தேர்தல் வரும் காலமப்பா

தேர்தல் வரும் காலமப்பா
இது தேர்தல் வரும் காலமப்பா
நம்ம தேவைக்கான காலமப்பா..!

வீடு தேடியும் வருவாங்க ,
விருந்துண்ண அழைப்பாங்க ,
விலையுயர்ந்த சரக்குகளை
விடாமக் கொடுப்பாங்க.

சாதிமதம் இல்லையென்று
சத்தியமே செய்வாங்க ,
சகலரும் ஒண்ணுன்னு
சமதர்மம் புரிவாங்க.

கையால கும்பிட்டு காலுல விழுவாங்க,
கற்கண்டுப் பேச்சால கதம்ப மாலை கோர்பாங்க,
சிறுவாணித் தண்ணீரும் சில்லறையாய் விப்பாங்க,
சிட்டாட்டம் பறக்க சிறு வண்டி தருவாங்க,

சாக்கடை சுத்தமென்று சாராயம் விடுவாங்க,
சாதனைகள் புரிந்தோமேன்று
சரவெடியை வெடிப்பாங்க ,
செத்தவனைக் கூட்டிவந்து
சீட்டு எழுதிக் கொடுப்பாங்க .

காடை கௌதாரி காசு பணம் கொடுப்பாங்க,
கலர் கலரா சட்டை துணி கசங்காமக் கொடுப்பாங்க,
காந்தி நோட்டுகளை காட்டிக் காட்டி,
கட்சிக் கொடி பிடிப்பாங்க,

கவலைகள் ஓட்டுவதாய் கரடிகள் விடுவாங்க,
தேசிய கீதத்தை தெளிவாய்ப் படிப்பாங்க
தேசத்தின் வரை படத்தை தேடியே புதைப்பாங்க,

கத்தி (க்) காட்டி கடையில் ஏறி ,
கத்தை நோட்டு பார்பாங்க,
கடைக்காரன் கைவிரிச்சால்
கழுத்துலயும் கயிறு போடுவாங்க.

கறந்த நோட்டுக்களை அள்ளி அள்ளி
தெருவில் விடுவாங்க ,
போதை தெளியு முன்னே
விலையில்லா வாக்குகளை
விளக்கி விப்பாங்க.

நிதியைத் தந்து,தந்து நீதி பெறப் பாப்பாங்க,
நீரும் நெருப்பும் இணைந்ததுன்னு
நவரசம் பேசுவாங்க.
சீக்கிரமா மைதடவி,
முகமெல்லாம் கரி
தெரியாமப் பூசுவாங்க.

தல கீழாய் நின்னு தப்பிலாம ஜெயிச்சாங்க.
வாகை சூடினாங்க,வானளவு உயர்ந்தாங்க,
கொடுத்த வாக்குகளை கொடியில் உலர்தினாங்க.

கொள்கையை விற்றுவிட்டு
கோடியில் புரண்டாங்க,
மக்களையும் வெறுத்துவிட்டு
மஞ்சத்தில் புரண்டாங்க,

கட்சியையும் மாற்றிவிட்டு,
காட்சிகளை மாத்துறாங்க.
உயரத்தில் உட்கார்ந்து
அடிமரத்தை வெட்டுறாங்க.

பொய் பொய்யாய் வாக்களித்து,
மெய்யான வாக்குகளை அனாதை ஆக்குறாங்க.
நடந்ததெல்லாம் மறக்கடித்து,
நடிப்பா நடிக்கிறாங்க,

இலவசத்தை அள்ளித்தந்து
நம் தன்மானம் சுடுறாங்க.
நாகரிகமா நிறம் மாறி
மீண்டும் வருகிறாங்க,

சிரமம் பாக்காம விரல் எடுத்து உதவுங்களேன்.
இப்ப நாம கரம் கொடுத்து உதவினாக்க,
கை மேல பலனுண்டு,
முகத்துக்கு கரியுமுண்டு ,

வயித்துக்கு உறுதியாக ,உண்டு
சாராயம் பிரியாணி
அன்று மட்டும் உண்டு .உண்டு. உண்டு.

பணம் காசு இல்லாற்கு பாதை ஏதடா ?
பணம் மட்டும் பெற்று விட்டால்,
உன் பாதை முழுதும் பூவடா!

எழுதியவர் : கொங்குதும்பி (2-Mar-14, 8:53 pm)
பார்வை : 284

மேலே