கரிசல் மண்ணில் ஒரு காவியம்14

கரிசல் மண்ணில் ஒரு காவியம்14

அத்தியாயம்14

கமலாவின் வீடு இன்று அமைதியாக இருந்தது,ஆச்சி இல்லாத வீட்டில் ஒரு பேச்சுப் பேசவும் ஆள் இல்லை.இன்று அந்த மௌனம் கலைகிறது.ஆம்!ஆச்சிக்கு பரிபூரணமாகக் குணமாகிவிட்டது.இன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புகிறாள்.அவளை ஆராத்தி எடுத்து வரவேற்க ஏற்பாடுகள் சத்தமில்லாமல் வேண்டா விருப்பாக கமலாவால் ஏனோதானோவென தயாராகின்றன.

“இவளுக்கு இது ஒண்ணுதான் கேடு”எனத் தாம்பூலத் தட்டை டமாலெனப் போட்டு தன் கோபத்தை வெளிக்காட்டுகிறாள்.நல்ல வேளை வீட்டில் யாருமில்லை.

“இன்னிக்குவரை வீடு அமைதியா இருந்தது.இப்போ அந்தக் கிழவி வாறா.இன்னும் என்ன கூத்தாகுமோ தெரியல.இந்தப் பய கல்லப் போட்டதுதாங் போட்டானே ஒரே போடா போட்டுருக்கக் கூடாது!சனியன் ஒரே அடியா ஒழிஞ்சி தொலஞ்சிருக்குமில்ல.பயந்தாங்கொள்ளிப் பாவிப்பய.இவங் எல்லாம் ஒரு ஆம்பளயின்னு அலையிறானே.ஏங் உசுர எடுக்குறதுக்குன்னு வாறா பாரு சண்டாளக் கிழவி”எனத் தனக்குள்ளேயே பேசி தனக்குத்தானே அலுத்துக்கொள்கிறாள் கமலா!

வாசலில் வாடகைக் கார் வந்து நின்றது.கார் கதவைத்திறந்து கமலாவின் அப்பா முதலில் இறங்கி,’அம்மா மெதுவா மொள்ளமா இறங்கும்மா!ஏண்டி நீதாங் கொஞ்சம் உதவி செய்யெங்”என கமலாவின் அப்பா சொன்னதும் “சரிங்க!அத்த வாங்க மெதுவா கால வச்சு மெல்ல இறங்க்குக்ங்க”எனக்கூறிகொண்டே ஆச்சியை கீழே இறக்க முயற்சிக்கிறாள் கமாலாவின் தாயார்.

“விடுடி என்ன என்னய என்ன காலில்லாத முடமுன்னு நினச்சியா?ன்னு சக்குன்னு குதித்தாள் கிழவி.அவ்வளவுதான் அய்யோ அம்மான்னு அப்படியே காலைப் பிடித்துக்கொண்டு வலியால் கதறினாள் ஆச்சி.

“ஏம்மா உனக்குக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா?அவதாங் உன்னய இறக்கிவிடுவால்ல அதுக்குள்ள உனக்கு என்ன வீம்பு?பழைய படியும் கால ஒடச்சிக்கப்போரியா?வயசுதாங் ஆச்சே ஒழியே கொஞ்சங்கூடப் புத்தியே இல்ல....புடிறின்னு மனவியின் உதவியோடு ஆச்சியை மெதுவாக கைத்தாங்கலாக வீட்டுக்குள்ளே கூட்டிக்கொண்டு போவதற்குமுன்”ஏம்மா கமலா ஆச்சிக்கு ஆராத்தி எடுத்து சூடம் கொளுத்தி சுத்திப்போட்டு அந்தத் தட்ல உள்ள தண்ணிய தெருவுல கொட்டும்மா”எனக் கூறியவுடன் கமலா முணங்கிக்கொண்டே “சரிப்பா” சூடம் கொளுத்தி ஆராத்தி எடுத்து தட்டுத்தண்ணீரை தெருவில் கொட்டினாள்.ஆச்சியை மெதுவாக அரவணைத்து வீட்டுக்குள் கூட்டிப் போய் அப்படியே கட்டிலில் உட்கார வைத்தனர்.

“ஏங் கெழவி உனக்கென்ன இன்னும் கொமறின்னு நெனப்போ!உனக்கு இன்னும் அந்த லொள்ளு போகலயே!இவா பெரிய வீராங்கன வீரலட்சுமி!வீரத்த காட்டுரீகளோ!கெழவி!”என ஆச்சியை கிண்டல் செய்தாள் கமலா.

“ஏண்டி சொல்லமாட்ட சின்னச்சிறிக்கி!எல்லாம் ஒன்னால வந்த வெனதாண்டி!நீ பேசாதடி!”என பாட்டி பழயதைக்க்கிளரினாள்.

“அய்யய்யோ வந்ததும் ஆரம்பிச்சிட்டியா!ஏம்மா கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டியா?
என கமலாவின் அப்பா தன் தாயாரை பழைய நினைவில் இருந்து பேச்சை மாற்ற அணை போட்டார்.

