உன் விரல் கூறும் என் நிலை

கண்ண தொடைக்கையில்
ஒன்ன நெனைக்கையில்
நெஞ்சு பதைக்கிது
மச்சான்

என் பிஞ்சு மனசில
அன்பு வெதயவே
ஆழப் பதியவே
வச்சான்

செந்நெல் வயலுந்தான்
செங்கல் வீடாச்சு
வித்து வந்த சொற்பகாசு
சேத்து தண்ணி போலாச்சு

பரதேசம் போகையிலே
பால் மாடு வாங்கி விட்ட
அதுகளுந்தான் மேய இங்க
சுவரொட்டி போதவில்ல

எழுத்தில் இருந்ததாலே
இக்கடிதம் தப்பியாச்சு
காற்றில் பறந்ததெல்லாம்
பசு வாய்க்கு தீனியாச்சு

விவசாயம் காணவில்ல
வேலையிங்கு ஏதுமில்ல
காச்ச கையி மாறிபோச்சு
ஒடம்பு கொஞ்சம் பூசிபோச்சு

வெலச்சலுக்கு வெலயில்ல
கடையில் கேட்டா தங்கம் போல
இடைதரகின் பகல் கொள்ள
தீராத நாச வேல

வீடு எங்கும் மொளச்சாச்சு
புது முகங்கள் பலவாச்சு
இளசெல்லாம் பறந்தாச்சு
முது முகங்கள் மீதமாச்சு

நம்
கடமை நெறைவாச்சு
தங்கைக்கு மணமாச்சு
தம்பிக்கு பொழப்பாச்சு
இறகுகள் மொளச்சாச்சு
உறவுகள் பறந்தாச்சு
உன் - உசிரு மட்டும்
இங்கே தனியாச்சு

அன்பு வெதையுந்தான்
ஆல மரமாச்சு
விழுது இல்லாம
சாயும் நெலையாச்சு

என்
நெலமை எடுத்து சொல்ல
கடிதம் போதவில்ல
உன் வெரல ருசி பாரு
மேல சொல்ல தேவ இல்ல

----------------------------------------------------------------------------------
(குறிப்பு: அவன் விரலை சுவை பார்க்க உவர்பாக இருந்தது)

எழுதியவர் : சண்முகானந்தம் (4-Mar-14, 6:26 pm)
பார்வை : 218

மேலே