உனக்கு என்ன செய்தேன்

என் அன்னையே என் தாயே!
அன்னையீனற பின்னே
என்னைத் தாங்கியவளே!
அன்னையின் கருவிலிருக்கும் போதே
என் அன்னையையும் தாங்கி
என் முன்னோர்களையும் தந்தவளே!
நான் வாழ உன் மடி தாங்கியவளே!
உனை நாளும் மிதித்துதைப்பதைத் தவிர
நானுனக்கு வேறு என்ன செய்தேனம்மா?

இந்தியா என் தாய்த்திரு நாடு
அதை நான் உளமார நேசிக்கிறேனென்றுப்
பள்ளிப் பருவத்தில் உறுதி மொழி சொன்னேன்
ஆனாலுன்னை நேசிக்க மறந்த பாவியம்மா!
ஓட்டு என்ற பெயரில் வேட்டு வைக்கும்
கயவர்களிடமிருந்து காப்பாற்றினேனா?
லஞ்சம் தின்று வயிறு வளர்க்கும்
வஞ்சகரிடமிருந்துப் பாதுகாத்தேனா?

நாட்டைத் துண்டு துண்டாய்க் கூறு போட்டு
அன்னிய நாட்டிற்கு அடிமை சாசனமெழுதும்
அடங்காப் பிடாரிகளைத் அடித்து துரத்தினேனா?
மொழியயும் சாதியயும் சொல்லி
வெட்டி வெறுப்பேத்தும் வேடதாரிகளை
விரல் நுனி கோபத்தில் விரட்டித் தள்ளினேனா?
இலவசத்தைக் கண்டு இளித்தபல்லுடன்
இங்கிதங்களை மறந்தோரிடம்
சங்கதிகளைச் சொல்லி சாதிக்கத் தூண்டினேனா?

மதுவுக்கும் மாதுவுக்கும் மாயவலைக்கும்
மயங்கித்திரியும் எம்குல இளைஞர்களுக்கு
மடமையுணர்த்தி மாற்றுவழி சொன்னேனா?
உழைக்கத் தெரியாத சோம்பேறிகளுக்கு
உணவை இலவசமாய்க் கொடுத்து
உழைப்பை டாஸ்மார்க்கில் உறிஞ்சும்
ஊமையவலத்தை உலகிற்கு உணர்த்தினேனா?
பசிக்குத் திருடியவன் சிறையிலும்
வசதிக்குத் திருடியவன் ஏசியறையிலறங்கும்
வாழ்க்கையின் அவலத்தை வழியிலாவது மொழிந்தேனா?

சட்டத்தின் ஓட்டைகளையும் கறுப்புச் சட்டையணிந்து
கட்டம் போட்டுப் பிரிக்கும் கயவர்களைத் துரத்தினேனா?
தேர்தலில் தெரிந்தெடுக்கப் பட்டோர்
பாராளுமன்றத்தில் தூங்கி வழியும்
பாதகத்தைச் பாதியாவது சொன்னேனா?
அமளியென்ற பெயரில் ஆட்டம் போட்டு
கோடிகளைச் செலவழித்து வாழ்வின் நியதிகளைத்
தெருக் கோடிக்கு கொண்டுவந்த
ஆண்டிமட வர்க்கத்தின்அதிகார ஆட்டத்தைத் அடியோடு அடக்கினேனா?
அன்னியசெலவாணியின் பெயரை சொல்லியே
பொன் விளைந்த பூமியின் பொக்கிஷமாம்
பிறக்கப் போகும் குழந்தையின் தலையையும்
அன்னிய நாட்டில் அடகுவைத்த
அன்னிய நாட்டு சீதேவியை
அடங்கிப் போகச் சொன்னேனா?

தலைப்பா கட்டுப் பிரியாணி போல்
தாய்நாட்டையே பிரித்துக் கொடுக்கும்
டர்பன் தலைகளின் தாண்டவத்தை
தரணியாள முடியாதபடி தயவின்றி வீழ்த்தினேனா?
விவசாய மக்களின் காணி நிலத்தையும்
தொழிற்சாலையின் பெயரைச் சொல்லி
தொலைத்துக் கொள்ளும் வேதனையை
வெளுத்துக் கட்டி விரட்டினேனா?
வெற்றிலைப் பாக்கிற்கும் வெள்ளைத் தோலனுடன்
கை நீட்டும் வேதனையை
வேடிக்கைக்காவது சொன்னேனா?

உன் வயிற்றில் ஒட்டிப் பிறந்த மக்களை
பிரித்த பாவத்தைத் தவிர வேறென்ன செய்தேன்?
ஆனாலும் நீயென்னை கருணையோடு தாங்குகிறாயே!
ஏதோவொன்று செய்வாளென்று
எதிர் பார்த்து நிற்கிறாயே!
நேர்கொண்ட பார்வையையும் நிமிந்த நன்னடையும்
உறிதி கொண்ட நெஞ்சையும் உறிதியாய் தந்தாயே!
நானுனக்கு என்னசெய்தேனம்மா?
பச்சைப் பிள்ளையின் கையில் வேலைக்கொடுத்து
புறப்படுவென்று சொன்ன
வீரப் பரம்பரையில் பிறந்தவள்,
புறப்படுகிறேன் தாயே! உன்னைக் காக்க
என் தாயை வளமாக்க ! வாழ்க்கைத் தரமுயர்த்த!
என்னுடல் மறுமுறையுன் கருவறையில்
உறங்குமுன்னே மாற்று வழியோசித்து
மறுவாழ்க்கைத் தருவேன் தாயே!
இந்தியா என் தாய்த்திரு நாடு
நான் அதை உளமாற நேசிக்கிறேன்.............!

.................சஹானா தாஸ்!

எழுதியவர் : சஹானா தாஸ் (9-Feb-14, 10:05 am)
பார்வை : 260

மேலே