மரணத்துக்கே தூக்கா
குடலை குமட்டும் ரத்த வாடை. ஆங்காங்கே கிழிந்துத் தொங்கும் சதைகள். அடிவாங்கிக் கன்னிப் போயிருந்த உடல் அங்கங்கள் பொத பொதவென வீங்கிருந்தன. தடித்த பிரம்புகளால் புட்டத்தை நன்காய் பதம் பார்த்து விட்டிருந்தனர். கொளுத்த பிரம்பு நான்கு நள்ளி எலும்புகளைக் கஷ்டமில்லாமல் இஷ்டப்பட்டு உடைத் தெரிந்திருந்தது. கண்கள் கனத்திருந்தது ; திறக்கமுடியாமல்.
இந்தக் சிறப்பான பூஜைகள் எல்லாம்
வேறு யாருக்கும் இல்லை. எனக்கே தான் ! எனக்கே எனக்கே தான் ! இதுவெல்லாம் நடந்திருப்பது என் அறையில் தான் ! என் சிறைச்சாலை அறையில் தான் !
வசமாய் விலாசி எடுத்திருந்தார்கள் என்னை. கொஞ்சமும் மனசாட்சி இன்றி. இருந்திருந்தாலும் அப்படியே என்னை ஒன்றும் செய்யாமலா இருந்திருப்பார்கள். கேட்டால் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்பார்கள்.
அடப் போங்கடா.... ! எங்கேயடா போயிருந்தீர்கள் கொஞ்ச காலத்திற்கு முன்பு ?! அன்றே நீங்கள் செய்ய வேண்டியவற்றை சரியாய் செய்திருந்தால் இன்று என்னிலை இப்படி சிறையில் சிரிப்பாய் சிரித்திருக்காது. செமத்தியாய் அடியும் வாங்கிக் கொண்டிருக்க மாட்டேன். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் நாளை எனக்கு தூக்காம்.
அப்படித்தான், சொல்லிச் சென்றார்கள் கடமைத் தவறேல்கள். முடிந்தால் தூக்கிலிடுங்கள் ! சத்தியமாய் சாக மாட்டேன் ! காரணம் நான் வாழப் பிறந்தவன் ! , என்றேன் அதற்கு கிடைத்த பரிசுதான் இந்த அடியும் உதையும்.
அடித்து துவைத்து கந்தல் துணியாக்கி கொண்டு வந்து கடாசியிருந்தார்கள் என்னை என் அறையில் ஒரு மூலையில். சுருண்டி போய் சொருகியிருந்தேன் அந்த அறையில் கண்களை மூடி, கைகளையும் கால்களையும் பின்னிக் கொண்டு அட்டைப் போல் சுருங்கி வலுவிழந்து வலிக்கும் வலியை வெளித் தெரியாமல் துங்குவதாய் பாசாங்குச் செய்திருந்தேன் நான்.
ஆடிய ஆட்டம் என்ன !
பேசிய வார்த்தை என்ன !
தேடிய செல்வமென்ன !
வீடு வரை உறவு !
வீதி வரை மனைவி !
காடு வரை பிள்ளை !
கடைசி வரை யாரோ !
பாடினான் இசையின்றி எதிர் செல்லில் கம்பிகளைப் பிடித்து தொங்கிக் கொண்டு பாட்டரசன். பெயரே பாட்டரசன் என்றால் அவன் பாடும் பாட்டுகளும் சும்மா இல்லை. எல்லாமே அர்த்தமுள்ள மனித வாழ்க்கையின் உண்மைகளை வெளிக்கொனர்ந்திடும் சகார்த்தங்கள் தாம்.
கேலியாய் என்னைப் பார்த்து பாடுகிறான் என்று ஒருக்காலும் சொல்ல முடியாது காரணம் அவன் பெரும்பாலும் அமைதியாகவே இருப்பான். எப்போதாவது ஒரு தடவைத்தான் அத்திப் பூத்ததுப் போல் வாய்த் திறப்பான். அப்படித் திறக்கும் போது பேசவே மாட்டான். அவன் பாட்டுத்தான் பேசும். பாட்டுத்தான் அவனது அடையாளம்.