“கெழவிக்கு இன்னும் அந்தத் திமிறு போயிருக்கா பாரு கூனி! என கமலா தன் மனதில் எண்ணி வசை பாடினாள்.

“சரி சரி........கமலா ஆச்சிக்கு ஏதாவது குடிக்கக் குடும்மா!’’............அப்பா சொன்னதும் “ஹூம் .......”கமலா வெடுக்கென முகத்த ஒரு சுண்டு சுண்டி விறைப்பாக உள்ளே போனாள்.இதை ஆச்சி கவனிக்கிறாள் “ஹாங்............. அடியே!நீ என்ன நெனக்கிரேன்னு எனக்குத் தெரியுண்டி இந்தக் கெழவி சாகாம திரும்பி வந்துட்டாளேன்னுதான நெனக்கிற”..................ன்னு ஆச்சி தன் மனதுக்குள் பேசுகிறாள்.

அதற்குள் ஆச்சி வீட்டுக்குத் திரும்பி வந்த விஷயம் ஊருக்குத் தெரிய வருகிறது.ஒவ்வொருவராக உறவினர்கள் நலம் விசாரிப்பதற்காக வரத்தொடங்கி விட்டனர்.இதுதான் கிராமத்து மனம்.ஊரில் ஒருவீட்டில் நல்லது பொல்லது எது நடந்தாலும் வாழ்த்தவோ அல்லது ஆறுதல் கூறித் தேற்றவோ ஊரே ஒன்று கூடி வந்துவிடும்.ஆனால் நகரத்து நாகரிகம் வித்தியாசமானது.பக்கத்து வீட்டில் இழவு விழுந்தால் கூட எட்டிப்பார்க்க மாட்டார்கள்.ஒருவுக்கொருவர் பெயர் கூடத் தெரிந்துகொள்ள முயல மாட்டார்கள். கிராமம் என்பது ஒரு குடும்பம் போன்றது.ஆனால் நகரம்.அனைவருமே அனாதைகளாகவே வாழ்கிறார்கள்.அதனால்தான் பட்டப்பகலில் கூட தெருமேல் இருக்கும் வீட்டில் கூட திருடு பயம் இல்லாமல்.நடை பெறுகிறது,அடுத்தவர் வீட்டை எவரோ ஒருவர் புல்டோசர் வைத்து இடித்தால் கூட என்னென்று கேட்க மாட்டார்கள்.தெரிந்துகொள்ள முயற்சிக்கவும் மாட்டார்கள்.நகர வாழ்க்கை என்பது தனித் தனிக் குடும்ப வாழ்க்கை.ஒருவருக்கொருவர் ஒட்டாமலே வாழ்வார்கள்.ஆனால் கிராமம் ஒரு கூட்டுக்குடும்பம்போல் கூட்டுவாழ்க்கை வாழ்கிறார்கள்.இங்கு நிசமான மனித வாழ்க்கை.

ஆச்சியை நலம் விசாரிக்க கிராம சொந்தம் பந்தங்கள்.அக்கம் பக்கம் அறிந்தவர் தெரிந்தவர் வேண்டியவர் வேண்டாதவர் வரவும் போகவுமாக இருந்தார்கள்.வெறிச்சோடிக்கிடந்த வீடு ஒரே திருவிழாக்கோலமாக இருந்தது.அப்போது ராஜாவின் அம்மாவும் வாசலில் வந்து உள்ளே வராமல் தயங்கித் தயங்கி ஆச்சியை கவலை தோய்ந்த குற்ற உணர்வோடு வாடிய முகத்தோடு நின்றாள்.ஆச்சி அவளைக்கண்டு கொள்ளவே இல்லை.ஆனால் கமாலாவின் அப்பா பார்த்து எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் ,”ஏம்மா வெளியில நிக்கிற உள்ள வாம்மா!நீ என்ன செய்வ பாவம்.”எனக் கனிவோடு கூறினார்.ஆனால் ஆச்சியின் பார்வையில் நடந்ததை மறந்ததாகவோ அவள் தன் தவறை உணர்ந்ததாகவோ இல்லை.அவள் பார்வையில் வெறுப்புதான் தெரிந்தது.அதனால் ராஜாவின் தாயாரின் கால்கள் உள்ளே நுழையத் துணியவில்லை.

“பரவாயில்லை அண்ணாச்சி!அதாங் ஆச்சியைப் பாதுட்டேங்ல்ல.நாங் வாரேங் அண்ணாச்சி எனக்கூறி தன் இரு கைகள் கூப்பி வணங்கி தன் கண்களைத் தன் முந்தானையால் துடைத்துக்கொண்டு தலைதாழ்ந்து நகர்ந்தாள்.அப்போது பள்ளித் தலைமை ஆசிரியர் உள்ளே நுழைகிறார்.

(தொடரும்)
கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (27-Feb-14, 10:53 pm)
பார்வை : 185

மேலே