கவிதை வடிவம்
கவிதை வடிவம் அர்த்த புஷ்டியானது. ஒரு தேர்ந்த கவிஞனால் ஆயிரம் வரி சிறுகதையை ஆறே வரிகளில் கவிச்சித்திரமாக வடித்துவிட முடியும். இதிகாசங்களையே கவிதையாக என்கோட் செய்து இரண்டு கையடக்கப் புத்தகங்களில் பரிமாறியவர் வாலி.
வாசகனை சிந்திக்க வைக்கும் கவிதை ஒரு ரகம். கிறங்கடிக்க வைப்பவை இன்னொரு தினுசு. முண்டாசுக்கவி பாரதி தமிழ் ஊசி போட்டு நரம்புகளை முறுக்கேற வைப்பான். கவிதை புனைவது என்பது வார்த்தைகளைக் கோர்த்து ஜாலம் காண்பிக்கும் பாடு களம். பத்மஜா நாராயணனுக்கு இது கை வந்த கலையாக இருக்கிறது. காட்சி வடிவமாக இவரெழுதிய “மலைப்பாதையில் நடந்த வெளிச்சம்” பார்த்திருக்கிறேன்.
“கருப்பொருள்” என்ற தலைப்பு சட்டென்று கருத்தைக் கவர்கிறது. கவிதைகளில் நுழையக் காத்திருக்கும் பாடுபொருட்களைப் பற்றிய கவிதை. மடிக்காத போர்வையும் கூட தான் ஒரு வரிக்குள் கவி சொரூபமாக ஏறிவிட மாட்டோமா என்று காத்திருக்கிறது. சபாஷ்!
”முத்தம் சரணம் கச்சாமி”யில் தடாலடியாகப் புத்தனைத் தூக்கியெறிந்துவிட்டு அவன் களையச் சொன்ன ஆசையைக் கட்டிப்போட்டு எழுதியது. இந்த முப்பது வரிக் கவிதையில் முத்து முத்தாக முத்தத் தத்துவங்கள் சிந்தியிருக்கிறது!
ஆங்கிலம், கொரியன், மலையாளம், சீனம், அரேபியம் என்று அஷ்டதிக்கெங்கும் புழங்கும் மொழிகளிலிருந்து கவிதைகளைப் பொருக்கியெடுத்து தமிழ் உருவம் கொடுத்திருக்கிறார். ரசிக்கும்படியாக.
வடிவத்தில் ’தெரிவை’ எஃப்டிவியில் வரும் ஒல்லிக் குச்சி மாடல்கள் போல ரொம்பப் பூஞ்சையாக இருக்கிறாள் என்ற ஒன்றுதான் குறை. அடுத்து வரப்போகும் ‘பேரிளம்பெண்’ குஷ்பூ போல புஷ்டியாக வருவாள் என்று நம்புவோம்!
வாழ்த்துகள் Padmaja Narayanan! செம்பதிப்பாக ட்ராட்ஸ்கி மருதுவின் ஓவியங்கள் கவிதையுடன் ஒட்டிக்கொண்டிருக்கின்றன.