நேசம்

சிறுகதை
எழுதியவர் பிரபாவதி.கோ

அந்த நிசப்தமான நள்ளிருளில் பிரியா கடிகாரதையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.பிரிந்திருந்த காதலர்கலான கடிகார முட்கள் இரண்டும் ஒன்றாக இணைந்து முத்தமிட்டு சத்தமாக நேரம் பன்னிரெண்டு ஆகிவிட்டதை சுட்டிக் காட்டியது.

சென்ற வருடம் இதே நேரம் அவள் ஆருயிர் காதலன் ரவி அலைபேசியில் பிறந்த நாள் வாழ்த்து மழை பொழிந்தது நினைவிற்கு வந்து அவள் கன்னங்களை நனைத்தது அவளை அறியாமல் பெருகிய கண்ணீர். வாழ்த்து சொல்ல விழித்திருந்த நண்பர்களால் அலைபேசி ஓயாமல் அலறிக் கொண்டிருந்தது. எடுத்து பேச மனமில்லாமல் அதை சைலெண்ட் மோடில் போட்டு படுக்கையில் சாய்ந்தாள். கவலை நிறைந்த மனம் தூங்காமல் அடம் பிடித்தது. சென்ற ஆண்டு அவனுடன் சேர்ந்து கொண்டாடிய அந்த பிறந்த நாள் நினைவுகள் மனக் கண்முன் வந்து வட்டமிட்டன.அந்த நினைவுகளை அசை போட்டுக் கொண்டே எப்பொழுது தூங்கினாலோ அவளுக்கே நினைவில்லை.
கண் விழித்ததும் மீண்டும் அதே நினைவுகள் வந்து ஒட்டிக் கொண்டன. காலண்டரில் தேதி 11-12-13 எனவும் கடிகாரத்தில் காலை 3.00 மணி எனவும் காட்டியது. எத்தனை மகிழ்ச்சிகரமான நாள் இது. பாரதியார் பிறந்த நாளில் தானும் பிறந்ததை எண்ணி எவ்வளவு மகிழ்ந்திருப்பாள்.இப்படி ஒரு அழகான நாள் எத்தனை பேருக்கு பிறந்த நாளாக அமைய முடியும். இந்த நாளை எப்படியெல்லாம் கொண்டாடலாம் என்று சென்ற வருடத்திலிருந்து திட்டமிட்டிருந்தாள். ஆனால் அதை கொண்டாடும் மனநிலையில் அவள் இல்லை அந்த சந்தோஷமும் அவள் முகத்தில் இல்லை. அவள் உயிருக்கு உயிராக நேசித்த அவனும் இன்று அவள் அருகில் இல்லை.அவன் எங்கு சென்றானோ?எப்பொழுது வருவானோ?யாருக்கும் தெரியாது. அவன் பிரிந்து சென்றதில் இருந்து அவள் இப்படி நடை பிணமாகி விட்டாள் அலைபேசி வாழ்த்துமொழி குறுஞ்செய்திகளால் நிரம்பி வழிந்திருந்தது. அவனை தினமும் தேடி அலைவதே அவளது வேலையாக இருந்தது.

கண்களை கசக்கி வெளியில் வந்து பார்த்தால் வாசல்கள் எல்லாம் குளித்து விட்டு வண்ண வண்ண பூ கோலம் அணிய தயாராகிக் கொண்டிருந்தன. இவளும் குளித்து "இறைவா எங்கிருந்தாலும் என் ரவி இன்று என்னை பார்க்க வரணும்" என்று வேண்டிக் கொண்டு அந்த மார்கழி பனியில் தனது ஸ்கூட்டியை கிக்கினாள். தெருவெல்லாம் வண்ண கோலங்கள் கம்பளம் விரித்து வாழ்த்து சொல்லி வரவேற்றன.

அவள் எங்கு செல்கிறோம்,எதற்காக செல்கிறோம் என்று தெரியாமல் அவன் நினைவுகளை சுமந்தபடி காற்றின் போக்கில் போய்க் கொண்டிருந்தாள்.எதிரில் வேகமாக வந்த வாகனம் மோதியதில் ஒருகணம் நிலைகுலைந்து நடுரோட்டில் விழுந்தாள்.

