கூக்குரல்
தவமிருந் திளைத்தேன்...
தனிமையி லுழன்றேன்...
தேவனே ஏனென்னைத்
தேற்றிட வரவில்லை?
யாப்பிசைத் தழைத்தேன்...
யாகஞ்செய் தழுதேன்...
ஆயிரஞ் செய்துமேன்
ஆற்றிட வரவில்லை?
கண்ணீர் கசக்கலையா?
கடுந்தீயு மெரிக்கலையா?
கன்முன்னெனைக் கண்டபின்னும்
கல் நெஞ்ச முருகலையா?
கல்லா?
கண்ணிழந்தவனா?
கொடுங்கோலனா?
கொடுக்கமன மில்லாதவனா?
ஏனிந்தச் சிறுமை?
எதற்கிந்தத் தனிமை?
எல்லாமே வெறுமை...
ஏன் செய்தாய் தவறை?
***
எங்குறைந்தா யிறையே...
எனக்குள் ளுறையாமல்
எங்குறைந்தாய்?
என்னுளந் துடிக்கையிலே
என்னுடல் தவிக்கையிலே
என்னகந் தேற்றாமல் நீ
எங்குறைந்தாய்?
கல்லா?
கண்ணிழந்தவனா?
கொடுங்கோலனா?
கொடுக்கமன மில்லாதவனா?
*************