யதார்த்தம்

என் மனைவியை அழைத்துக்கொண்டு பல நாட்களுக்கு பிறகு படம் பார்க்க சென்றிருந்தேன். அது ஒரு நகைச்சுவை கலந்த சுமாரான படம். தியேட்டரில் இருக்கைகள் ஓரளவு நிறைந்து இருந்தது.

நாங்கள் கடைசி வரிசையில் அமர்ந்திருந்தோம். விளம்பரங்கள் முடிந்து படம் ஆரம்பித்தது. எங்களுக்கு முன் வரிசையில் ஒரு ஜோடி அமர்ந்திருந்தது. படம் ஆரம்பித்து சுமார் அரை மணி நேரம் கழித்து மெதுவாக கசமுசாவென்று வந்த சத்தம் என் கவனத்தை திசை திருப்பியது. அந்த இருட்டில், திரையிலிருந்து வந்த ஒளியில் எங்கள் முன்னால் அமர்ந்திருந்த ஜோடியில், அந்த ஆடவன் தன்னுடன் வந்த பெண்ணின் கைவிரல்களை தன் கைவிரல்களில் கோர்த்துக்கொண்டு சில்மிஷம் செய்வதை பார்க்க முடிந்தது. அந்த பெண்ணிடமிருந்து லேசான முனகல் சத்தம் வந்து கொண்டு இருந்தது.

இப்படி எத்தனை பேர் கிளம்பி இருக்கிறார்கள், இந்த மாதிரி விசயங்களுக்கு, இருள் படர்ந்த தியேட்டர் தான் இடம் என்று கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாமல் என்று நான் என் மனைவி இடம் மெதுவான குரலில் கிசுகிசுத்தேன்.

பேசாமல் படத்தை பாருங்கள் என்றாள் என்னவள். இருந்தாலும் அவளும் இந்த சம்பவத்தை நிச்சயம் கவனித்திருப்பாள் என்று தான் எனக்கு தோன்றியது.

பிறகு படத்தில் கவனம் செலுத்தினேன். படம் முடிந்து கூட்ட நெரிசலில் தியேட்டரில் இருந்து மெதுவாக வெளியே சென்று கொண்டு இருந்தபொழுது, எங்களுக்கு சற்று முன்னால் அந்த ஜோடி சென்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் பேசிக்கொண்டு இருந்ததில் இருந்து நாங்கள் புரிந்து கொண்டது இதுதான் , அவர்கள் இருவரும் கணவன் மனைவி, அவளுக்கு கை, கால்கள் அடிக்கடி மரத்து போகும் வியாதி உண்டாம்.

சற்று முன் அவள் கை விரல்கள் மரத்து போனதால் அவன் அவள் கை விரல்களை பிடித்து மசாஜ் செய்வதுபோல் அழுத்தி ரத்த ஓட்டத்தை கொண்டு வர முயற்சி செய்து கொண்டு இருந்தான் என்று நினைத்து பார்க்கும் பொழுது என் மனதின் அறியாமையை நினைத்து நானே நொந்து கொண்டேன்

நடந்த உண்மை என்னவென்று தெரியாமல் யாரையும் தவறாக பேசக்கூடாது என்பதை உணர்ந்தேன்

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (6-Feb-14, 9:13 am)
பார்வை : 160

மேலே