நாய் ஜென்மங்களே

வெற்று காகிதங்களை படிக்க
ஊரெல்லாம் காம வாசகர்களை
பெற்று போட்டு போய்விட்டானா அந்த
காம தேவன்.......?

ஆளாளப்பட்ட ஆண்டவனே
ஐந்தே நொடியில்
மூழ்கித்தான் போனான்
மோகினியிடம்...!

ஆறறிவு ஜந்துக்களிடம்
எதை நான்
எதிர்பார்க்க......!

நாணத்தோடு வா
நான்கு சுவர்களுக்குள்
சந்திப்போம்....
என்ற காலம் மாறி,

ஒரு பெண் நாயின்
பின்னால் பாய்ந்து ஓடும்
பத்து தெரு நாய்கள்
போல........

அது சரி
நாய் ஜென்மங்களுக்கு
நடுத்தெரு ஏது...?
நான்கு சுவர்கள்தான் ஏது........?

காம நோய்கொண்ட
ஈனபிறவிகள்
ஈன்றெடுத்த குப்பைகள்
குப்பைகளோடு குப்பைகளாக
குப்பை தொட்டியில்..........!

உழைப்பை விற்று
பிழைப்பு நடத்தாமல்
உடம்பை விற்று பிழைப்பு
நடத்தும் "ச்ச்சீ"
சொல்லின் சொந்தக்காரிகள்......!

கண்ணால் பார்த்தாலே
நாவில் எச்சில் ஊரும்
ஆச்சி மாங்காய் ஊறுகாய்
அன்றோ பெண்கள்.......!

கணுக்கால் தெரிந்தால் கூட
கற்புக்கு உறுதியில்லை
என்றான பின்பு.....
கழற்றி போட்டு
நிற்பது பற்றி
நீர் போடும் பட்டி மன்றங்கள்
போதுமையா......!

வெறிகள் அரங்கேறி
நர்த்தனம் கொண்டிருக்க
பெண்மை ஓலமிட்டு
ஒப்பாரி வைக்கையில்,

கண்ணிருந்தும் குருடனாய்
காதிருந்தும் செவிடனாய்
மனிதம் மரணித்திருக்கையில்
நீரெல்லாம் தலைப்பு செய்தி
பார்த்து கொண்டிருந்தீரோ.....!

காற்றுக்கு கூட
மூச்சு நின்றிருக்கும்
பாவம் வெறும் சதைப்பிண்டம்
என்ன செய்வாள் அவள்.......!
வெறும் பெண்ணாயிற்றே........

காடு, மேடெல்லாம்
கந்தல் சேலைகள்,
புல்,புதரெல்லாம்
அடையாளம் தெரியாத
பிணங்கள்........!

அப்பப்பப்பப்பா........
இன்னும் எத்தனை
காலத்திற்குத்தான் இப்படியோ.......!

சொல்லம்புகள் எல்லாம்.....
சின்ன சின்ன சிராய்ப்புகள்
தான் என்றாலும்,
என்
உள்ளத்தில் எழுந்ததென்னவோ
பெரிய பள்ளம்தான்........!

யார் யாரோ
நடந்து வந்த அந்த
நடை பாதையில்....,
வக்கற்ற நமக்கெல்லாம்
நல்ல காலம் நடந்து
வாராதா...............?

எழுதியவர் : வித்யா (27-Feb-14, 11:20 pm)
பார்வை : 5673

மேலே