ஓர் உழவனின் இறுதி விதை

உங்களுக்கு தெரியாதுங்க,

பொட்டுத் தாலி அடகு வச்சு,
எட்டு வட்டி கடன வாங்கி,
விதை தூவி வெளஞ்சதில்ல- எங்க
சதை தூவி வெளஞ்ச துங்க.

மாடு பூட்டி ஏரு ஓட்டி,
காடு நிறய கழனி வெட்ட,
மானம் பேஞ்சு வருசமாச்சு - உழுத
மாடும் கூட விலைக்கு போச்சு.

பள்ளிப் பணத்த புடிச்சு வச்சு,
பம்பு செட்டு மோட்டார் வாங்கி,
வரப்பு வச்சு வெளஞ்சதில்ல - பையன்
படிப்பு வித்து வெளஞ்ச துங்க.

கரைச்சு வச்ச கேப்பைக்கூழு,
கனவுல மட்டும் நெல்லுச்சோறு,
கண்ணீரால பாசனம் செஞ்சோம் - காஞ்ச
வயிரத் தாங்க உரமா போட்டோம்.

கம்மாய் கட்டி கனவ தேக்கி,
வேர்வ தண்ணி ஆறா ஊத்தி,
வரப்பு மறைய, வெளஞ்சது பயிரு,
அறுப்பு முடிய, வளைஞ்சது உயிரு.

ஆசயோட அனுப்புனோங்க ஆலைக்கு - கதிரு
காசா மாறி வருமுன்னு நாளைக்கு.
கூசாம குறைச்சி கொடுக்குறாங்க - விலைய
பேசாம வாங்கிப் போங்குறாங்க.

வம்பாடுபட்டு இது விளைஞ்ச மகசூலு,
வட்டிபோக மிஞ்சுனது ஒரே ஒரு தாளு,
பச்சபுள்ள பசிக்குகூட இல்லீங்க பாலு - உழச்ச
பாவத்துக்கு பரிசாங்க இந்த பாலிடாலு?

ஊரு திங்க உழைக்கிறோங்க நாங்க - ஆனா
நாங்க திங்க சோறு இல்லையேங்க,
எங்க ஓலம் கேட்டா ஒதுங்கி ஓடுறீங்க,
ஓசி டிவிக்குத்தான் ஓட்டு போடுறீங்க.

ஏரு ஓடி விளைஞ்ச காடு எல்லாம் - இப்ப
காரு ஒட ரோடா மாறுதுங்க.
வேரோட விவசாயி அழிஞ்சா - குழம்பா
தாரையா ஊத்தி தின்னுவீங்க?

மழை தந்த மரத்தையெல்லாம் வெட்டி - மனையா
மாத்தீட்டீங்க முள்ளுவேலி கட்டி - பச்சை
வனத்தையெல்லாம் ப்ளாட்டுகளா மாத்தி - அதுல
வளக்குறீங்க போன்சாயி தொட்டி.

உழவனால உயர்ந்தது இந்த நாடு - உசுரு
உளுத்து போயி கிடக்குதெங்க கூடு.
நட்ட நெல்லுக்கு அலையுதெங்க பாடு
பட்ட மரமாத்தான் போனதெங்க வீடு.

ரத்தத்தை வேர்வையாக்கி விளைஞ்சதெல்லாம் வறுமை,
செத்த பிணத்துக்கும் நடக்காதிந்த கொடுமை.
இன்றோடு மாறவேணும் கேடுகெட்ட நிலைமை- அதற்கு
உழவனுக்கு வேணும் விலைசொல்லும் உரிமை.

எழுதியவர் : ஈ.ரா. (6-Mar-14, 4:28 pm)
பார்வை : 395

மேலே