இனி ஒரு விதி செய்வோம்
வண்ண வானவில்லை
வர்ணித்தது இனிபோதும் – நம்
பெண்ணின உரிமைகாக்கும்
பெருமைதனை பாடிடுவீர்....
கருங்குயில்கள் குரல்மெச்சி
கவிதந்தது இனிபோதும் – நம்
காலமெல்லாம் சாதிஒழிய
கருத்தினையும் பாடிடுவீர்....
சேனை, செல்வந்தர்
சிறப்புசொன்னது இனிபோதும் – நாம்
சிறார்களை தொழில்படுத்தும்
சிந்தனையை சாடிடுவீர்....
ஓடும்நதியழகை ஒய்யாரவுவமையிலே
பாடியது இனிபோதும்- நம்மில்
பேடிசிலர்செய்யும் மூடசெயல்ஒழியும்
மேன்மைதனை பாடிடுவீர்....
வானிடத்து மின்னல்களை
வகைபாடியது இனிபோதும்- நம்
மானிடமே மலமள்ளும்
மடமைபோக்க பாடிடுவீர்...
பசும்புல்லில் பனித்துளியை
பாராட்டியது இனிபோதும் – நம்மை
பாழ்படுத்தும் மதுஅரக்கர்
பழித்துநீவிர் பாடிடுவீர்....
பூக்களில் பூகம்பம்தேடி
புகழ்ந்தது இனிபோதும் –
வாக்குகளை வணிகமாக்கும்
போக்குதனை சாடிடுவீர்...
சிவகவி..