நிழலாகிய நான்

தனிமை இரவு!!!
மின்வெட்டு!!!
செவியுணரா ஓலமிடும் சத்தம்!!!
இருட்டறையில் கருவறைக் குழப்பம்??!!!

பிரசவித்து வெளிப்பட்டேன்
பால்நிலா பல்லிளித்து பரிகசித்தது
படிவழி ஏறிப் பார்த்தேன்
கண்கூச்சமற்ற நிலவொளி!!!
உடல் கூசியது

ஓலமிடும் சத்தம் ஒய்யார
சிரிப்பாய் இப்போது!
பயந்து பின்வாங்கினேன்
வாமன அவதாரம் எடுத்தது
என் நிழல்!!!

மயான அமைதி
நிழல் நிசப்தம் கலைத்தது . . . . . . . .

உன்னுடன் சில நிமிடங்கள்??!!
சில கேள்விகள்??!! முதிர்த்து
தெளித்தது வார்த்தைகளை

மௌனியாய் நான் . . . . .

உன்னுடன் இறுதிவரை வருபவர் யார்?!!!

காடுவரை பிள்ளை கடைசிவரை???
தயங்கினேன் . . . .

நான்தான் என்றது நிழல்

உண்மை!! மீண்டும் மௌனித்தேன்

எங்கே ஓடிக்கொண்டிருக்கிறாய்???
............................................!!

எதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறாய்???
............................................!!

உன் அவசர பயணத்தின் நோக்கம் யாது???
............................................!!

நாம் காலார நடை பயின்றது எப்போது???
............................................!!

இறுதியாய் எனை உற்றுக் கவனித்தது எப்போது???
............................................!!

மாணவன் உள்ளுணர்வறிந்த ஆசானாய்
கேள்விகளை நிறுத்தி விளக்கம் அளித்தது

நோக்கமற்ற உன் பயணத்தில்
அடிபட்டு நான் கிழிந்த நாட்கள்
சொல்கிறேன் கேள்!!!

உன் பின்னால் கத்திக் கொண்டு
குத்துயிரும் கொலையுயிருமாய்
அலைந்த நாட்கள் என்சொல்வேன்!!

உன்இருகரம் பற்றி இழுத்து
ஏங்கிப்போன நாட்கள் என்சொல்வேன்!!

உன்முன் வந்து மயக்கியும்
வாகனசக்கரத்தில் சிக்கி மடிந்தும்
மண்றாடிய நாட்கள் என் சொல்வேன்!!

தொலைக்காட்சிப் பெட்டியில்
தொலைந்து நீ போகையில்
தோள் உரசி நான் அழுத
அவல நாட்கள் என் சொல்வேன்!!

உறக்கத்தின் உச்சத்தில் நீ
புரண்டு புரண்டு படுத்திருக்க
நான் துவண்டு துவண்டு
துடித்தது என்சொல்வேன்

குளியலறையிலேனும் உன்னுடன்
குலாவியிருக்க ஆசைப்பட்டிருந்தேன்
குளியலுனக்கோர் குலவழக்கமாய்
போனதென் சொல்வேன்!!

..............................

இறுதியில் ஒன்று

தெளிந்தேன் என்றேன்!!!

குறுநகையில் கொன்று
தொடர்ந்தது!!

என்றேனும் கண்ணாடி முன்
நீ ரசித்து பார்க்கும் போதுதான்
நிழலாகிய நான் உன் உடலணிந்து
உயிர்பித்திருக்கிறேன்

என்று இன்பமுரைத்து வேண்டியது

பிம்பம் என்பதால் பிணம் என்று
எண்ணாதே !!!
உயிர்கொண்டதால் நீ உண்மை
என்று ஆகிவிடாய்!!!
இனியேனும் எனை உயிர்பித்து
மகிழ்விப்பாயா!!! என்று

மின்வெட்டிற்கு நன்றி சொன்னது

நிழலுடன் நிலவு ரசித்திருந்தேன்
தெருவிளக்கு உயிர்பித்து
நிழலை விழுங்கியது!!
மின்(னை) வெட்ட வேண்டும்
போலிருந்தது

நிழலாய் படியிறங்கி
குளியலறை விளக்கிட்டு
உட்புகுந்தேன்! வெளியே
தொலைக்காட்சி தொடர்
நாடக ஒளிபரப்பு ஓசை!!

குளியலறையில் கும்மாளமிட்டு
குதூகளித்தது நிழல் !!

செவிடனாய் !!!
...............................................
...............................................
...............................................
...............................................

வெளியே சென்றேன். . . . . . . .

ஒவ்வொருமுறையும்
நிழல் கழுவி நிஜமுடுத்த
முற்பட்டு தோற்றுக்கொண்டே
இருக்கிறேன்

நிழலாகிய நான்!!!


- தாமரை

எழுதியவர் : தாமரைச்செல்வன் (12-Feb-14, 11:01 am)
பார்வை : 175

மேலே