கற்பனை பெண்ணாகி

தீ பூத்த கண்கள் தென்றல் சுடும் வேகம்
திங்கள்முகம் தீப்பிளம்பின் துண்டம்
நீர் ஓடும்கன்னம் நின்றதென்ன சூட்டில்
நிறை செவ்வண் ணெரிமலையின் சீற்றம்
நேர் கொண்ட பார்வை நீட்டுமிரு வாளோ
நெஞ்சமதில் மூச்சென்ற சூறை
கார் தோற்ற குழலும் கன்னமிரு பக்கம்
காற்றோடு போராடும் தோற்றம்

பார்போற்றும் வண்ணம் பார்த்த மகள்கோபம்
பனிபோர்த்த அடர்காட்டின் அச்சம்
நார் நீத்த பூவோ நலிகின்ற மென்மை
நடையோதள் ளாடும்சிறு பிள்ளை
வேர் விட்ட மரமோ விதைவயல் இல்மழையோ
வெற்றுவெளி சுடுவெயிலின் வதையோ
தேர் இல்லை அசைவில் தினம்பூத்த கொடியும்
துணை நின்றமரமற்ற நிலையில்

நேர் பார்த்து நின்றேன் நிலைஇவளின் ஏது
நேர்ந்ததென அறியாமை துக்கம்
சீர்ஏற்ற வதனம் சிதையுமொரு குற்றம்
செழுமைதனைக் கொன்றதெவ னென்றேன்
போர் கூட்டு முழவம் போடுமொலி இல்லை
பூமொட்டு விரல் கொண்டு காட்டி
யாரென்று கேட்டாய் நீயன்றி எவனோ
யானென்ன செய்வதென நின்றாள்

தேர் என்று தமிழை தினம் ஊட்டி விட்டால்
திரும்பி நீ நிற்பதென் மனிதா
கூர்கொண்ட எழுதும் கோலெங்கு வைத்தாய்
குற்றம்நீ கொள்தண்டம் என்றாள்
எர்பூட்டி உழுவோன் இதமான காலம்
உழுது மண் கொள்ளாத காலை
சேர்க்கின்ற பாவம் சுற்றமும் கொள்ளும்
சிறுதீயும் பசிஎன்று தீய்க்கும்

பேர் எண்ணிச் செய்யும் பெருவினைகள் யாவும்
பேசற்ற விதமாக மாறும்
வார்த்தோடும் மழையும் வற்றாத ஆறும்
வழிதோறும் தாகத்தை ஆற்றும்
பூர்வீக நன்மை புதிதாக்கி வைத்தேன்
பொன்னான மென்வீணை நாதம்
ஆர்க்கின்ற மணிகள் அசைவொலி சதங்கை
அத்தனையும் மண்கொள்ள வேண்டாம்

கோர் அழகினாரம் கொள் கவிதை சாரம்
குறைவற்றே ஊற்றும் நீரோடை
மார்மீது தவழும் மகிழ்வோடு மழலை
மனங்கொள்ள உண்டெழும் கோலம்
தீர்ந்த பசியாலே சிரிக்கின்ற விழிகள்
தென்றலம் மேனிதொடத் தியங்கும்
தார்மீகம் கொள்ளு தருவதில் குறையா
தமிழ்பாடு பாடு பாடென்றாள்

எழுதியவர் : கிரிகாசன் (20-Feb-14, 5:34 pm)
சேர்த்தது : கிரிகாசன்
Tanglish : karpanai pennaagi
பார்வை : 87

மேலே