என் மகளாகப் பிறப்பாய் அம்மா - மணியன்
 
            	    
                பாய் விரித்த படுக்கையில் 
நோய் விரித்துப் படுத்திருந்தாள். 
பத்து மாதம் கருச்சுமந்த 
பாசமிகு என் தாய். . . . .  
******* 
எனக்கான உயிர் கொடுத்தாள் 
தனக்காக எதை எடுத்தாள் 
பொழிந்திட்ட அன்பு மட்டும் 
போர்வையாய் போர்த்திக் கொண்டாள். . . . 
******* 
தாலாட்டி எனை வளர்த்தாள் 
பாலூற்றக்  காத்து இருந்தாள் 
கிண்ணம் கொண்டு அமுதூட்ட 
எண்ணம் எனக்கு இல்லையம்மா . . . . 
******* 
மார் முட்டி அருந்தியதை 
உயிர் விரட்ட கொடுப்பதுவோ 
பார் முழுதும் இப்பழக்கம் 
பழக வைத்தப் பாவியரே. . . . 
******* 
துடியாய்த் துடி துடித்தாள் 
முடியாமல் நான் அழுது 
தெரியாமல் திகைக் கின்றேன் 
தேவை என்ன நானறியேன். . . . 
******* 
பெண்கள் குல மங்கையவள் 
கண்ணால் எனைத் துலாவுகின்றாள் 
என்னைக் கண்டு மேதுபயன் 
பின்னர் நான் தீவைக்கவோ. . . . 
******* 
கதை சொல்லி வளர்த்தவளே 
சிதை யினிலேச் சாம்பலாக 
அதைக் காணும் என்மனமும் 
பதை பதைத்து ஓலமிட. . . . . 
******* 
கணக்காக உயிர் பிரித்து 
காலன் உன்னைக் களவாட 
கன்றும் நான் மீண்டுமுந்தன் 
கருவறை உள் புகுவேன். . . . . . . 
******* 
என்று நான் தீர்ப்பதம்மா 
எனக்கு நீயளித்த கடன் 
ஏதேனும் ஓர் பிறவியேனும் 
என் மகளாய்ப் பிறப்பாயம்மா. . . . . . .  
*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*--*
	    
                