"அம்மா " என்று அலறி சுதாரித்துக் கொண்டு எழுந்திரிக்க முயலுகயில் அவன் கை கொடுத்து தூக்கி விட்டான். தூசி தட்டிக் கொண்டே தூக்கி விட்ட அவனை நன்றியுடன் பார்த்த அவள் பேச முடியாமல் ஊமையாகி நின்றாள்.அவள் கண்களை அவளாலையே நம்ப முடிய வில்லை.இது நிஜம் தானா என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவன் அவளை தன்னருகில் இழுத்து அவள் காதுக்குள் ஹப்பி பர்த்டே ஹனி " என்று கிசுகிசுத்தான்.

பூரித்து போய் அவன் மார்புக்குள் முகம் புதைத்து அவனை இறுக அனைத்துக் கொண்டாள்,விட்டு விட்டால் மீண்டும் எங்கே காணாமல் போய் விடுவனோ என்கிற பயம் அவளுக்கு. அந்த அரவணைப்பு அவளுக்கு எல்லையில்லா சந்தோசத்தை கொடுத்தது. அவள் கூந்தலை இதமாக வருடிய படி அவளை அருகில் இருந்த பார்க்கிற்கு அழைத்து சென்று அங்கிருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்தார்கள்.

"ரவி" என்று அவள் ஏதோ சொல்ல முயல அதற்குள் "ஷ்ஷ்ஷ்" என்று அவள் உதடுகளில் விரல் வைத்து எதுவும் பேச வேண்டாம் என்றான். அவள் பூ போன்ற முகத்தை தன் கைகளுக்குள் அள்ளி சிவந்திருந்த அவள் உதடுகளை தன் உதடுகளால் ஒற்றினான்.விழிகளை மூடி அந்த முத்தத்தை முழுமையாக ரசித்தாள். அவன் பிரிவின் தாக்கம் சோர்ந்து போன அவள் உடலில் தெரிந்தது. தூக்கமற்ற வறண்ட அவள் கண்கள் அவளுக்கு அவன் மேல் இருந்த காதலை சொல்லியது. கடந்த வருடம் இதே நாளில் அவளை விட்டு காணாமல் போன அவன் இன்று இப்படி திரும்பி வருவான் என்று அவளுக்கு தெரியாது. எது எப்படியோ அவனது அருகாமை அவளுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது.

அந்த பனி மூடிய காலை பொழுதில் சூரியனும் மேக போர்வையிலிருந்து வெளிவர தயங்கும் நேரத்தில் அவனும் அவளும் மட்டும் இப்படி அன்பில் உறைந்து கிடப்பது சுகமாக இருந்தது.

மரத்தில் இரண்டு காகங்கள் அவர்கள் இருப்பதை கூட பொருட்படுத்தாமல் காதல் செய்துக் கொண்டிருந்தன. அவற்றை பார்த்து அவன் புன்னகைக்க அவள் வெட்கத்தில் அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள் .அவன் அவளை அணைத்துக் கொண்டு " நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய் " என்றான். வெட்கத்தில் முகம் சிவந்தாள்.

" உன்னை எவ்வளவு மிஸ் பண்ணினேன் தெரியுமா?" என்றாள். அவள் கண்களில் துளிர் விட்ட கண்ணீரை அவன் விரல்களால் துடைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டு .

"இது நீ சந்தோசமாக இருக்க வேண்டிய நாள்.இப்படி அழலாமா?' என்றான்.

"அப்போ நீ செய்தது மட்டும் சரியா?" எதிர் கேள்வி கேட்டாள்.

"இனி அப்படி செய்ய மாட்டேன்" என்றான்

"இனி எப்பவும் என் கூடவே இருப்பியா ?" குழந்தைத்தனமாக கேட்டாள்.

"ம்ம்ம்" என்று தலையசைத்தான்.

"நீ இப்படி சொல்லாமல் கொள்ளாமல் என்னை விட்டு பிரிந்து செல்வாய் என்று நான் நினைக்கவே இல்லை.எதற்கு இப்படி செய்தாய் ரவி"

" என்னை மன்னித்துவிடு பிரியா எல்லாம் எதிர்பாராமல் நடந்து விட்டது" என்றான்

எது எப்படியோ அவனின் வருகை சொல்லமுடியாத மகிழ்ச்சியை தந்தது அவளுக்கு.அவள் கண்களை மூடி நடந்ததை எல்லாம் நினைத்து பார்த்தாள்.அவனை முதல் முதலாக பார்த்தது, அவன் தன் காதலை சொன்ன விதம், அவள் பெற்றோரிடம் அவர்கள் காதலை சொன்ன விதம், திடிரென்று ஒரு நாள் காணாமல் போனது, இப்பொழுது இப்படி மீண்டும் இணைந்தது என எல்லாநிகழ்ச்சிகளும் ஒன்றின் பின் ஒன்றாக அவள் கண் முன் நிழலாடின. மீண்டும் கண்ணீர் உற்றென பெருகி ஆறாக அவள் கன்னங்களில் பாய்ந்து ஓடியது.

