வேண்டும்

"வேண்டும்"
[ வேண்டும் என்னும் சீர் ஆசை,விருப்பம்,
தேவை என்னும் பொருள்களில்
ஆளப்பட்டுள்ளது ]

[ வேண்டாமை அன்ன விழுச்செல்வம்
ஈண்[டு]இல்லை
யாண்டும் அஃ[து]ஒப்ப[து] இல்.
திருக்குறள் 0363 ]

வேண்டும் வேண்டும் "வேண்டும்"
என்பது விளங்க வேண்டும்--
வேண்டும் என்பது வேண்டும்,
வேண்டும் இடங்களில் வேண்டும்--
வேண்டும் என்பது யாண்டும்
வேண்டாமை யாக வேண்டும்--
வேண்டாத போது "வேண்டும்"
வேண்டாது போக வேண்டும்--

மூண்டெழும் மூட நம்பிக்கை யாவும்
மாண்டு மடிந்திட வேண்டும்-- மனத்தைச்
சீண்டும் சிறுமதி சிதைந்து--குறள்நெறி
யாண்டும் சிறக்கும் ஞாலம்அது வேண்டும்---

தீண்டும் பாம்புகள் திருந்திட வேண்டும்---
கூண்டுக்கிளி கூண்டுவிட்டு ஓடவேண்டும்---
தாண்டும் தப்பும், தவறுகளும் தவறாது
பூண்டோடு அழிந்து போதல் வேண்டும்---

சிரிக்க வேண்டும்--உண்டது
செரிக்க வேண்டும்--நோயைப்
பிரிக்க வேண்டும்--அன்பைத்
தரிக்க வேண்டும்-- அறிவை
விரிக்க வேண்டும்--அவாவை
முரிக்க வேண்டும்--தீயதைத்
உரிக்க வேண்டும்--தூயதை
விரிக்க வேண்டும்; வேண்டும்---

மதிவேண்டும்; மாசிலா நிதிஆக வேண்டும்--
விதியேஎன வீழ்ந்திடாது, விடியல் தேடும்
கதிஎனக்குக் கைகூட வேண்டும்--சதியோடு
துதிபாடும் நண்பரைத் துரத்திவிட வேண்டும்--
புதியன பூத்துப் பதிவாதல் வேண்டும்--
மிதிஎனும் மதியோர் மாறிட வேண்டும்--

என்னைநான் புரிந்து கொள்ளும்
எண்ணத் தெளிவு வேண்டும்--
மண்ணையும் தெரிந்து வாழும்
மனமும் வரமாக வேண்டும்--
"தன்னைத் தானே வென்றிட
முடியாத எவரும்-- இந்த
மண்ணை வென்றிட முடியாது"
என்னும் அறிவுபெற வேண்டும்---

தூண்டும் அறம்ஓங்கித்,
தூயபொருள் ஈண்டிப்,
பேரின்பம் பெருகிடத்--திருக்குறள்
ஞானநெறி வாழ்வாக வேண்டும்---
வேண்டும் வேண்டும்
கம்பன் புகட்டிய
கவின்மிகு பாட்டுஎன் மனத்துள்
மையம் கொள்ள வேண்டும்---
மீண்டும் மீண்டும்
பாரதியார் தேன்பாட்டு
வேண்டும் போதெல்லாம்--காதில்
ஓங்கி ஒலித்திட வேண்டும்--
பாராண்ட பழந்தமிழன்
பாட்டால் ஞாலமெலாம்
மீண்டும் மீண்டும் வாழவேண்டும்---
யாண்டும் நலம்பல சூழவேண்டும்--

வேராக விழுதாகத் தாங்கும் நட்பே
வாழ்வாக வந்துகூட வேண்டும்---
சேர்ந்து சிறக்க வேண்டும்---
தேராக, ஓடும் ஆறாக என்வாழ்வு
நேராக நிலையாக வேண்டும்---
பேராத அறங்கூறும் முப்பாலின் பாக்கள்
வாழ்வாகி நலந்தர வேண்டும்---
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

எழுதியவர் : பேராசிரியர் (11-Feb-14, 6:19 am)
சேர்த்தது : Arangarasan V
பார்வை : 47

மேலே