இந்த நிலை மாறுமோ
மனிதரை மனிதர் துதிப்பதென்பது மரபாயிற்று
ஏலம் போட்டு மானம் விற்பது இயல்பாயிற்று.
கல்வியின் பயனும் கற்பதற்கில்லை என்றாயிற்று
காசு சேர்க்க் குறுக்கு வழியும் சரியாயிற்று.
பண்பும் பாசமும் அவசியமில்லை என்றாயிற்று
பணமே வாழ்க்கையின் குறியாயிற்று.
ஒழுக்க முறைகள் தலைகீழாகத் திசைமாறிற்று
வாழ்க்கை இங்கே பாழும் குழியில் வீழ்ந்தாயிற்று.
நல்லவர் வார்த்தை விழலுக்கிறைத்த நீராயிற்று
நாட்டைப் பற்றிய கவலை மறந்து நாளாயிற்று.
ஓட்டுக்களுக்கு நோட்டை நீட்டும் முறையாயிற்று
தொகுதிகள் கேட்டுக் கொள்கைகள் எல்லாம் விலை போயிற்று.
எதுவும் நடக்கும் என்பதிங்கே அரசியலாயிற்று
அதனை நாமும் ஒத்துக்கொள்வது அவசியமாயிற்று.
நினைத்துப் பார்த்தால் நெஞ்சம் வேகும் தணலாயிற்று
இந்த நிலை மாறுமென்பது கனவாயிற்று.