தமிழே என் அமுதே
திங்கள் பிழிந்ததில் தேனெடுத்து வந்தே
தீந்தமிழ் ஆக்கிடவா- அன்பு
பொங்கும் இளந்தமிழ் பஞ்சணையிற் துயில்
கொள்ளெனப் பாட்டிடவா -சுற்றி
எங்கும் மலரிறைத் துன் நடை மென்மையின்
இன்ப மெழச் செய்யவா - எழில்
தங்குமென் னின்பத் தமிழ் மகளே உன்னைத்
தாயெனப் போற்றிடவா
கண்கள் சிரிக்குது புன்னகை பூத்தெழில்
காணுது மென் தமிழே - உனை
யெண்ணில் மனத்திடை இன்பநதி யெழுந்
தோடுது பொங்கியுமே - பல
வண்ண விளக்குகள் மின்னிஎரியுது
வந்து நீ நிற்கையிலே - நினைத்
தண்ணமுதே உண்ண உண்ணத் திளைக்குது
தாகத்தில் நீரெனவே
புண்படு மென்நெஞ்சு பொல்லா வலிகொண்ட
போதிலும் இன்தமிழே - நல்ல
பண்ணிசைத் தேநடம் ஆடிடப் போகுது
பக்கமில்லா தொழிந்தே - பலர்
மண்ணிலுன் மாபுகழ் பாடினும் கண்டிலேன்
மானிடனாய் வரவே - முதல்
அண்ணளவாய் வய தைந்தாமென் அன்னையும்
ஆவென்று பேர் சொல்லவே
விண்ணில் மலர்ந்திடும் பொன்னெழிற் தாரகை
வெண்ணிலவின் அருகே - நின்று
கண் சிமிட்டுமெழில் வண்ணக் கவித்தமிழ்க்
கன்னியுன் பொன்னெழிலே
தண்ணெழிற் பொய்கையில் நீரையள்ளிமுகந்
தன்னில்விடும் குளிரே - உந்தன்
பண்சுவைப் பாடலில் பட்டது மேனியும்
புல்லிற் பனிதுளி நேர்
கூவுங் குயிலுண்ணும் மாவின்பழுத்த செம்
மாங்கனி துண்டுசெய்தே - நல்ல
ஆவிற் கறந்த பால் தீயிலிட்டே பின்னை
ஆற வைத்து மெடுத்தே - நறும்
பூவின் இதழிடை தேன் கவர்ந்தேயதை
பூசி அடைகள் செய்தே - எந்தன்
நாவும் இனித்திட நல்கியுமுண்பனோ
நீ தமிழென் சுவைத்தேன்
**********