தற்காப்புக் கலை
அமைச்சர் : மன்னா! புதிதாக நம் படையில் சேர்ந்துள்ள இளவயது வீரன் ஒருவன், தற்காப்புக் கலையில் புதிய,புதிய உத்திகள் புரிந்து ஆச்சரியமளிக்கிறான்..! அதைக் கண்டு நம் படைத்தளபதியே வியந்து விட்டார் என்றால் பாருங்களேன்!
மன்னன் : அப்படியா..! வரச்சொல்லுங்கள் அந்த வீரனை, அமைச்சரே.
(வீரன் வந்து அரச மரியாதை செலுத்தி நின்றபின்...)
மன்னன் : வீரனே.. உன் திறமையை கேள்விப்பட்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். சொல் உன் குருநாதர் யாரென்று? அவரிடம் நம் படையினரை அனுப்பி பயிற்சி எடுக்கச் செய்வோம்.
வீரன் : மன்னியுங்கள் மன்னா! அது முடியாது.ஏனென்றால் நான் முறையாக பயிற்சி பெற்றவனல்ல.
மன்னன் : அப்படியா..! பின் எப்படி இந்த திறமை உன்னிடம்?
வீரன் : என் மனைவிதான் காரணம் மன்னா..
மன்னன் : புரியவில்லையே....
வீரன் : மன்னா... எனக்கு திருமணமாகி இரண்டே மாதங்கள் ஆகின்றன. இந்த இரண்டு மாதத்தில் என் மனைவி என்னை அடித்துத் தாக்காத நாளே இல்லை.அவள் என்னை தாக்க வரும்போதெல்லாம் அடி பலமாகப் பட்டு, படுகாயம் அடைந்து விடாமல் இருக்க நான் மேற்கொண்ட செயல்கள்தான் நீங்கள் என்னிடம் காணும் திறமைகள் மன்னா..!
மன்னன் : அப்படியா..! சபாஷ்! ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பது இதுதானோ! நாட்டைக் காப்பதிலே பெண்களின் பங்கைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்! அமைச்சரே....நாட்டில் உள்ள வயது வந்த வாலிபர்களுக்கு,தாமதிக்காமல் உடனடியாக திருமணத்தை செய்து வைத்து,நாட்டின் படை பலத்தை கூட்டுங்கள்!
அமைச்சர் : ஆகட்டும் மன்னா.. அப்படியே செய்கிறேன்.பெண்கள் நம் நாட்டின் கண்களல்லவா!!