நாங்கள்தான் துருப்பிடித்த அரிவாள்கள் பேசுகிறோம்…

> விவசாயப் பெருங்குடி மக்களே…
எங்கள் குரல்
உங்கள்
செவித்துளைக்கிறதா இல்லையா?
உம் வியர்வையில் நனைந்த
எம் கைப்பிடி வாசம்
நாசி தொடுகிறதா இல்லையா?
உம் கைகளில் இருக்கும்
ஆறிய காயங்களாவது
எம்மை ஞாபகபடுத்துகிறதா இல்லையா?

> நாங்கள்தான்
துருப்பிடித்த கதிர் அறுக்கும் அரிவாள்(ட்)கள் பேசுகிறோம்…!

> சாகுபடி நிலம் வைத்திருக்கும்
நீங்களெல்லாம்
”விவசாயிகள்” என்று
கூறிகொள்ள வேண்டாம்…
தயவு கூர்ந்து
”விவசாய முதலாளிகள்” என்று
கூறுங்கள்..

> என்று எம்
ஏர்பூட்டிய மாடுகளையெல்லாம்
விரட்டியடித்து
உள்ளே புகுந்த
டிராக்டர்கள்(TRACTORS) சிரித்தனவோ
அன்று விழுந்தது ஒரு அடி
விவசாயிகளின் முதுகில்
பளீரென்று…

> இயற்கை உரத்தை
புறந்தள்ளி
செயற்கை உரத்தை
கொட்டிக் குவித்த நாள்முதல்
விழுந்தது இரண்டாம் அடி
பளீர் பளீர்..

> விதை நெல்லை
சேகரித்த காலம் போய்
விலைக்கு வாங்கும்
காலம் தொட்டதும்
விழுந்தது மூன்றாம் அடி
பளீர் பளீர் பளீர்…

> அது போக
நடவு நட்ட எம் பெண்களையெல்லம்
கரையேற்றிய
நடவு இயந்திரம் பல் இளித்தபோது
விழுந்தது பெரும் அடி
பளீர் பளீர்
பளீர் பளீர்…

> இன்று
அறுவடை இயந்திரமென்னும்
அரக்கன்
ஒட்டுமொத்த விவசாயிகளின்
வயிற்றில் அடிக்கிறன்..
வலி பொறுக்கவில்லை…
பசி பொறுக்கவில்லை…
தாகம் பொறுக்கவில்லை…
வேதனை பொறுக்கவில்லை…

> கழனியில் அறுத்து,
களத்துமேட்டில்
கதிரடிக்கும் வேளையில்
களைப்பாறிய நாங்கள்
இன்று
கருத்துபோய் கிடக்கின்றோம்…
கழனி ரியல் எஸ்டேட்-ஆக கிடக்கிறது…
களம் வெறிச்சோடிக் கிடக்கிறது…

> நவீன விவசாயம்
முன்னேற்றம்தான்…
ஆனால்
விவசாயிகள் முன்னேறவில்லை…
முதலாளித்துவமே ஓங்குகிறது…
என்று பேசிக்கொண்டே…

> நாங்கள்தான்
துருப்பிடித்த கதிர் அறுக்கும் அரிவாள்(ட்)கள் பேசுகிறோம்…!

எழுதியவர் : செல்ல.கார்த்திக் (6-Mar-14, 11:58 am)
பார்வை : 172

மேலே