வெண் புறா

இரு செவியில் செய்தி ஒன்று
இடியெனவே ஒலித்ததிங்கே

இதயக்கோட்டை இடிபடவே
கைவளைகள் நொறுக்குதிங்கே

வண்ணங்கள் கரைந்துவிட
வெண்திரைதான் மீதமிங்கே

நீர்திரளும் விழிகளிலே
நித்திரையும் போனதிங்கே

ஊளையிட் டோர் நரிக்கூட்டம்
இரவில் கதவு தட்டுதிங்கே

வட்டமிடும் கழுகெனவே
சதை ருசிக்கப் பார்க்குதிங்கே

பைங் கிளியை சாட்டை கொண்டு
பம்பரமாய்ச் சுற்றுதிங்கே

காவல் - வண்டில்லா மலரெனவே
மோப்பமுந்தான் பிடிக்குதிங்கே

சுட்டெரிக்கும் வார்த்தைகளால்
மனதை புண்ணாய் ஆக்குதிங்கே

வேசியென்ற பட்டம் தந்து
சேற்றை அள்ளி பூசுதிங்கே

அமைதி காக்கும் வெண் புறாவை
அடிமைத் தீயில் வாட்டுதிங்கே

ஆணிவேராம் அன்பறுத்து கீழே
தள்ளி சாய்க்குதிங்கே

கூடறுந்து விழுந்த குஞ்சை
கால் இடறிக் கொல்லுதிங்கே

காதறுந்த ஊசியாக்கி
குப்பையிலே வீசுதிங்கே

தாலி ஒரு வேலியென்ற
உண்மை - நிலை ஆனதிங்கே

வேலி இல்லாப் பயிரெனவே
காவலின்றி வாடும் கைம்பெண்ணே

எழுதியவர் : சண்முகானந்தம் (4-Mar-14, 7:06 pm)
பார்வை : 451

மேலே