ஆசிரியருக்காய் ஒரு மடல்

கவி வரிகளில்லை உங்களை
அலங்கரிக்கவே - இன்று
புது வரிகள் தேடி
அலைகின்றேன் - இந்த
புவி மீதில் உங்களுக்காய்
'பூ' மழை பொழிவிக்கவே!

கண்டிப்புக்களோடு கற்றுத்தந்தவையும்,
கனிவோடு விட்டுத்தந்தவையும் - இன்று
கண் முன்னே கானலாய்,...
பல நேரம் ஆசானாகவும்,
சில நேரம் நண்பர்களாகவும் - நீங்கள்
மணிக்கணக்காய் உறவாடியதை
மாற்றிப் போகும் இந்த நொடிதனில்!

பாலையிலும் சோலை கண்டேன்,
நீங்கள் கஷ்டங்களையும் - எமக்காய்
இஷ்டங்களாகக் கொண்டபோது!
அமாவாசையிலும் பௌர்ணமி கண்டேன்,
அறிவுரைகளால் - நமக்கு
புது அவதாரம் தந்த போது!

ஒரு சொல்லில் உங்களை
அலங்கரிக்கிறேன்,...
'மெழுகுவர்த்தி' என்றே,
நாம் ஒளி பெற நீங்கள் உருகியதால்!
ஒரு வரியில் உங்களை
வாழ்த்துகிறேன்,...
'வளம் பெற வேண்டும் உங்கள் வாழ்வு'
வரும் நாட்களோடு வசந்தங்களாகவே!

கல்விக் கடலினிலே - நம்
ஓடங்கள் பயணிக்கவே
வேடங்கள் பல பூண்டீர்,
நாம் அறியாமலே - உம்
வாழ்வினிலே!

கடைசித் தருவாயிலே
கண்ணீரிடையே காட்சியாய் - நாம்
கண்மூடித்தனமாய் செய்திட்ட
சின்னஞ்சிறு தவறுகளும்!
காலம் காற்றாகத்தான் பறக்கிறது!...
நம் கல்லாகிக் கிடந்த நெஞ்சங்கள்
கரையும் வேளைதனில் - ஏனோ,
காலங்கள் பழகவில்லையே
கல்லாகிக் கிடக்க!

இரண்டரை வருடமாய்
இனிமையாய் மீட்டிய வீணையாய்
இந்த கல்லூரி வாழ்வு
இனி என்றும் - நம்முள்
இளமையோடு உலாவரும்!
இறந்துவிடப் போகும் - இந்த
இறுதி நாட்களிலே - நம்
இதயக் கோயில்களில்
இரத்தப் பூஜைகள் ஆரம்பம்,
இனிவரும் நாட்கள் - உங்களை
இனிமையாய் ஆதரிக்க வேண்டியே!

நம் விளையாட்டு பருவமதில்
விடிவெள்ளியாய் உதித்தவரே...
விடைபெறும் நேரம்தனில்,
விழி நீர் தவிர வேறில்லை
விடைகளாய் நம்மிடம்!
இன்று 'உமக்காய் ஒரு மடல்'
தடைகளின்றி தொடர வேண்டும்
தங்களது இடைவிடாத சொந்தம்
நிஜங்களின் நிழலாகவே!

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (1-Mar-14, 8:33 pm)
பார்வை : 3795

மேலே