வாழையடி வாழை

ஊருக்குள்ள பெரிய பண்ணை,
வீட்டுக்குள்ள அடங்கி நின்னு,
இள ஆட்டு சதைக்கறி
இளையவளுக்கு புடிக்குமுன்னு
கேட்காம எடுத்து வரும்
அப்பங்காரனையும்.......
பல்லு கூட விளக்காம
துயில் முறித்த கையோடு,
நாட்டு கோழி ரசத்தோடு,
ஊட்டி விட்ட அம்மாவையும் மறந்து விட்டு......
ஆட்டு குட்டி, மாட்டு குட்டி
அத்தனையும் விட்டுப்புட்டு
என்னை நம்பி
ஓடி வந்த,
உன்ன எப்படி கண்ணு பார்த்துப்பேன் !
கண்ணுக்குள்ள வைச்சாலும்
பத்தாது ரத்தினமே !!
தலையணை நனைக்கும்
உன் கண்ணீரை- எனக்கு
தெரியாம மறைச்சுப்புட்டா,
உன் எண்ணம்
உன் அப்பன் தான்னு- எனக்கு
தெரியாம போயிடுமா ?
புள்ள ஒன்னு பெத்துப்புட்டா,
மொத்த கணக்கு தீருமுன்னு
மன கணக்கு
போட்டு வைச்சேன்.
என் கணக்கு தப்பலையே !
ஐயிரண்டு மாசத்துல,
ராசாத்தி பொறந்துடுச்சே !!
அப்பனுக்கு சொல்லலையான்னு- நீ
கேட்காம கேட்கையிலே ,
உன் அப்பங்காரன் மீசை மட்டும்
கண்ணுக்குள்ள நிக்குதடி...
உன் மாமங்காரன் விட்ட அடி
தலும்பின்னும் மறையலையே...
உன் ஆத்தாக்காரி விட்ட சாபம்
நெஞ்சம் இன்னும் மறக்கலையே...
தந்தி கிடைக்கும் முன்னே
வந்து சேர்ந்தான்
அவன் அப்பங்காரன்...
“வாங்க மாமா” ன்னு
சொல்லயில,
மதிக்காம உள்ள போனான்...
நீ உருப்படாம தான்
போவேன்னு
திட்டிய மாமங்காரன்
அடங்கிய காளைய போல்
தூக்கி முத்தமிட்டான்...
இம்புட்டு அழகான்னு
உச்சி முகர்ந்து பார்த்துப்புட்டு,
அப்படியே அவ ஆத்தா மாறீன்னு
புகழாரம் சூட்டிப்புட்டு,
எவன் தூக்கிட்டு போவானேன்னு-
கிழவி நையாண்டி பேசுகையில்,
எவன் தூக்கிட்டு போவானோன்னு-
கிழவி நையாண்டி பேசுகையில்,
நானும் ஒரு அப்பனாகி
பயம் வந்து ஒட்டிடுச்சே !!!