ஐயா ராசா.... சாப்பட வாயா.....
என் அம்மாவின் குரல் மிகத் தூரத்தில் இருந்து என் காதுகளில் கேட்டது. அம்மா.... என் அம்மா. நீ ஏன் தொலைவினில் இருந்து பேசுகிறாய் ? என் காதுகளுக்கு எட்டாமல் ஏன் இருக்கிறாய் ? என் கைகளுக்கு நீ தீண்டத்தகாதவளா ? என் கண்களுக்கு நீ புலப்படக் கூடாதவளா ? ஏன் அம்மா ? ஏன் நீ என்னை விட்டுச் சென்று விட்டாய் ?
ராசா ராசா.... என்று அனுதினமும் வாய் நிறைய அழைத்த நீ எங்கேச் சென்று விட்டாய் ?
புழுங்கல் அரிசியில் சோறு சமைத்து, நாட்டுக் கோழி குழம்பு வைத்து, வாய்க்கு ருசியாய் தொட்டுக்க மரக்கறியும் அசைவக்க கறியும் சமைத்து அழகான உன் பொன் விரல்களால் உருண்டைப் பிடித்து என்னை முற்றத்தில் அமர வைத்து வாய் நிரம்ப சோறு ஊட்டி விட்ட நீ எங்கே ?
வாய்.. ருசியான உணவுகளை ; நீ சமைத்த உணவுகளை தேடுகிறது. உன் பாசமான சமையலை ஏங்குகிறது. உன் அன்பான அரவணைபிற்காக உள்ளமும் தேகமும் நிம்மதியின்றி அலைகின்றது.
அம்மா... அம்மா... அம்மா.... என் அம்மா மீனாட்சி. நீ மதுரை மீனாட்சி தானடி எனக்கு. உன் எழிலான வட்ட வடிவ முகம். சாந்தமான மீன் கண்கள். உண்மையையும் நல்லதையும் என்றைக்கும் உரைக்கும் உன் பொன்னானா உதடுகள். உன் நெற்றியில் நீ வைத்திருக்கும் அந்த குங்குமப் போட்டு. அப்பா என்ற ஒருவர் எனக்கு நினைவுத் தெரிந்த நாளிலிருந்தே இல்லை. நீதான் எல்லாமே எனக்கு. நீ மட்டும் தான் உலகம் எனக்கு.
நான் இன்னும் மறக்கவில்லை அம்மா. அவன் ! அந்த நயவஞ்சகன் உன்னையும் என்னையும் ஏமாற்றிய அந்தப் பணப் பேய். அவனைத் தேடித் தேடித் அழுத்துப் போயிருந்த என்னை கடவுள் ஒரு வாய்ப்பு தந்து அவன் கதையை முடிக்க செய்து விட்டார். கடவுளுக்கு நன்றி.
எந்த வாயினால் அவருக்கு நன்றிச் சொல்கிறேனோ அதே வாயினினால் அவரை நான் தூற்றி இருக்கின்றேன். தும்சமாக்கி விடுவேன், அவரை நேரில் கண்டால் என சபதம் போட்டுள்ளேன். அந்த விஷ வேசப் பாவி. அதான், உன் தம்பி அம்மா. உன் தம்பியாய் பிறந்து கொஞ்சமும் ரத்த பாசமில்லாமல் என் கண் முன்னே உன்னை . . . . . . சீ ! அல்ப சொத்துக்காக நம் குலத் தெய்வம் முனியாண்டியின் கையிலிருக்கும் அரிவாளை எடுத்து வந்து கொடூரமாய் சாரமாரியாக உன்னை வெட்டி வீசி என் முகத்தில் காரித் துப்பிச் சென்றவனை நினைக்க நினைக்க என் ரத்த நாளங்கள் சூடாகி முறுக்கேறி அவனை கொல்ல தெருத் தெருவாய் மோப்பம் பிடித்து நாயாய் அலைந்தேன்.
