கட்டுரை கவிதை அம்மா

பூமியில் வாழும் அனைத்து உயிரிணங்களின் வாழ்க்கையும் எண்ணப்படுகிறது என்பது நிஜம்.எண்ணிக்கை என்பது காலத்தின் அடிப்படையில் அல்ல. வாழ்வின் நிகழ்வுகளே வாழ்வை நகர்த்திச் செல்கின்றன. ஒவ்வொரு துயரத்தையடுத்தும் ஒட்டிப் பிறந்தது போல் தோன்றும் ஒரு இன்ப நிகழ்வு வாழ்விற்கு சற்று ஆசுவாசம் அளித்து வருடிக் கொடுத்து அடுத்த நிகழ்வுக்கு நகர்ந்து செல்ல தேவையான புத்துணர்வை அளிக்கிறது.
துன்பச் சம்பவங்கள் மட்டுமே வாழ்வில் இடம் பெற்றிருந்தால் அவ்வாழ்வு இயக்கமற்று விரைவில் முடிவு பெற்றுவிடும். அதுபோல் இன்பச் சம்பவங்களால் ஒரு வாழ்வு நிறைக்கப்பட்டிருந்தால் அதில் நகற்சியின்றி ஒரு கட்டத்தில் தேங்கி விடும்.
அத்தகைய வாழ்வின் இரு துருவ நிகழ்வுகளோடு மனிதன் தானே ஏற்படுத்திக் கொள்ளுவது அல்லது தேடிச் சென்று அனுபவிக்கும் இனிய தருணங்களை நினைவு கூறலும் பகிர்ந்து கொள்ளலும் எப்போதும் தித்திக்கும் விஷயங்கள் தானே.

இக் கட்டு(ரை)க் க(வி)தை நாயகனின் பிறப்பு ஒரு ஏழ்மையின் கொண்டாட்டத்தில் துவங்கி பின் ஒரு கசப்பை நோக்கி நகர்ந்தது அல்லவா . அடுத்து என்ன ?

