எழுதாத கவிதை -மலர்1991

கவிதை எழுதினேன்
கருத்தே இல்லாமல்
கண்டபடி கிறுக்கியது
கவிதையாய் மலர்ந்திடுமா?

கட்டுரை எழுதவோ
போதிய நேரமில்லை
மனம் மட்டும் ஓயாமல்
சிந்தனைச் சிதறல்களிடை.

மனதில் கிறுக்கி வைத்தால்
நீரெழுத்தாய்ப் போகிறது.
நினைவுக்கு எட்டாமல்
தடம்புரண்டு செல்கிறது.

உறங்கும் சிலமணி நேரமும்
கனவும் வருவதில்லை
புரண்டு படுத்துச் சிந்தனையச்
சுரண்டிப் பார்த்தாலும்
மிஞ்சுவது வெறுமையே.

வெறுமையைத் தட்டித் தட்டி
பொறுமை இழந்ததுதான் மிச்சம்.
கவிப்பெண்ணின் பிணக்கம்
களையிழந்த சுணக்கம்
அவளோடு உறவாட
நான்கு சுவர்கள் என்தடை.

கட்டிடக் காடுகளில்*
மனிதனின் கைவண்ணம்
மனம் இனிக்கும் காட்சிகளை
இயற்கையின் மடி சுமக்க
தவழ்ந்து வரும் பேரழகு
அவள் சுரந்த படைப்புகளில்.

இவை தவிர்த்து பேரின்பம்
எய்திட எண்ணினால்
எனைத் தழுவக் கவிதைப்பெண்ணும்
எதற்கிங்கு வருவாளோ?


*Concrete Jungle

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (21-Feb-14, 9:15 pm)
பார்வை : 102

மேலே