மாட்டினான் அன்று வசமாக. எந்த முனியாண்டியின் கையிலிருந்த அரிவாளால் உன்னைக் கொன்றுத் தீர்த்தானோ , அதே அரிவாளைக் கொண்டு நிஜமாகவே முனியாண்டியின் சந்நிதானத்தில் நின்று அவர் முன்னாலையே அவனை ஓட விட்டேன். நரசிம்மராய் உருவெடுத்தேன் அவனைக் கொல்ல. உயிர் மேல் ஆசைக் கொண்ட, ஒண்ட வந்த பரதேசி ஓடினான், ஓடினான் முடிந்தவரை ஓடினான். முடியாத பட்சத்தில் மண்டையைப் பிளக்கும் வெயிலில் சுருண்டு விழுந்தான்.
எப்படி அம்மா அவனுக்கு மனம் வந்தது. உன் சொந்த ரத்தம் தானே அம்மா அவன். பிறகு , ஏன் அவனுக்கு இந்த கேவலமான புத்தி ? உனக்குப் போய் தம்பியாய் பிறந்திருக்கிறானே ! அவன் உன் கால் தூசிக்குக் கூட வர மாட்டான். நீ அவ்வளவு நல்லவள். அவன் அதை விட பன்மடங்கு கெட்டவன்.
யார்தான் ஊரில் அவனைத் தூற்றவில்லை. என்னையும் உட்பட எல்லாரும் அவனைக் கரித்து கொட்டுவதில் மிகுந்த ஆர்வம் காட்டினர். காரணம் அவன் செய்த விஷம்பமான காரியங்கள். சொல்லவே நாக் கூசும் விசயங்களை எப்படித்தான் முடிந்ததோ அவனால் செய்ய. ஊரில் உள்ள அனைவரிடத்திலும் வால் ஆட்டி விட்டு இறுதியில் உன்னிடமே. என் அம்மா உன்னிடமே வால் ஆட்ட நினைத்தால் நடக்குமா அது. விடுவேனா நான் !
நீ குளிப்பதை ஒளிந்து பார்க்கத் துடித்த அவனைத், துடி துடிக்க வீட்டின் பின் வாசலில் போட்டு துடபங்க் கட்டையால் நான் அடிக்க, அதை வந்து நீ தடுக்க, அதனால் நமக்குள் மோதல் வர, பேசாமல் போனாயடி ! என் தாயே ! என்னிடம் ஒரு வாரம். அவன் செய்தது சரியென்று நீ வாதிடா விட்டாலும் தம்பி, என்ற ஒரு பாசம் அவனை நான் அடிப்பதைக் காண சகிக்காமல் உன் நெஞ்சம் பதை பதைத்ததை பின்னாளில் ஒரு நாள் நீ சொல்ல நான் தெரிந்துக் கொண்டேன் அம்மா. போகப் போக அவனிடத்தில் ‘மாமா’ என்ற மரியாதைப் போய் வெறும் குலசேகராய் ஆகிப் போனான்.
நாட்கள் ஓட ஓட அவனது நடவடிக்கைகள் கவனிக்கப்பட வேண்டியவை ஆகின. ஆவனுக்கென்றொரு ஒருக் கூட்டத்தை அமைத்துக் கொண்டான். அவர்களுடனேயே சுற்றித் திரிந்தான் வெட்டியாய். அம்மா நீ அவனுக்கு திருமணம் செய்ய விரும்பினாய். நான் தயக்கூர்ந்துக் கேட்டுக் கொண்டேன் ஒருப் பெண்ணின் வாழ்கையை அநியாயமாக தெரிந்தே அழிக்காதே என்று. நீ அதற்கு பின்பு அந்தப் பேச்சையே நிறுத்தி விட்டாய்.
