ஒற்றை கண்ணோன் வினோதன்
இருட்டுக் கண்ணாடியை
போர்த்தியபடி விழித்திருப்போம்
இமைக்கவே செய்யாமல்,
புருவங்களற்ற உருவமானோம்
உயிரின்றி உருவானோம்
உயர்சாதி உறவானோம் !
பணம் திருடுவோரும்
மனம் திருடுவோரும்
மாட்டிகொள்வர் என்னிடம்,
பொய் சொல்லத்தெரியாத
அளவிற்கு - உண்மையானவன் !
அழகு தேவதைகள்
எனைசுற்றி வந்தாலும்
ஒரு அளவிற்குமேல்
வளையாத கழுத்தெனக்கு,
வரைந்த பாதையில்
பயணப்பட்டு திரும்பும்
திருப்தியற்ற வாழ்வெனக்கு !
ஆங்கில வில்லன்கள்
முதலில் சுடும்போது
உணராத வலி - நானே - சில
நபர்களால் சுடப்பட்டபோது
உணர்ந்திருக்கிறேன் !
கவனிக்க கூடாத
சிலவற்றை - நான் வேறேதும்
வழியின்றி கவனிப்பதுண்டு !
என் கண்களில் வழியே
கன்னியர் நோக்கும் - காடையர்
தாக்க வரம்கூட கேட்டதுண்டு
அக்கன்னியர் கடவுளிடம் !
ஓர் உண்மை நவிழ்கிறேன்
நகைத்து விட வேண்டாம் !
நானே தூங்கிவிட்டாலும்
நடக்கவேண்டிய வேலைகளை
நானிருக்கிறேன் என்ற
பதாகை பார்த்துகொள்ளும்...!
(பெரும்பாலான கடைகளில் ஓரமாய் உட்கார்ந்து, நடப்பதை கவனித்து, களவாணிகளை கைகாட்டும் தானியங்கி காமிராக்களை பற்றியது
"இருட்டுக் கண்ணாடி" என்ற சொல்லாடல் என் நண்பன் சரவணாவின் "இழந்ததும் இருப்பதும்" என்ற கவிதையின் 14 வரியிலிருந்து உரிமையோடு திருடப்பட்டது)

