குடி

டாஸ்மாக் மூடுகிற நேரத்தில், கடைசியாக நாலு பேர் உள்ளே போனார்கள். சற்றுத் தொலைவில் கான்ஸ்டபிள் காத்துக் கொண்டிருந்தார்.

இன்னும் ஒரு கேஸ் பாக்கியிருக்கிறது.
குடித்துவிட்டு வண்டி ஓட்டியதற்க்காக ஒரே ஒருவன் சிக்கிவிட்டால்,இன்றைய கோட்டா ஓவர்.
பதினைந்து நிமிடம் கடந்தது. டாஸ்மாக்கில் விளக்குகள் அணைந்தன. முதல் ஆள் வெளியே வந்தான். அப்படி ஒன்றும் ஆட்டமில்லை.

கொஞ்சம் ஸ்டெடிதான். அடுத்த ஆள் வாட்டர் பாக்கெட்டை வீசி எறிந்தபடியே உடனே வந்தான். அவனும் பெரிதாகத் தள்ளாடவில்லை. மூன்றாவது ஆளும் நான்காவது ஆளும் ஒன்றாக வெளியே வந்தார்கள்.

மூன்றாவது ஆளின் கையில் கடைசி பெக். வாசலிலேயே குடித்தான். நான்காவது ஆளுக்கு நிற்கவே முடியவில்லை. அவனை மற்ற அனைவரும் சேர்ந்து தோளில் தாங்கியபடி கார் சீட்டில் உட்கார வைத்தார்கள்.
”மச்சான் பார்த்துடா . . . ஜாக்கிரதையா போயிடுவல்ல”
”ழோ..ழோ..பிழாப்ளம். ழான் பாழத்துழ்கறேன்”, அவனைப் போலவே அவனுடைய குரலும் தள்ளாடியது.

மற்றவர்கள் அவனை விட்டுவிட்டு அவரவர் பைக்கில் தள்ளாடியபடியே ஏறிப் போனார்கள். கடைசி ஆள் இன்னமும் கார் சாவியை துளாவிக் கொண்டிருந்தான்.
”கார் வச்சிருக்கானா? நல்ல வெயிட் பார்ட்டி சிக்கிருச்சி, மீட்டர் போட்டுற வேண்டியதுதான்.”கான்ஸ்டபிள் முகத்தில் புன்னகை.
”மிஸ்டர் காரை விட்டு இறங்கு”
”எழுதுக்கு?”
”நீ குடிச்சிருக்க. குடிச்சிட்டு கார் ஓட்ட உன்னை அனுமதிக்க முடியாது. நல்லா வசமா மாட்டிக்கிட்ட”
”யாழ் சொழ்னது நாழ்ன் குழ்டிச்சிழுக்கேன்னு. நாழ்ன் குழ்டிக்கல”

”மிஸ்டர் நான் நினைச்சா உன் டிரைவிங் லைசென்ஸ்சையே கேன்சல் பண்ணிடுவேன். ஆயிரம் ரூபா குடுத்துட்டா உன்னை விட்டுடறேன். ஓடிப்போயிடு”
”சாழ்ர் . . . நாழ்ன் குழ்டிக்கல”
”டாய் யாருகிட்ட பொய் சொல்ற? ஊதுடா?”
அந்த இளைஞன் ஊதினான். என்ன ஆச்சரியம்? குடி நாற்றத்தை கண்டுபிடிக்கிற மீட்டரில் ஒரு சிறு அசைவு கூட இல்லை.

”டாய் . . . நல்லா ஊதுடா”, இந்த முறை கான்ஸ்டபிள் தனது மூக்காலயே அவன் ஊதியதை மோப்பம் பிடித்தார். துளி கூட சரக்கு நாற்றம் வரவில்லை.
”டேய், உண்மையை சொல்லிடு. கொஞ்சம் கூட வாய் நாறல. எப்படிடா அது?”

”அட அது ஒண்ணும் பெரிய மேட்டர் இல்ல சார்”., பேசிக் கொண்டே கார் சாவியை கரெக்டாக செருகினான்.
”தினமும் எல்லாருமே குடிப்போம். ஆனா ஒருத்தர் மட்டும் குடிச்சா மாதிரி நடிப்போம்”

”எதுக்கு?”

”உங்கள மாதிரி ஆளுங்கள ஏமாத்தறதுக்குதான் . . .வரட்டா”, காரை ஸ்டார்ட் பண்ணி ஸ்டைலாகப் பறந்தான் அவன்.

நீதி: மது அருந்தாதீர்கள்.மது அருந்தாவிட்டால், நீங்கள் உங்களை மட்டுமல்ல, மது அருந்துபவர்களையும் காப்பாற்றலாம்....

எழுதியவர் : முரளிதரன் (12-Feb-14, 9:40 am)
Tanglish : kuti
பார்வை : 227

சிறந்த நகைச்சுவைகள்

மேலே