ஒரு நாள் திடிரென்று உயில் எழுதப் போவதாய் சொன்னாய். திகைத்தேன் நான்; அதற்கென்ன அவசரம் என்று. எப்போது எப்போது எனப் பதறினான் ஆர்வத்தில் அவன் அன்று. எல்லாம் ஒரு முன்னேற்பாடு என்றாய் நானும் பேசாமல் தலையாட்டி ஒதுங்கி நின்றேன். ஆர்வமாய் உன் பக்கத்தில் அமர்ந்து கால் பிடித்தான் அவன். நீ சிரித்தாய்.
வக்கீல் ஐயா வந்து அனைத்தையும் எழுதி முடித்தார் உன் விருப்பபடி. அவனுக்கு முகம் வெளிறி கோபத்தில் சிவந்திருந்தது. அவனுக்கு வெறும் கால் அளவு சொத்துதான் என்று விட்டாய் அதனால். மீதத்தை என்னகென்று சொல்லி விட்டாய். அப்போதே தெரிந்து விட்டது உன் மேல் நிச்சயம் கடுங் கோபம் கொண்டுள்ளான் என்று.
ஆனால், அன்றிரவே நினைக்கவில்லை இதன் தொடர்பாய் உனக்கும் அவனுக்கு காரசாரமான பேச்சு வாரத்தை நடக்கும் என்று. உந்தன் குரவளையைப் பிடித்து அவன் இருக்கிய நேரம் என்னறையிலிருந்து நான் வெளியே ஓடி வந்தேன். உன் கையாட்கள் என்னறைக் கதவை வெளிப் பக்கம் தால்ப்பால் போட்டு நான் பார்க்க உன்னைக் கன்னத்தில் அறைந்தான் அவன் ! அந்தக் குலசேகரன் !
அதே வேளையில் வக்கீலையும் அவனதுக் கைகூலிகள் குண்டுக் கட்டாய் தூக்கி வந்து அங்கனமே உயிலை மாற்றி எழுதப் பணித்தனர். வக்கீலின் மகளையும் இழுத்து வந்திருந்தனர். அவர் சம்மதிக்காவிட்டால் அவளைச் சீரழித்து விடவும் துணிந்திருந்தனர். பாவம் பொன்னைப் பெத்தவர். அவரால் என்னச் செய்ய இயலும். அவர் தாமதிக்கின்ற ஒவ்வொரு நிமிடமும் அங்கே அவர் மகளின் தாவணிக் கொஞ்சங் கொஞ்சமாய் உருவப்பட்டது. அதைக் கானச் சகிக்காத அவரும் என் அம்மா நீயும் , அவர்கள் சொன்னப்படிக் கேட்டீர்கள்.
உயிலை மாற்றி எழுதி வாங்கிக் கொண்டு அதில் என் அம்மா, உன்னை வலுக் கட்டாயமாக உன் கைநாட்டை வாங்கிக் கொண்டு வக்கீலையும் அவர் மகளையும் வெளியில் இதைப் பற்றி மூச்சு விட்டால் வீட்டில் கொலை விழும் என பயங்குடுத்தித் துரத்தி விட்டனர்.
அதன் பின்னே , உன்னை ! என் அம்மா ! உன்னை ! நான் எவ்வளவு கெஞ்சியும் கதறியும் கொஞ்சங்க் கூட மனசாட்சியே இன்றி ; நீ சமைத்த உப்பையே மூன்று வேளையும் நன்றாய்க் கொட்டிக் கொண்டு நன்றி உணர்ச்சி அற்ற கேவலமான ஒரு ஜென்மமாய் உன்னைக் கொன்றுப் போட்டு போன அவனை நான் அவ்வளவு சுலபத்தில் மறந்திட முடியுமா அம்மா !
