பெண் பிள்ளை சொந்தம் இல்லை - அமுத நிலா
கணவனோடு கை பிடித்து
கடல்தாண்டி செல்லத்தான்
கருவறையில் காத்து
கருப்பு மையிட்டு
கண்படாமல் காத்து வளர்த்தேனா
உயிர் கிடந்து தவிக்குது
உடன் வந்து விடுவாயோ
உன் விரல் தழுவிய பொம்மைகளை
பார்த்து மட்டும் மனம் ஆறுது
விட்டத்தை நோக்கி பார்த்தால்
விமான சத்தம் மட்டும்
சமாதானம் செய்யுது
உறக்கம் கூட உன்னோடு போனது
உன் தலையணை கூட
தனியே இங்கு உறங்குது
தொலைத்த தூக்கத்தை தேடி - நானும்
உன் தலையணையுமாய்
நாட்களும் கழியுது
என் தோள் தொட
தோழியாய் நீ இல்லை
பிடி சோறு ஊட்ட
என் தாய்மைக்கு
வாய்ப்பில்லை
என் மடி தூங்கும்
நாட்கள் எப்போதோ
தெரியவில்லை
நீ ஆண்டுக்கு ஒரு முறை
அம்மா என அழைப்பதில்
ஒரு போதும் உடன்பாடு இல்லை
காலமும் கடக்குது....
கண்ணீரும் கரையுது....
உன் விழி காண ஏங்குது....
என் மனம் நோகுது.....
இன்னும் ஓர் ஜென்மம் உண்டோ
உன் மகளாய் நான் பிறக்க
அப்போதும் பெண் பிள்ளை சொந்தம் இல்லை
பின்னொரு நாள் பிரிந்து போகும் .......
- அமுதநிலா