எங்கே எங்கள் அஞ்சல் அட்டை
வலைப்பதிவுகளிலோ...
வரைபடங்களிலோ மட்டும்
செல்லுபடியாகும் சில்லறைப்
பொறியங்களின்
பண்டமாற்று தூதுவத்
தேவதையே......!!
உன் மதிப்பீட்டுப் பகர்வுகளும்
தொலைந்து
போயிருக்கின்றன...உன்னைப்
போலவே.....
தெரியுமா உனக்கு...?
புறாக்களுக்கு ஒய்வளித்த
உன்னையும் ஒழித்துப்
போட்டிருக்கிறதே இந்த
உலகமயமாக்கல்......!!!
தாங்கி வருவன எல்லாம்
செய்திகளல்ல...
எதிர்பார்ப்புகள்.....!!!
மணிச் சத்தங்களோடு
கற்றைகளாய் வந்திறங்கும்
வேளைகளில் எவரின்
இதயங்களிலிலும் தீப்பிடிக்கும்....
அழகோ.... அமானுஷ்யமோ....
தீப்பிடிக்கும்....!!!
முத்தக்கறைகளில்
சத்தமேற்றி காதல் வளர்த்ததும்.
இரத்தக் கறைகளில்
சோகம் தாங்கி கண்ணீர் திரித்ததும்...
குழந்தை பிறப்பை - அதன்
குப்புறத் திரும்பல் நாட்களில்
பகர்ந்து குதூகலித்ததும்....
மையூற்றி கைச்செடிகள்
வளர்த்த மலர்த்தோட்டங்கள்
தாங்கிப் பறந்ததும்....
முதுகிலடித்த முத்திரைகளுக்கு
புன்னகைத்து
கையசைத்துப் பிரிந்ததும்.....!
உறைகளில் பதுக்கி
உயிர்கொண்டு சேர்த்ததும்......
மூளைக்குள் பதிவுகளாய்
நெஞ்சுக்குள் நினைவுகளாய்
மருகியிழுக்க....
சிதைத்து போன உன்
சிவப்புக் குடிலுக்குள் கைவிட்டுத்
துழாவுகிறேன்... தொலைந்து போன
கடைசி மிச்சங்கள்
தேடிச்சேமிக்க..... !! கையறுத்து
வழியனுப்புகிறது நீ
தொடமறந்த தகரச்
சிதிலமொன்று......!!!

