மரணக் காடுகள் - கே-எஸ்-கலை

எண்ணிலா
பழங்களையும்
பலங்களையும்
தனக்குள் வைத்திருந்த
மனித வித்துக்கள்
நசுக்கிப் புதைக்கப் பட்ட
நச்சுப் புரட்சியின் வடுக்களைத்
தாங்கி நிற்கிறது - இந்த
நாசகார மரணக் காடுகள் !

இந்தக் காட்டின்
ஒவ்வொரு அடியிலும்
பிறக்கும் புற்கள் எல்லாம்
ஒருதுளி ரத்தமேனும்
அருந்தாமல் பிறக்காது !

சிவப்பு மல்லிகைகள்
பறிக்க வாருங்கள் இந்த
மரணக் காட்டின்
குருதியுண்ட கொடிகளில்...

நாசித் துவாரங்கள் வழியே
செல்லும் குருதி வாடை
சொல்லும் மீதிக் கதை !

எல்லா தேசங்களிலும்
காம வெறிதான்
கற்பழிப்பு செய்திருக்கும் !

வந்துப் பாருங்கள்
இந்தக் காடுகளை...

இனவெறி கற்பழித்த
பூக்களின் ரத்தம்
இங்கே - இன்னும் கூட
காயாமலிருக்கும் !

சிரிக்கும் நரிகள்
பெருத்த கழுகுகள்
கொழுத்த ஓநாய்கள்
அலையும் திறந்தவெளி
மிருகச் சாலை....

கொஞ்சம்
உற்றுப் பாருங்கள்
மனிதம் செத்த எச்சங்கள்
சிதறிக் கிடக்கும் !

இவை....
மானுடர் புதைத்து
எலும்புக் கூடுகளை
அறுவடைச் செய்யும்
மயான வயல்கள் !
மரணக் காடுகள் !
----------------------------------
இந்த தலைப்பு தோழி புலமியால் தரப்பட்டது !
நன்றி புலம்ஸ்.....

எழுதியவர் : கே.எஸ்.கலை (1-Mar-14, 1:59 am)
பார்வை : 317

மேலே