பிச்சைக்காரனுக்குப் பிறந்த பிள்ளையைக் கூட ராசா எசமான் துரை அப்புடி இப்புடினு கொண்டாடித் தீர்த்துவிடும் தாய் மனசு. அள்ளி அவள் முத்தமிடும் போது அடுத்த வேளைச் சோறு இல்லை என்பது அவளுக்கு மறந்து விடுகிறது. நொடிக்கொரு முறை மலரும் குழந்தைப் பூஞ் சிரிப்பு ஒரு நெம்பு கோலைப் போல் தாயின் நொடிகளை நகர்த்திச் செல்கிறது.
குழந்தையின் அழகும், நிறமும் அதுவும் ஆண் பிள்ளையாய் இருந்தால் கேட்க வேண்டியதில்லை. அவளை பெருமிதத்தில் ஆழ்த்தி அவள் ரணங்களை இதம் செய்கிறது.
காலிலே ஒரு கழிப்பறை. பிள்ளையைக் கனுக்காலில் இருத்தி தாயும் சேயும் முகத்தோடு முகம் பொருந்தி பேசுவார்களே . அப்பப்பா பேரின்பம். அல்லவா.
பச்சை உடம்புக்காரி முழங்கால் வரை சேலையை அள்ளிச் செருகி அவனை காலில் படுக்க வைத்து எண்ணை தேய்ப்பாள் எந்தப் பாடமும் கற்றுக்கொள்ளாத அவள் பிள்ளை வளர்ப்பை வெகு லாவகமாக கற்றிருந்தாள். செக்கில் ஆட்டிய நல்ல எண்ணையை அவன் கண்ணிலும் காதுக்குள்ளும் ஊற்றுவாள், அவன் வீறிட்டு அழுவான். ஊரைக் கூட்டுவான் ,ஊரும் கூடிவிடும்,
“என்னடி புள்ள அழுவுது” நு பக்கத்து வீட்டிலேர்ந்தெல்லாம் விசாரணை துவங்கி விடும். பதில் சொல்லமாட்டாள் அம்மா. ஆம் அவள் மும்முரமாய் இருக்கிறாளே ,அவர்களே வந்து பார்த்துவிட்டு “ ராசா மவன் குளிக்காகளாக்கும்” என்று கேட்டுவிட்டு கிளம்புவார்கள்.
இந்தப் பதற்றம் இனி வாய்க்கப் பெறுமோ ?
ஒருவேளை அம்மாவே அழுதுகொண்டிருந்தாலும் இப்போது ஏன் என்று கேட்க அக்கம் பக்கத்தில் ஆளில்லை. அவரவர் வாழ்க்கை ரதத்தில் அவர்களே குதிரைகள் அவர்களே சாரதிகள். இத்தகைய வாழ்க்கைச் சூழலில் பிறன் மீதான அக்கறையும் கரிசனமும் காணாமற் போனதில் ஆச்சர்ய மொன்றுமில்லை.
கண் காது எல்லாம் எண்ணை ஓடி எல்லாம் சுத்தமாகிவிடுமாம். அம்மாவின் அம்மாவின். அம்மாவின் நம்பிக்கைகள். அலோபதி வைத்யர் சொல்வார் முட்டாள்தனம் என்று. நல்ல சீயக்காய் தேய்த்து அம்மா குளிப்பாட்டி முடிக்கு முன்னே அவள் வியர்வையில் குளித்திருப்பாள். தானே குளிப்பாட்டி முடித்த கையால் நெற்றியை துடைக்கும் போது ஏதோ உலகத்தோடு நடந்த ஓட்டப்போட்டியில் அவள் முதல் பரிசு பெற்ற வெற்றிக் களிப்பு அவளுக்குள்ளாக,
அதற்கப்புறமாக வேத காலத்து சுஷ்ருதர் போல ஒரு சிகிச்சை செய்வாள். அதைப் பார்க்கும் போது பயமாகத்தான் இருக்கும் மற்றவர்களுக்கு, வாய்க்குள்ளே வலது கையின் ஆள்காட்டி மற்றும் நடு விரலை உள்ளே விட்டு நாசி+ தொண்டை ஜங்க்சனை அடைத்துக் கொண்டு வாயால் வலது பக்க நாசி வழியே முடிந்தமட்டும் தம் கட்டி ஊதுவாள். இடது நாசி வழியே சளி ஒரு உலக்கு வெளியே வரும் . அப்படியே அடுத்த துளை வழியாகவும் சளியை எடுக்கும் வித்தையை எப்படிக் கற்றாளோ .ஆச்சர்யமாக இருக்கும். அதற்கப்புறமா ஒரு சர்க்கஸ் காரியாக மாறி அந்தக் குழந்தையோட காலை ஒரு கையால பிடித்துக்கொண்டு தலை கீழாக ஒரு சுற்று சுற்றுவாள் பார்க்கனும்.. நெஞ்சு சளி இருந்தா வாய் வழியா வெளியே வந்துருமாம்.
எண்ணை தேய்க்க ஆரம்பிச்ச போது துவங்கிய அழுகையை அவன் இன்னும் நிறுத்தாததால் தொண்டை வறண்டு குரல் கம்மும்.
அப்படியே அள்ளி எடுத்து என் ராசா குளிச்சிட்டாக. என் சீமான் குளிச்சிட்டாக ன்னு கொஞ்சிக்கிட்டே அவன் தலை துடைப்பாளே ஆன்ந்தமா அதை அளவிட உலகில் யாதொரு கருவியும் இல்லை. அதோட முடிஞ்சதா இல்லையே அப்புறம் தானே அலங்காரப் படலம், ஒரு சேலையை பொதும்ப விரிச்சு ஐயாவை படுக்க வச்சு கோகுல் சான்டல் பவுடரை எடுத்து ஒரு மில்லி மீட்டர் இடம் விடாம பூசுவாள் பார்க்கணும். அந்த பவுடர் டப்பாவிலயும் அவனைப் போலவே ஒரு குழந்தை அழகா உட்கார்ந்திருக்கும் .அப்புறமா அவனை முகர்ந்தும் பார்ப்பாள் .வாசம் வருகிறதா என்று. அப்போது அவனைக் காட்டிலும் அதிக சுகந்தம் அம்மா மீதிருந்து தான் வரும்.
அய் டெக்ஸ் கண்மை அப்போது மிகப் பிரபலம். கண்ணுக்குள்ளிருந்து காது நோக்கி ஒரு மெல்லிய கோடு நீண்டு வரும். புருவம் நல்லா வரைந்து நெற்றி நடுவில் ஒரு வட்டப் பொட்டு வைத்து அதன் மீதும் கொஞ்சம் பவுடர் மேலாக பூசிவிடுவாள். முக்கியமாக கண் திருஷ்டிப் பொட்டு ஒன்று நாடியில தீக்குச்சியால தொட்டு வைப்பாள் அது கொஞ்சம் அசிங்கமா இருக்கட்டுமேண்ணு ஆனால் அது கொஞ்சம் எடுப்பாகவே இருக்கும்
தாய்மைப் பருவத்தில் ஒரு தாயின் தீவிரமான பணி என்பது காலையிலிருந்து அவனை தயார் செய்து தூங்க வைப்பது தான் .அப்போது தான் அவள் மற்ற வேலையைப் பார்க்க முடியும்.
அப்படியே மடியில வச்சு அவனுக்கு மாத்தி மாத்தி ரெண்டு மாருலயும் பாலக் குடுத்து தொட்டிலில் போடும் போதே அவன் தூங்கிப் போயிருப்பான். அது தாய் வீட்டிலிருந்து வாங்கிக் கொடுத்த தொட்டில் கம்பியில். கிலுகிலுப்பை கட்டி விட்டிருக்கும். தூங்கியவன் எழக்கூடாது என்று ஒரு தாலாட்டு படிப்பாளே அது கேட்டு பக்கத்து வீட்டுலயும் தூங்கிப் போயிருவாங்க
ஆமா எண்ணை தேய்த்துக் குளித்ததற்கும் , தாய்ப் பால் குடிச்சதுக்கும், தாலாட்டு கேட்டால் எந்தப் பிள்ளைதான் தூங்காது. ஐந்தாறு அவில் மாத்திரை சாப்பிட்டது போல் தூக்கம் வரும்.
அம்மாவின் தாலாட்டு இப்படித்தான் துவங்கும்


தொடரும்.

எழுதியவர் : ராசைக் கவிபாலா (8-Feb-14, 5:09 pm)
பார்வை : 302

மேலே