அவள் கண்களை இதமாக துடைத்த " ஐ லவ் யூ ஹனி " என்று அவள் கண்களை .ஆழமாக பார்த்தான்.

" ஐ லவ் யூ டூ " என்று குதூகலமாக அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

தான் அணிந்திருந்த சொட்டரை கழற்றி அவளுக்கு போர்த்தி விட்டான்.
அவனது இந்த அரவணைப்புக்காக தானே அவள் இத்தனை நாள் ஏங்கி கிடந்தாள்.இந்த காதல் நிறைந்த அன்பிலும் அரவணைப்பிலும் ஆயுள் முழுக்க அடைந்து கிடக்க தானே விரும்பினாள்.

நீண்ட நேரம் அவர்கள் இருவரும் அங்கேயே ஒருவர் மடியில் மற்றொருவர் சாய்ந்து அன்பில் திளைத்தார்கள்.இந்த குறுகிய கால பிரிவு அவர்கள் காதலை மேலும் பலப்படுத்தியது.ஒருவரை ஒருவர் எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதை உணர்த்தியது.

"சரி வா வீட்டுக்கு போகலாம். உன்னை பார்த்தால் அம்மா அப்பா இரண்டு பெரும் ரொம்ப சந்தோசப்படுவாங்க " என்றாள்.

அவன் எழுந்து அவளுடன் கைகோர்த்து நடந்தான் அவன் தோளில் சாய்ந்து சாலையோர பூக்களை தன் மறுகையால் வருடியபடி நடந்தாள் அவள். அந்த பூக்களில் இருந்த பனித்துளிகளை இலைகளை அசைத்து அவன் மீது விழ செய்தாள். அவளது இந்த விளையாட்டுதனத்தை ரசித்தபடி நடந்தான். அவளிடம் ஓர் ஆண்டு காலமாக காணாமல் போயிருந்த புன்னகை,மகிழ்ச்சி எல்லாமே அவன் வருகையால் திரும்பி வந்து ஒட்டிக் கொண்டது .

சற்று தூரம் நடந்ததும் கூட்டமாக மக்கள் இருந்ததை பார்த்து " ஏய், அது என் வண்டி " என்று கத்தி கூட்டத்தை விலக்கி நின்றிருந்த காவலர்களை தண்டி அந்த வண்டியின் அருகே ஓடினாள்.அவனும் அவளை பின்தொடர்ந்தான்.

அங்கே இறந்து கிடந்த அவள் சடலத்தை கண்டதும் அதிர்ச்சியில் சிலையாக உறைந்து நின்றாள்.

"ர ....ர....வி.... அது....அது....." அதற்கு மேல் பேச முடியாமல் அவன் தோளை இறுக பற்றிக் கொண்டும் கண்களை மூடிக்கொண்டும் கையை நீட்டி காட்டினாள்.

இறந்து கிடந்த அவள் தேகத்தை ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு போனார்கள்.

அப்பொழுது தான் காலையில் வண்டியில் வரும்போது அவளுக்கு நேர்ந்த விபத்து நினைவிற்கு வந்தது. அந்த விபத்தில் தான் ரவியை சந்தித்தாள். அப்படியென்றால் நீயுமா??? என்பதுபோல் கண்களில் நீர் ததும்ப அவனை பார்த்தாள்.

"ஆம். உன்னை பார்க்க வந்த அந்த இரவு ஒரு லாரி மோதி என் உயிரும் உடலும் உன்னை விட்டு பிரிந்தது" கண்களில் கண்ணீர் வழிய சொன்னான்.

"இனி நம்மை யாரும் பிரிக்கவே முடியாது ரவி" என்று அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.அவளின் அந்த நேசமே அவனுடன் அவளை சேர்த்தது. அவன் அருகில் இருப்பதால் மரணத்தை கூட ரசித்தாள்.

----------------------முற்றும் -------------

எழுதியவர் : பிரபாவதி.கோ (8-Feb-14, 7:11 pm)
Tanglish : nesam
பார்வை : 245

மேலே