பாவை
இருபது அகவை
இளம் மங்கை மனது ,
தன்னை ரசிக்கும்
யாவரையும் ரசிக்கும் !
உன்னைப் பிடிக்கும்
என்பார்க்கு நிச்சயமாய்
இடமுண்டு !இதயத்தின்
ஏதோ ஓர் மூலையில் !!
என்னை நேசி எனத்
தொல்லை தருபவர்களை
விட்டு விலகி தன்னை மட்டும்
விரும்பும் ஒருவனிற்காக
ஏங்க ஆரம்பிக்கும்
உள்ளம் மட்டும் ரகசியமாய் !
கடந்து செல்லும் முகங்களில்
எல்லாம் கனாக்களில் பழகிய முகம்
தேடத் தோன்றும் !
குட்டிக் குட்டி ஆசைகள்
கோர்த்து மாலையிட எண்ணம்
மணாளனின் நெஞ்சத்திற்கு!
சேர்த்து வைத்த மயிலிறகுகளாய்
மனதை அள்ளும் நினைவுகளை
மண் மணக்கும் பண்பாட்டில்
செப்பனிட ஆசை கொள்ளும்
அழகிய இதயம் !!
தான் மையல் கொண்டு
மதி மயங்கும் ஒற்றை
நொடிக்காக காலமெல்லாம்
காத்திருக்கும் கன்னியின்
காதல் நெஞ்சம் !
முகமறியா உறவிற்காக
தவமிருக்கும் மனது , முழுதாகத்
தன்னை அர்பணித்து !!
விழித்தெழுந்த உடன்
உடைந்து போன கனாக்களில்
ஓடி ஓடி சேகரிக்கும் கள்ள மனம் ,
கண்ணாளனின் வருகைகளை !
நேரங்களில் மகிழ்ச்சியைத்
தேக்கியபடி மனதோடு
உறவாட வரும், இனியவனை
நேசிக்கிறாள் இந்த பாவை
தன் நேசத்தைவிட மிக அதிகமாக..
வண்ணக் கனாக்களின் துணைகொண்டு!!

