண்களை விரித்து பார்த்தான் சிவா, மற்றொரு சிவாவை காணவில்லை.. புன்னகையோடு இவன் மட்டும் அலகாபாத்தில் கால் ஊன்றினான்.
-முரளி கருணாநிதி-