சொல்லாத என் காதல்

கடல் என்ற தமிழில்
தேர்ந்தெடுத்த அழகிய முத்துக்களாம்
என் தமிழ் எழுத்துக்கள்...
என் உயிரை நூலாக்கி
அதனுள் என்னவனை இதழாய் கோர்த்து
நான் செய்த மாலை தான்,
என்னவனுக்காக நான் எழுதிய கவிதை...
பாய்மரக் கப்பலில் என் கால்கள் ஏறிய
அடுத்த நிமிடம் துடுப்பாய் வந்தாய்
என் வாழ்வில் நான் கரை சேர...
என் கால்கள் தானாய் உன்னோடு நடக்க
அக்கால்களும் ஏங்குகிறது
உன்னோடு வாழ்வின் எல்லை வரை வர...
உன்னை பார்க்கும் போது தனிமையை வெறுத்தேன்
ஆனால் இப்போது அத்தனிமையும் என்னை வெறுக்கின்றது
நீயின்றி என்னைக் காணும் போது...
உன்னுடன் நடந்த பாதைகளிடம் கற்றுக்கொண்டேன்
என் காதலை,
நீ ஏன் என்னை விலகிச் செல்கிறாய் ,
இப்போது விடை பெற்ற பறவைகளும் விடையின்றி போகிறது...
நீ என்னுடன் பேசும் போது என் விழிகள்
நாணம் கொண்டு என் விரலுடன் சொல்ல,
என் நகத்தின் ஆயுள் ரேகை தேய
அது என்னிடம் குற்றம் சொல்கிறது...
உன் பெயரைக் கேட்கும் போது தான்
வாழ்வின் அர்த்தத்தை உணர்ந்தேன்...
நீ என் பெயரை அழைத்த போது தான்
என் காதலின் அர்த்தத்தை உணர்ந்தேன்...
உன் பெயரை கேட்பதற்காகவே உன் நண்பர்களிடம்
பேசிய நாட்கள் உண்டு...
உனக்கு பெண்களிடம் பேச பிடிக்காது என்று
கேள்வி பட்ட பின்பு தான்,
எனக்கு பெண்களே பிடிக்க ஆரம்பித்தது...
தோழிகளே இல்லாத ஆண் நீ மட்டும் தான்...
தண்ணீரில் வாழாத தாமரையாய் நீ இருக்க,
தாமரையின் இலையில் ஊஞ்சலாடும்
ஒரு துளி நீராய் வாழ ஆசை படுகிறேன்...
நீ நெடுஞ்சாலையை கடக்கும் போது
காற்றும் ஒரு நிமிடம் உனக்கு வழி விட்டு செல்லும்...
நீ என் பக்கத்தில் அமர்ந்த போது தான்
என் பெண்மையை உணர்ந்தேன்...
நீ சென்ற நிமிடத்தில் தான்
இதயத்தை தொலைத்ததை உணர்ந்தேன்...
இரவினை வெறுக்கின்றேன்,
உன்னைப் பார்க்க வரும் விடியலுக்காக
காத்திருக்கும் வேளையில்...
நிலவிடம் உன்னைப் பற்றிக் கூறும் போது
அந்நிலவும் வெட்கப் பட்டு
தேய்கிறது...
பின்பு அந்நிலவும் பௌர்ணமியாய் உயிர் பெறுகிறது
உன்னைப் பற்றி கேட்க...
உன்னை மட்டுமே நினைத்து வாழும்
உனக்காகவே வாழும்
உன் தோளில் சாய ஏங்கும்
இன்னும் என் காதலை சொல்லாமல்
ஊமையாய் வாழும்
உன் இதயம் நான்...