தங்கக் கூண்டு

வாசற்படிக்கும்
பின் கொல்லைப் புறத்திற்குமான
எனதிருப்பிடம் சுற்றி
அளப்பற்கரிய பாசத்துடனும்
அளவிடமுடியா நேசத்துடனும்
பெருந்திறமையுடன்
மிக ஜாக்கிரைதையாக
உருவாக்கியிருக்கிறாய்
எனக்கான
உன் முள் வேலியினை...

அதைத்தாண்டி
வெளிச்சுற்றிப் பறக்க
யத்தனிக்குமென்
நினைவுகளின் ரக்கைகளை
சீரமைப்பெனும் சிறுகத்தரியால்
மிகு தந்திரத்துடன்
என் அனுமதிபெற்றே
வெகு சிரத்தையுடன்
கத்தரிக்கிறாய்...

உலகத்தின் வரைபடத்தை
என் தங்கக் கூண்டிற்குள்
வகைபடுத்துகிறாய் -
தேனும் , பாலும்
தினம் தினம்
கலந்தெனுக் களிக்கையில்
பறப்பதற்கென படைக்கப்பட்ட
என் பயன்படா ரக்கைகள்
பற்றி
கிஞ்சித்தும் நினைவின்றி
ஜென்ம அடிமையென
அடைத்து வைத்திருக்குமென்னை
உன் தங்கக்கூண்டின்
ராணியென முடிசூட்டுகிறாய் ...

ஜொலிக்கும் உன் கூட்டின்
பளபளப்பில்
வெளியுணரமுடியா
என் விழிகளின்
ஏக்கங்கள் அறியாது
அனுதினமும் -
நாளைகளின் எனக்கான
கனி கொள்முதல் குறித்த
கனிவுடன் நீ -
என் கதவடைத்துச்
செல்கிறாய் ...

எனதிந்தப் பசும்ரக்கைகள்
வெண்மை யானதொரு
வயோதிகத்தின் பின்னாளில்
என் கதவு திறந்து
என்னைப் பறக்கவிடுவாய்...

பறப்பதே மறந்து மரித்துப்போன
அந்நாளில்
என் ரக்கைகள் கைத்தாங்கலாய்
எனைத் தாங்கும்
கைத்தடியென
நான் நடைபயில உதவும் -
அன்று நீ
சிறந்த கணவனென
என் கரங்களாலேயே
விருதுபெற்று
உன் பிறவிப் பெரும்பயனெய்து
களிப்புற்றுக் கிடப்பாய் .

எழுதியவர் : பாலா (6-Feb-14, 4:14 pm)
Tanglish : thangak koondu
பார்வை : 206

மேலே