சிலந்தி வரைந்த ஓவியங்கள்

அழகாய்
ஓர் இயந்திர பொம்மை
நடைபோட்டு வந்தது
அதன் ஆடையினில்
அழிந்தது ஒரு விலங்கினம்..!!
***
சவங்களால்
சாலை மறியல்
நசுக்கிச் சென்றன
மனிதம் இல்லா
வாகனச் சக்கரங்கள்..!!
***
ஒட்டடை
அடிக்கப் படுகின்றது வீட்டில்..
குடை கம்பிகளுக்கிடையில்
சிலந்தி
வரைந்த ஓவியங்கள்
ஒரு மழைக் காலம் வரை
சிதைக்கப் படாமல்..!!
***
ஒப்பாரி
வைக்கின்றது உலை
காவு விழுந்த கெடாவிற்கு..!!
***
அஞ்சலி செலுத்த
மலர் இல்லை
வெட்டி
வீழ்த்தப் பட்டது
முதிர்ந்த ரோஜா செடி..!!
***
கொல்லப்பட்டது யானை
அறுபது
ஆண்டுகளுக்குப் பின்
அதன் பாதை அறிந்து
நெடுஞ்சாலை கடந்தபொழுது..!!