காதல் பரிசு

முதலில் மறுத்த
நீ
முயற்சிகள் செய்த
நான்
விலகியோடிய
நீ
விடாமல் தொடர்ந்த
நான்
ஏதோ ஒரு
புள்ளியில்
என்னைப்பிடித்துப்போன
நீ
உலகையே
வென்றது போல
உவகை கொண்ட
நான்
என்
உலகத்திற்குள்
வந்து
ரசித்துப்பார்த்த
நீ
உன்
உலகத்திற்குள்
வந்து
வியந்து பார்த்த
நான்
ஒரு
ரசாயன மாற்றத்தில்
நானாகிய
நீ
நீயாகிய
நான்
நாமாகிய
நாம்
பேச்சு என்ற
நீர் வார்த்து
காதல் செடி
வளர்த்த
நாம்
சந்தித்த போதெல்லாம்
குழந்தையான
நாம்
கடற்கரையில்
அமர்ந்து
வானம் பார்த்த
நாம்
மூலை இருக்கை
கிடைத்தும்
படம் மட்டும்
பார்த்த
நாம்
முதல் சிகெரெட்
புகைக்கும்
சிறுவனின்
மனநிலையில்
முதல் முத்தம்
முயன்று பார்த்த
நாம்
வாழ்த்து அட்டை
தேர்ந்தெடுக்கவும்
மணிக்கணக்கில்
மெனக்கெட்ட
நாம்
அலைபேசிப் பேச்சில்
பாட்டுக்குப் பாட்டு
விளையாடிய
நாம்
தள்ளுவண்டிக் கடையில்
பானிப்பூரி
சாப்பிட்ட
நாம்
பிறக்கும்
குழந்தைக்கு
பெயர்கள்
தேர்ந்தெடுத்த
நாம்
சண்டை போட்டு
சண்டை போட்டு
சமாதானமான
நாம்
இந்தக்
காதலர் தினத்தில்
உனக்கொரு
உயர்ந்த பரிசைக் கொடுத்துவிடும்
முனைப்பில்
நான்
இந்தக் கவிதையை
மீண்டுமொருமுறை
படித்துப்பார்த்து
கண்ணீர் துளிர்க்கும்
நீ