பணம் பத்தும் பேச ஆரம்பித்திருந்தது. அவன் செய்த கொலை, கொலை இல்லையாம். நீ அவனைக் கொல்ல வந்தாயாம். அதற்காகத்தான் அவன் உன்னைக் கொன்றானாம். பணத்தைக் கவ்விக் கொண்ட பொறுப்பற்ற மிருகங்களின் வாக்குமூலம். அதற்கு உடந்தை நானாம். அடேய், உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன் என்றச் சத்தியத்தோடுத்தான் நான் லோகாப்பிலிருந்து தப்பினேன்.
தப்பிய ஒரு வாரக் காலம் உன்னைத் தேடி அலைந்தேன். முகமூடி திருடனாய் சமயம் பார்த்துக் காத்திருந்து உன்னை உன் வீட்டில் அத்தனைக் காவலாளிகள் இருந்தும் அனைவரின் கண்களிலும் மண்ணைத் தூவி உன்னை உன் காரிலேயே அதே முனியாண்டி சந்நிதானத்தின் முன் கொண்டு வந்து உருட்டி விட்டேன் கோணிப் பையிலிருந்து.
சுருண்டு விழுந்திருந்தவன் கைகள் கூப்பி கதறினான். மண்டியிட்டுக் கதறினான். தலையில் அடித்துக் கொண்டு உயிர்ப் பிச்சைக் கேட்டான்.
எப்படி அம்மா தர முடியும் அவனுக்கு உயிர் பிச்சை ? எப்படித் தர முடியும் ? உன்னைக் கதற கதற அரிவாளால் வெட்டி வீசிய அவனுக்கு எப்படித் தர முடியும் உயிர் பிச்சை ? உந்தன் உயிர் பிரியும் அந்தக் கோரக் காட்சி, என்னை உன் தலையைத் தூக்கி மடியில் போட்டுக் கொண்டு குருதியில் வீற்றிருந்த உன் அழகு முகத்தை என் கைகளில் ஏந்தியிருக்கக் காரணமானவனுக்கு எப்படித் தர முடியும் உயிர் பிச்சை ? மனித ஜென்மமே இல்லா இந்த உணர்வுகள் அற்ற ஜடத்துக்கு ஏன் தர வேண்டும் உயிர் பிச்சை ?
தந்தால் மட்டும் நீ என்ன வந்து விடவா போகிறாய் அம்மா ? இல்லையே ! என் தெய்வம் நீ திரும்பி வரப் போவது இல்லையே ! என்றைக்கு நீ போனாயோ, அன்றைக்கே நீ தந்த இந்த உயிரும் போய் விட்டது ! அது உறுதி ! இந்த வெறிப்பிடித்த ஜடம் அவனைக் கொல்லவேக் காத்திருந்தது. ஆதலால், இவனைக் கொன்றேத் தீருவேன் !
டேய்.................... !! எனப் பாய்ந்து அவனை, என் அம்மாவைக் கொன்ற அதே முனியாண்டியின் அரிவாளால் வெட்டிச் சாய்த்தேன். அம்மா...... !! உன்னைக் கொன்றவனைக் நான் கொன்று விட்டேன் ! கத்தி எடுத்தவன் கத்தியாலே சாவான் ! அவன் கத்தியால் உன்னைக் கொன்றான் ! அதேக் கத்தியால் நான் அவனைக் கொன்றேன் ! கணக்கு முடிந்தது.
அவனது புளித்த ரத்தம் என் முகத்தில் பீய்ச்சி அடித்தது. நான் வதம் செய்த ஆத்ம திருப்தியில் கண்களை மூடி வானை நோக்கி தலை தூக்கி நின்றேன். ஈஸ்வர் முனிஸ்வரனாகிய நான் செய்தால் இதுக் கொலை ! இது நரசிம்மர் செய்திருப்பது ! ஆகவே இதற்கு பெயர் சுர சம்ஹாரம் கொலை அல்ல !