நானொரு வரலாறு

சில தாடிகளின்
பேடித்தனங்களை மூடி
மறைக்கின்ற திரைச்சீலையாய்
தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு
களங்கமுற்ற நிகழ்வோலை

பல திருப்புமுனைகள்
போர் முனைகள் சந்தித்த
பின்னணியின்
ஆன்ம அறியாமைகளைத்
தோலுரிக்கும் புலனடக்கச் சயனம்

வேற்றுமைகள் சரிதலும்
ஒற்றுமைகள் புரிதலுமான
சாணக்கியம்
ஓதும் அர்த்தமுள்ள
சாத்திரத் தொலைநோக்கி

கறைகளை உச்சி முகரும்
நாசிகளுக்கு
மரணபீதியின் நரம்புகள்
புடைத்ததை விளக்கும்
விளக்கப்படம்

காலச் சுவடுகளின்
பிரதி பிம்பங்களைத்
தோற்றுவிக்கும் மாயக்கண்ணாடி
உள்ளது உள்ளவாறும்
இல்லாதது உள்வாங்கியும்

விடிகின்ற காலைகளின்
திராணியற்ற சலனங்களைத்
தருவிக்கும் தேற்றம் - சிறப்பு
விருந்தாளியாக கூற்றுவன்
அழைக்கப்பட்ட மேடை

வெளியுறவு
மற்றும்
உள்ளுறவுக் கொள்கைகளின்
முக்கியப் பிரதிநிதிகளாய்
வருடம் ,தேதி ,மாதம்

பழைய பொருட்களைத்
தேக்கிக் கொண்டிருக்கும்
இருட்டறை
சுவாரசியங்கள் செரித்துவிட்ட
இறந்தகால எச்சம்

நாளையும் பழையதானால்
அதன் மறுநாளுக்கு அது
விடிவிளக்கு - நேற்றைக்கான
திறப்பிற்கு தேடப்படும்
மாற்றுச் சாவி

கால ஓட்டத்தின்
விளையாட்டுத் திடல்
உடன்படிக்கைக் கூடுகளுக்கான
மரம் - அரசியல்வாதிகளுக்கான
நடத்துனர்

நினைவுச் சின்னங்களின்
முகவரி
கல்வெட்டுக்களின்
மூலப்பத்திரம்
மண்ணுலகச் சித்திரகுப்தன்

எண்கணித மேதைகளின்
தந்திரக்கோல் ;
எனக்கெனவும் காத்திருக்கும்
மரணத்தின் பின்னணியாய்
என்னைப் புரட்டுவது .....!

எழுதியவர் : புலமி (16-Feb-14, 9:00 pm)
பார்வை : 231

மேலே