கானல் கனவு
எண்ணெய் படாத தலை...
எண்ணங்கள் சிதறாத மனசு...
காத்திருக்கிறோம்....
கனவுகளுக்கும் ... ஒரு வாய்
உணவுகளுக்கும்...
உடையில்லை எனும் கவலையில்லை..
உறங்க இடமில்லை எனும் கவலையில்லை.
உருக்குழைத்து விடுவார்களோ
எனும் கவலையுண்டு.....
ஏட்டறிவு இல்லை.. அந்த
எட்டாகனிக்கு ஆசையுமில்லை...
எட்டிப்பார்க்கிறேன்... விடுதலைக்கு
இல்லை....
என் கனவுகளுக்கும்
எனக்கான ஒரு வாய் உணவிற்க்கும்...
ஏக்கமாய் பார்க்கிறேன்...
முள்வேலிகளில் அடைகின்றனர்...
முட்களாய் தந்தால் என்ன...?
முட்களை கீரிடம் ஆக்குவேன்...
நான் ராணி... எனக்குள்
நர்த்தனம் ஆடிட ஆசை
குண்டு சத்தங்களின் நட்டுவாங்கம்,
ஆர்மிக்காரன் ஜதி பாட
ஆடியிருக்கிறேன்
ஆட்டம் என் கனவு... ஒருமுறையாவது
ஆட்டக் கடவுள் நடராசர் முன்பு
ஆடிட வேண்டும்...
என் கனவு.....
தூரத்தே குண்டு சத்தம்...
துவளும் கால்கள் அனிச்சையாய்...
வெறித்துப் பார்க்கிறேன்...
கனவுகள் கானல் நீராய்
கலையும் முன்பே நான்
ஆடவேண்டும்..... நீங்கள்
வயிறு நிரம்ப உணவளிக்க
போவதில்லை.....
அடேய் .....
ஆர்மிக்காரா உன் குரலை
உயர்த்து...
நான் ஆட வேண்டும்...
நாலுப்புறமும் குண்டுவீச்சினை
அதிகப்படுத்து... நான்
ஆடவேண்டும்....
என் மக்கள்...
எங்கள் சுடுகாடு...
என் ஆழி ஆட்டம்...
என் கனவை நிறைவேற்று.....
அடேய் ஆர்மிக்காரா.....